Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Robo Chef - The World’s First & Only Fully Automated Robotic Kitchen

முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ரோபோசெஃப்

Posted on November 1, 2019

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். அந்த அறை, பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது. பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் திகழும் இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து இன்றளவிலும் போராடி வருகிறார்கள். அவர்கள் மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறிகளை வெட்டும் கருவி, இன்டக்ஷன் ஸ்டவ் என தனித்தனியாக கருவிகளைக் கண்டுபிடித்து பெண்களுக்கு உதவி செய்தாலும், அவர்கள் சமையலறையில் செலவிடும் நேரத்தைக் குறைக்க முடிவதில்லை.

வீட்டுச் சாப்பிட்டிற்காக ஏங்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிட்டாலும் அதில் கிடைக்கும் சுவை, நாம் எதிர்பார்ப்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது.

சுவையாக இருக்கிறது என்று நம்பி பிரபலமான உணவகங்களுக்கு சென்றால், அங்கு ஒரு நாள் கிடைக்கும் சுவையான உணவுப் பொருள், மறுமுறை அதே சுவையுடன் கிடைப்பதில்லை. இதற்காக அங்குள்ள சமையல் கலைஞர்களை குறைச்சொல்வது நேரவிரயம் தான்.

சுப நிகழ்வுகளுக்கு விருந்தினர்களை அழைத்து, அனைவருக்கும் சுவையான உணவு வகைகளை பரிமாற திட்டமிட்டு, பிரபலமான சமையல் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்கிறோம். ஆனால் அவர்களின் கைப்பக்குவம் அன்றைய தினம் எதிர்பார்த்ததைப் போல் அமையவில்லை. இந்நிலையில் உடனடியாக ஒரே நேரத்தில் அனைவருக்கும் சுவையான உணவு வகைகளை தயார் செய்யவேண்டும் என்றால்…அது நடைமுறையில் சாத்தியமில்லை என்ற போக்கு தான் நீடிக்கிறது.

இந்நிலையில் மக்கள், சுவையாகவும், ஆரோக்கியமாகவும், சுகாதாரமுறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்றும், அவை விரைவில் கிடைக்கவேண்டும் என்றும், சுவை என்பது ஒரே அளவில் எப்போதும் மாறாததாக இருக்கவேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.

இந்த எண்ணத்தை செயலாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்படுவது தான் ‘ரோபோசெஃப்’. இந்தியாவில் முதல் சமைக்கும் எந்திர மனிதன்.

இது குறித்து இந்ந இயந்திர மனிதனை வடிவமைத்த குழுவின் தலைவரும், ரோபோசெஃப் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி பேசுகையில்,“மென்பொருள் நிபுணராக நான் பதினோரு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, உணவுத்துறையில் ஏதேனும் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, இந்த ரோபோசெஃப் என்ற இயந்திர மனிதனை வடிவமைத்திருக்கிறோம். இந்த இயந்திர மனிதன் அறுநூறு வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். அதில் இந்தியன், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து நாட்டு உணவுவகைகள் என பல நாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம். இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்து, விநியோகிக்கிறோம்.

நாம் பசியின் போதோ அல்லது பயணங்களின் போதோ சாப்பிடவேண்டும் என்று எண்ணி, பிரபலமான உணவகங்களில் சாப்பிடச் சென்றாலும், அங்கு உணவின் தர நிலை என்பது எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. இன்று ஏராளமானவர்கள் சமையலுக்கான நேரத்தை ஒதுக்குவதை விரும்புவதில்லை. சமையல் என்பது அதிக நேர உழைப்பை கேட்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டின் இல்லத்தரசி சமையலுக்காக தினமும் குறைந்தபட்சம் ஆறு மணிநேரத்தை ஒதுக்கவேண்டியதிருக்கிறது.

உணவகங்களில் காலையில் உணவு பரிமாறவேண்டும் என்றால் அங்குள்ள ஊழியர்கள் அதிகாலை மூன்று மணயளவில் எழுந்து, காலை உணவை தயாரிக்கவேண்டியதிருக்கும். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பணியை தொடர்ந்து செய்வதால், சலிப்பு ஏற்படுகிறது. அது சுவையிலும் எதிரொலிக்கிறது. இதனால் காலை உணவிற்கான சுவையை எதிர்பார்த்து வரும் பயனாளர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. இது தான் யதார்த்தம். இதனை மாற்றியமைக்கவேண்டும் என்றும், ஒரே மாதிரியான சுவையுடன் அனைவருக்கும் , அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைக்க வேண்டும் என்பதும், அதனை முழுவதும் தானியங்கி அடிப்படையில் தயாராகவேண்டும் என்பதும் தான் ரேபோ செஃப்பின் வடிவமைப்பின் உந்துதலாக இருந்தது. மனிதர்களின் உதவியின்றி இயந்திரத்தால் எவ்வளவு தூரம் சமையலில் ஈடுபடுத்த முடியும் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்தோம். வடிவமைத்த பின்னர் சமையலுக்கு செலவிடும் நேரம் குறைந்திருப்பதை உறுதி செய்தோம். ஒரே மாதிரியான சுவையை அனைத்து விதமான உணவு வகைகளிலும் அளிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தினோம். உதாரணத்திற்கு மதுரை சிக்கன் பிரியாணியை எங்களுடைய ரோபோ செஃப் சமைத்தால், மதுரை, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் வேறு எங்கு சுவைத்தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும். இது ரோபோசெஃபின் மிகப்பெரும் பலன் என்று கூறலாம்.

ஆறாண்டிற்கு முன்னர் எங்களுடைய குழுவினர் உணவுத்துறையில் ஈடுபட திட்டமிட்டோம். நாங்கள் நடத்திவரும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரோபோடீக் பிரிவு எனப்படும் இயந்திர மனிதனை உற்பத்தி செய்யும் பிரிவும் உண்டு. நாங்கள் இயந்திரவியல் துறையில் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். முப்பரிமாண அச்சு இயந்திர கருவியை முழுமையாக தானியங்கி முறையில் வடிவமைத்திருக்கிறோம். இந்நிலையில் தானியங்கி தொழில்நுட்பத்தை எப்படி மக்களின் தேவைக்கான துறையில் அறிமுகம் செய்வது என்று எண்ணினோம். இன்றைய சூழலில் தானியங்கி என்ற தொழில்நுட்பம் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், எண்டர்பிரைசஸ் நிறுவனங்களிலும் மட்டும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையை மாற்றி ஏன் இதை வீடுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்ற கோணத்தில் யோசித்தோம். ஆனால் இதன் தொடக்க நிலையில் ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டன.

என்னுடைய துறையைச் சார்ந்த நண்பர்கள், தானியங்கி எனப்படும் ரோபோடீக் துறையில் வல்லவராக இருக்கும் உங்களால் முழுக்க முழுக்க சமையல் செய்யும் எந்தி மனிதனை உருவாக்க முடியுமா? என சாதாரணமாகவும், நகைச்சுவையாகவும் கேட்டார்கள். அதன் பிறகு இதற்கான முயற்சியைத் தொடங்கினோம். தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெஃப் பதினெட்டாவது ஹார்ட்வேர் வெர்ஷன். ஒவ்வொரு முறையும் பிரத்யேகமான முறையில் மீண்டும் மீண்டும் ரீடிசைன் செய்து கொண்டேயிருந்தோம். இந்த துறையில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களே இது குறித்து ஆய்வு நிலையிலேயே இருக்கும் போது உங்களால் மட்டும் எப்படி சாத்தியப்படும்? என்றார்கள். ஆனால் ஒன்றை நினைத்து அதில் முழு மனதுடன் பணியாற்றி வெற்றிகிடைக்கும் என்ற மனநிலையில் குழுவாக இணைந்து கடினமாக பணியாற்றியதால் இதனை உருவாக்க முடிந்தது. இந்த தருணத்தில் இதற்காக உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ரோபோசெஃப்பை பொறுத்த வரை நாங்கள் இரண்டு வகையான ரோபோவை அறிமுகப்படுத்துகிறோம். ஒன்று வணிக நோக்கம் கொண்டது. மற்றொன்று ரோபோசெஃப் மினி. இது இல்லத்தரசிகளுக்கு ஏற்றது. ரோபோசெஃப்பில் 600 வகையான ரெசிப்பிகளை செய்யமுடியும். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி,சாம்பார், ரசம், சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் என அறுநூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்கமுடியும்.

ரோபோசெஃப் சமைக்கும் முன்னர் நீங்கள் என்ன உணவை தயாரிக்கவேண்டுமோ, அதற்கு தேவைப்படும் பொருள்களை கடையிலிருந்து வாங்கி, அல்லது வீட்டிலிருந்து அதிலிருந்து எடுத்து, இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறிய வடிவிலான பெட்டி போன்ற ஹாப்பர்ஸ் அமைப்பில் இடவேண்டும். இது மட்டும் தான் இந்த இயந்திர மனிதனுக்கு நீங்கள் செய்யும் ஒரேயொரு வேலை. இந்த இயந்திர மனிதனுக்குள் நாங்கள் முப்பத்தெட்டு ஹார்ப்பஸை அமைத்திருக்கிறோம். இதை தவிர்த்து சாலிடட் இன்கிரிடன்ட்ஸான காய்கறிகள் மற்றும் இறைச்சியை போட்டு வைத்துக் கொள்வதற்கென தனியாக பதினெட்டு ஹாப்பர்ஸை அமைத்திருக்கிறோம். தற்போது இதில் சிறப்பு வசதியாக காய்கறிகளை நறுக்குவதற்காக தானியங்கி வெட்டும் இயந்திரத்தையும் பொருத்தியிருக்கிறோம். இதனைத் தொடர்ந்து நீங்கள் என்ன வகையான உணவு தேர்வு செய்கிறீர்களோ அதற்கான ஆப்ஸை டவுண்லோடு செய்து, கிளிக் செய்தால் போதும். ரோபோசெஃப் குறைவான நேரத்தில், சுவையான உணவை தயாரித்து தருவார். ஒரு வேளை நீங்கள் உங்களுடைய வீட்டிலுள்ளவர்கள் சர்க்கரை நோயாளிகள் அல்லது இரத்த அழுத்த நோயாளிகள் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் உணவை தயாரிப்பதற்கு முன்பாக இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும். சர்க்கரை குறைவாகவோ அல்லது உப்பு, காரம் குறைவாகவோ உணவு தயாராகிவிடும்.

இதனால் சமையல் கலைஞர்கள் மற்றும் உணவு சேவையாற்றும் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. இதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்லவிரும்புகிறேன். போக்குவரத்து மின்விளக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் போக்கு வரத்து காவலர்கள் தான் போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் போக்குவரத்து மின்விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஏராளமான போக்குவரத்து காவலர்களுக்கு பணியிழப்பு ஏற்படும் என்றார்கள். ஆனால் நடைமுறையில் அவர்கள் பணியிழக்கவில்லை. ஆனால் அவர்களின் பணிக்கு இந்த மின்விளக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது. என்றைக்கும் சில தொழில்நுட்பங்கள், சிலரின் பணிகளின் எளிமைப்படுத்தி, பணிச்சுமையைக் குறைக்குமேத் தவிர, அவருக்கு பதிலீடாக எந்த தொழில்நுட்பமும் வரவில்லை.

இதன் மூலம் பல தொழில்முனைவோர்கள் உருவாவார்கள். குறிப்பாக உணவகத் தொழிலில் ஈடுபட ஏராளமானவர்கள் விருப்பமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகயிருப்பது, தினமும், தொடர்ச்சியாக மூன்று வேளையிலும், ஒரே சுவையுடன் கூடிய வித விதமான உணவைத் தயாரித்து, மக்களுக்கு அளிக்கவேண்டும். இதற்காக அவர்கள் சமையல் கலைஞர்களை மட்டுமே நம்பவேண்டியதிருக்கிறது.அதே தருணத்தில் ஒவ்வொரு சமையல் கலைஞர்களுக்கும் பிரத்யேகமான உணர்வால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதன் பிரதிபலிப்பு அன்றைய உணவு வகையில் எதிரொலிக்கும். இது நடைமுறை யதார்த்தம். இந்நிலையில் நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெஃப் சமையல்கலைஞர்களுக்கான ரீப்ளேஸ் அல்ல. அவர்களுக்கு உதவும் ஒரு கருவி. அவர் எவ்வகையான உணர்வுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரின் தொழில் முறையிலான கைப்பக்குவம் இந்த கருவியால் காப்பாற்றப்படுகிறது. இதில் சுவைக்காக நாங்கள் வடிவமைத்திருக்கும் மென்பொருளில் தமிழகம் மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலமான சமையல் கலை நிபுணர்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களின் உதவியுடன் தான் மென்பொருளை வடிவமைத்திருக்கிறோம். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் இந்த எந்திர மனிதன் நீங்கள் சொல்வதை செய்யும். இதனை சாதகமாகவும் எடுக்கலாம். உதவியாகவும் பார்க்கலாம். இதன் மூலம் ஒருவர், இருவர், பத்து பேர், நூறு பேர் ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் என எத்தனை நபர்களுக்கு சமைத்தாலும் ஒரேவிதமான சுவையுடன் தயாரிக்கமுடியும். இதனை மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்.

அதே நேரத்தில் உணவகங்களில் உணவு தயாரிக்கும் இடத்தை பார்வையிடும் போது, பலருக்கு பலவிதமான அபிப்ராயம் ஏற்படலாம். சிலருக்கு உணவு குறித்த எதிர்மறை எண்ணங்கள் கூட ஏற்படலாம். அதனை நாங்கள் முழுமையாக மாற்றியமைத்திருக்கிறோம். மேலைநாடுகளில் உணவு தயாரிக்கும் பணிகளில் மனிதர்களின் கைகளை பயன்படுத்தக்கூடாது என்ற விதி இருக்கிறது. ஏனெனில் கைகளில் கண்களுக்குப் புலப்படாத பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். இதனால் நாங்கள் ரோபோசெஃபை வடிவமைக்கும் இதனையும் கருத்தில் கொண்டு வடிவமைத்திருக்கிறோம். இந்த ரோபோசெஃப்பில் தயாரிக்கப்படும் உணவு முழுவதும் சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் பிரத்யேகமானவை. இதில் சமைக்கப்படும் உணவு ஆறு மணி நேரத்திற்கு சூடாகவும், சுவை மாறாமலும் இருக்கும். அதே போல் சமைத்த பின்னர், சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தவும் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறோம். சமைத்த உணவை ‘டேக் அவே ’பாணியில் எடுத்துக் கொண்டுச் செல்லும் வகையிலும் ரோபோசெஃப் சேவையாற்றும். ” என்று விரிவாக விளக்கமளித்தார்.

பிறகு இறுதியில் ரோபோசெஃப்பில் தயாரிக்கப்பட்ட உணவை விழாவிற்கு வருகைத்தந்த அனைவரும் பார்வையிட்டனர். அதன் போது இதன் செயல்முறையை இதனை வடிவமைத்த குழுவினர் விளக்கமளித்தனர்.

குறிப்பு
• ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் சிறந்த ஸ்டார்ட்டப் நிறுவனம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது.

• துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உலகளவிலான கண்காட்சியில் இடம்பெறுவதற்காக இந்தியாவிலிருந்து ரோபோசெஃப் தேர்வு செய்யப்பட்டது, அந்த கண்காட்சியில் பலரின் பாராட்டுகளையும் ரோபோசெஃப் பெற்றிருக்கிறது.

• செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய ரோபோசெஃப் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இதன் மூலம் ரோபோசெஃபே விதவிதமான சுவையில், உணவைத் தயாரித்து மக்களை மகிழ்விக்கும்.

• ஒரே நிமிடத்தில் பத்து தோசையைத் தயாரிக்கும் கருவி, சப்பாத்தி மற்றும் புரோட்டாவை தயாரிக்கும் கருவி, பஜ்ஜி, போண்டோ போன்ற நொறுக்கு தீனிகளை தயாரிக்கும் கருவி என சமையலுக்கு பயன்படும் வகையிலான பல கருவிகளும், எங்களின் தயாரிப்புகளாக அறிமுகமாகி, வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

• சுவை, (Holistic Taste ) சுகாதாரம், (Hygine) ஆரோக்கியம் (Healthy) இது தான் உணவின் ரகசியம். இதற்கு இனிமேல் ரோபோசெஃப் அவசியம்.
முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ரோபோசெஃப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme