டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரை விமர்சனம்

Terminator-Dark-Fate-Film Review-indiastarsnow

டெர்மினேட்டர் வகை படங்கள் ஹாலிவுட்டில் 1984ஆம் ஆண்டு முதல் வெளியாகின்றன. முதல் பாகத்தில் இருந்தே டெர்மினேட்டர் பாகங்களின் ஆஸ்தான நடிகராக இருந்து வந்த அர்னால்டு இந்த படத்துடன் விடை பெறுகிறார். அதனாலேயே டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

படம் தொடங்கிய முதல் காட்சியே மனித உடலும் இயந்திர உடலும் இணைந்த சைபார்க் மெக்கன்சி டேவிஸ் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்து இறங்குகிறது. இன்னொரு இடத்தில் முழுக்க முழுக்க எந்திரமான காப்ரியல் லூனா தரை இறங்குகிறது. இந்த இயந்திரத்துக்கு நடாலியாவை கொல்வதுதான் இலக்கு. தன் அண்ணனுடன் அமைதியாக வாழ்ந்து வரும் நடாலியா இந்த இயந்திரத்தால் தன் அண்ணன், அப்பாவை இழக்கிறார்.
நடாலியாவை காப்பாற்றுவதற்காக தான் மெக்கன்சி 2042ஆம் ஆண்டில் இருந்து தற்காலத்துக்கு வந்து இருக்கிறார். காப்ரியலுடன் போரிட்டு நடாலியாவை காப்பாற்றுகிறார். நடாலியாவுக்கு பிறக்க போகும் குழந்தை தான் இந்த உலகத்தை இயந்திரங்களின் ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்ற இருக்கிறது. எனவே தான் இந்த போர். நடாலியாவை காப்பாற்ற முன்னாள் இயந்திரங்களான அர்னால்டும் லிண்டாவும் உதவுகிறார்கள். அவர்களது முயற்சி வெற்றி அடைந்ததா? என்பதே கதை.

கதையின் நாயகி மெக்கன்சி டேவிஸ் தான். தரை இறங்கியது முதல் இறுதிக்காட்சியில் நடாலியாவை காப்பாற்ற உயிரை விடுவது வரை படத்தை தாங்கும் கதாபாத்திரம். ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு உதவும் லிண்டாவும் அர்னால்டும் சரியான தேர்வுகள். அர்னால்டை படம் முழுக்க எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சும். இரண்டாம் பாதியில் வரும் அர்னால்டு சில காட்சிகளே வருகிறார். கிளைமாக்ஸ் காட்சி அவரது ரசிகர்களுக்கான விருந்து.
வில்லன் இயந்திரமாக வரும் காப்ரியல் பார்வையிலேயே வெறுப்பை வரவைக்கிறார். 2 உருவங்களாக பிரிந்து மனிதனாகவும் அருவமாகவும் அவர் சண்டையிடும் காட்சிகள் கிராபிக்ஸ் கலக்கல். முந்தைய டெர்மினேட்டர் வரிசை படங்களை பார்த்தவர்களுக்கு எளிதில் புரியும் கதை. ஆக்‌ஷன் காட்சிகளும் சேசிங் காட்சிகளும் கிராபிக்சில் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் முந்தைய படங்களில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் குறைவுதான்.

கேஜிஎஃப் படத்தின் மூலம் வசனங்களில் கவர்ந்த அசோக் டெர்மினேட்டரையும் தமிழ் படுத்தி இருக்கிறார். பொதுவாக தமிழில் டப் செய்யப்படும் ஆங்கில கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களில் இருக்கும் மிகைத்தனம் இதில் இல்லை. பதிலாக சில புத்திசாலித்தன வசனங்கள் இருக்கின்றன. அசோக்கிற்கு பாராட்டுகள்.
129 நிமிட படத்தில் அதிக நேரம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஜேம்ஸ் கேமரூனின் திரைக்கதையில் ஆக்‌ஷன் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் டெர்மினேட்டர் வரிசை ரசிகர்களையும் அர்னால்டு ரசிகர்களையும் இந்த டெர்மினேட்டர் ஏமாற்றாமல் ரசிக்க வைக்கிறான்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *