இன்று பிரான்சில் ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி

இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பிரான்ஸ் நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறின. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டி ரபேல் விமான நிறுவனத்தின் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் புறநகர் செயிண்ட் கிளவுடில் அமைந்து உள்ள ரபேல் போர் விமான திட்ட அலுவலகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடுவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த அலுவலகத்தில் இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அந்தஸ்து அதிகாரி தலைமையிலான குழு இருந்து, ரபேல் போர் விமான தயாரிப்பை மேற்பார்வையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *