Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,

Posted on June 15, 2026

(2/2)

“தயாரிப்பாளர் கே. ராஜன் மாமா அவர்களின் எதிர்பாராத மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும், குறிப்பாக எங்கள் குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

நிறைய பேர் அவரைப் பற்றி பேசினார்கள். அவருடைய மகள் பேசும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இருந்தாலும் நான் பேசியாக வேண்டும். ஏனெனில், எனக்கும் மாமாவுக்கும் இருந்த நட்பு சாதாரணமானது அல்ல.

என்னுடைய மறைந்த தந்தை ஐசரி வேலன் இறந்து கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் ஆகிறது. அவரும் கே. ராஜன் மாமாவும் வடசென்னையில் சர் தியாகராயா பள்ளியில் ஒன்றாகப் படித்த பள்ளித் தோழர்கள். நாடகங்களில் சேர்ந்து நடித்தார்கள். பள்ளிப் பருவத்திலேயே கதை எழுதுவார்கள், இயக்குவார்கள், நடிப்பார்கள் — எதைச் செய்தாலும் இருவரும் ஒன்றாகச் செய்வார்கள்.

மாமா வடசென்னையில் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தி வந்தார். இப்போது அதை அவரது மகளும் மகனும் கவனித்து வருகின்றனர். அந்தப் பள்ளிக்கே என் தந்தை சென்று அவருடன் அமர்ந்து பேசுவார்.

அப்போது ‘என்னைப் போல ஒரு பள்ளியை நீயும் ஆரம்பி’ என்று என் தந்தையிடம் ராஜன் மாமா கூறியிருக்கிறார். அதை மனதில் வைத்துக்கொண்ட என் தந்தை, பின்னர் அதை என்னிடம் கூறினார். அதையே நான் மனதில் வைத்து, அவர் மறைந்த பிறகு அவரது பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்கினேன்.

இன்று 54 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறேன். 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்; 8,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இதற்கெல்லாம் விதை போட்டவர் கே. ராஜன் மாமாதான் என்று நான் சொல்லுவேன்.

நான் 19 வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு நான் அவரை என் அப்பாவாகத்தான் பார்த்தேன். அவர் எதை கேட்டாலும் நான் செய்து கொடுப்பேன். வசதி இருந்தாலும், கஷ்டம் இருந்தாலும், அவரிடம் ‘இல்லை’ என்று நான் சொன்னதே இல்லை.

அவர் தேர்தலில் நிற்பார். ‘வேண்டாம் மாமா, எதற்கு நிற்கிறீர்கள்?’ என்று நான் கேட்பேன். ‘இல்லடா, நான் ஜெயிச்சிருவேன்டா’ என்பார். ‘ஜெயித்தால் சந்தோஷம்; தோற்கக்கூடாது’ என்று சொல்லி அதற்கும் உதவி செய்வேன். சில தேர்தல்களில் வென்றிருக்கிறார்; சிலவற்றில் தோற்றிருக்கிறார். ஆனால் கடைசிவரை தலைவராக இருந்தபடியே அவர் மறைந்தது ஒரு மனநிறைவைத் தருகிறது.

ஆனால் அவர் இப்படி மறைந்திருக்கக் கூடாது. அவரைப் போல தைரியமான ஒருவரை நான் பார்த்ததில்லை. அவரைப் பார்த்து எனக்கும் நிறைய தைரியம் வந்திருக்கிறது. எத்தனையோ பெரிய அறுவைச் சிகிச்சைகளை தைரியமாக எதிர்கொண்டவர், ஒரு சிறிய பேஸ்மேக்கர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நான் நினைத்ததே இல்லை.

இருந்தாலும், இன்று அவர் எப்போதும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

கே. ராஜன் மாமா, சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நிதிப் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். தமிழ் சினிமாவின் நலனுக்காக, நேர்மையுடனும், துணிச்சலுடனும், அலாதியான அர்ப்பணிப்புடனும் இறுதிவரை போராடிய மாமனிதர்.

எந்த மேடையிலும் உண்மையை உரக்கப் பேசும் அவரது குணம், தமிழ் சினிமா வர்த்தக வரலாற்றிலும், சுயாதீனப் படைப்பாளர்களின் வரலாற்றிலும் என்றும் நிலைத்திருக்கும்.

இன்று இந்த சங்கத்தில் அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துள்ளீர்கள். அவர் இல்லாவிட்டாலும், அவர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதை நான் நிச்சயமாக செய்வேன் என்பதை இந்த சங்கத்திற்கு உறுதியளிக்கிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஒட்டுமொத்தத் திரையுலகினருக்கும் என் மனமார்ந்த ஆறுதலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று உருக்கமாகப் பேசினார்.

  • நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,
  • மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
  • தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme