தமிழை 3-ஆவது மொழியாக்க கோரிய டுவீட்டை திடீரென நீக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழை 3-ஆவது மொழியாக்க கோரிய டுவீட்டை திடீரென நீக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:
தமிழை 3-ஆவது மொழியாக்குங்கள் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் பதிவு செய்திருந்த டுவீட்டை திடீரென நீக்கிவிட்டார்.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் பரிந்துரைபடி 8-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும் என்பதால் இதற்கு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி தமிழக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பத்தின் அடிப்படையில் 3-ஆவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயம் கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில் பிற மாநிலங்களில் தமிழை 3-ஆவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்.
பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான மொழிக்கு செய்யும் சேவையாகும் என எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் மும்மொழி கொள்கையின்படி இந்தியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கிறாரா என திமுக, திக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கேள்வியிருந்தன. அதுபோல் டுவிட்டர் பக்கத்திலும் இவரது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து பிற மாநிலங்களில் தமிழை விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய டுவீட்டை முதல்வர் திடீரென நீக்கிவிட்டார். அதற்கான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *