கட்சி மற்றும் ஆட்சியில் தனக்கான இடத்தை பெற முடிவு செய்து விட்டார் ஓபிஎஸ், அதற்கான வேலைகளை அவர் தொடங்கி விட்டார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் இவை தான்.. இபிஎஸ் தரப்புடன் சமாதானம் செய்து துணை முதல்வர் பதவி வாங்கியதில் இருந்து தனக்கு சரியாக மரியாதை இல்லை என்றே கருதி வருகிறார் ஓபிஎஸ். தற்போது தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்து விட்டார் இபிஎஸ் என தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் கூற ஆரம்பித்திருக்கிறார்.
காரணம் ஒரே மத்திய அமைச்சர் என்கிற போது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத்தின் பெயரை இபிஎஸ் கூறியிருக்க வேண்டும். ஆனால் வைத்தியலிங்கத்தை தட்டி விட்டு, தம்பிதுரை மற்றும் தங்கமணி ஆகியோரை வைத்து யாருக்கும் அமைச்சர் பதவி வேண்டாம் என பாஜ மேலிடத்தில் இருவரையும் பேச வைத்தது இபிஎஸ் தான் என ஓபிஎஸ்சுக்கு தெரிந்து விட்டது.
இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அழைத்து பேசியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தனது முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எம்எல்ஏக்களை மட்டும் அழைத்து சமாதானம் செய்ததில் ஓபிஎஸ்சுக்கு உடன்பாடு இல்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதே நிலை நீடித்தால் கட்சி மிகவும் மோசமான நிலைக்கு வந்து விடும். எனவே கட்சியை கைப்பற்ற முடிவு செய்து விட்டாராம் ஓபிஎஸ். மேலும் தனக்கு பெரும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் தோல்வியை பயன்படுத்த அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டாராம் அவர்.
இதன் முதற்கட்டமாகத்தான் தனது ஆதரவாளர்களான அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு இன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது குறித்த தகவல் இபிஎஸ் உள்ளிட்ட யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து அடுத்த கட்டமாக உடல்நலக்குறைவால் ஒதுங்கியிருக்கும் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனை சந்தித்து தனியாக 30 நிமிடம் பேசியிருக்கிறார் ஓபிஎஸ். அப்போது நான் தர்மயுத்தம் 2.o க்கு ரெடியாகியிருக்கிறேன் என்பதையும் சொல்லி விட்டு வந்திருக்கிறார். அடுத்தடுத்த வாரங்களில் அவரது செயல்பாடுகளை நீங்களே பார்ப்பீர்கள் என்கின்றனர் ஓபிஎஸ் ஆட்கள்.

Leave a Reply