பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘சட்டமும் நீதியும் சீசன் 2’ (Sattamum Needhiyum Season 2) இணையத் தொடர், முதல் பாகத்தைப் போலவே ஒரு விறுவிறுப்பான மற்றும் நேர்த்தியான நீதிமன்றக் குற்றவியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான் எழுதியுள்ள திரைக்கதை, ஒவ்வொரு எபிசோடிலும் “அடுத்து என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தொய்வில்லாமல் நகர்கிறது.
காவல் துறை அதிகாரி பிரேம் குமார் சில மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை வழக்கில் அவருடன் பணியாற்றிய நான்கு காவல் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுகிறார்கள். கொல்லப்பட்ட அதிகாரியின் மனைவியும், பார் கவுன்சில் தலைவருமான முன்னணி வழக்கறிஞர் வரலட்சுமி சரத்குமார், தன் கணவனின் கொலைக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் வாதாடுகிறார்.
மறுபுறம், கைது செய்யப்பட்ட ஏழை போலீஸ்காரர்கள் நிரபராதிகள் என அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார் எளிய வழக்கறிஞர் ‘பருத்திவீரன்’ சரவணன். பிரேம் குமாரைக் கொலை செய்தது யார், அதன் பின்னணி என்ன, இறுதித் தீர்ப்பு என்ன என்பதே இந்த சீசனின் பரபரப்பான கதை.

வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக வரும் சரவணன், நீதிமன்றக் காட்சிகளில் தனது எளிய மற்றும் அழுத்தமான நடிப்பால் கவர்கிறார். அவருக்கு இணையாக வாதாடும் வரலட்சுமி சரத்குமார், தனது கம்பீரமான குரலாலும் வாதத் திறமையாலும் பாத்திரத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்.

கோகுலகிருஷ்ணனின் நேர்த்தியான ஒளிப்பதிவும், விபின் பாஸ்கரின் பின்னணி இசையும் நீதிமன்ற வாதங்களின் விறுவிறுப்பைத் தக்கவைக்க உதவுகின்றன.