1943-ம் ஆண்டு சென்னை நகரத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டு வீசப் போவதாக வந்த செய்தி, சென்னை மாகாண மக்களையும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், காவல்துறையையும் கதிகலங்க வைக்கிறது. இந்நிலையில், பிரிட்டீஷாரால் கைது செய்யப்பட்ட தன் தம்பியைக் கூட்டிவர, சென்னை சேர்ந்த மீனவரான குமரன் (யோகி பாபு), தனது பாட்டி முத்துமாரியுடன் (குலப்புள்ளி லீலா) பிரிட்டிஷ் காவல்துறையை அணுக, அங்கே அவர் அவமானப்படுத்தப்படுகிறார். இரண்டு நாள்களில் தங்கைக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், தம்பியை மீட்க முடியாதச் சோகத்திலிருக்கும்போது, சென்னையைப் போர் விமானங்கள் சுற்றி வளைக்கின்றன. உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் குமரனும், அவரது பாட்டியும் அவர்களுடைய படகில் ஏறி, குண்டுகள் விழாத நடுக்கடலுக்குச் செல்ல முடிவு செய்கின்றனர் அவர்கள் உடன் அவர்களுடன், முதியவரான நாராயணனும் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் லட்சுமியும் (கௌரி ஜி கிஷன்), கர்ப்பிணியான விஜயாவும் (மதுமிதா) அவரது மகன் மகேஷும் (அக்ஷத்), நூலகரான முத்தையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), எழுத்தாளரான ராஜாவும் (ஷா ரா), வியாபாரியான சேட்டும் (சாம்ஸ்) படகிலேறி, நடக்கடலுக்குச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில் பல பிரச்னைகள் தலையெடுக்கின்றன. அவற்றை எப்படி படகிலிருந்தவர்கள் சமாளித்தார்கள், நாடு கடலில் இருந்தவர்கள் கரை திருப்பினர்களா ?
குமரன் தன் தம்பியைக் மீட்டாரா? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது ‘போட்’ திரைக்கதை .
படத்தின் நடிகர்களான யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா, மதுமிதா, கவுரி கிஷன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு வழக்கமாக காமெடி என்கிற எரிச்சலூட்டாமல் மிக அடக்கமான இயல்பான நடிப்பை தருவது ஆறுதல்.
படத்தின் முதல் ஹீரோ ஒளிப்பதிவுதான். கடலின் அழகை பல வண்ணங்களில் மிக அழகாக காட்டியிருக்கிறது மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா. க்ரீன் மேட்டா அல்லது உண்மையான கடலா என்று கணிக்கமுடியாத அளவுக்கு துல்லியமான வேலைப்பாடு. ஜிப்ரானின் பின்னணி இசை அமைதியான இடத்தில் எல்லாம் தேவையே இன்றி ஒலித்து இம்சிக்கிறது. படத்தில் வரும் அந்த கானா + கர்நாடக சங்கீதம் கலந்த பாடலும், க்ளைமாக்ஸில் வரும் பாடலும் மனதில் நிற்கின்றன.