
யோகி பாபுவின் 300வது திரைப்படம் – புதிய போஸ்டர் மூலம் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!
Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படத்தின் டீசரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறான். ஆனால், அந்த வாகனம் திருடுபோகிறது. அதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவன் இறங்கும்போது, அந்த வாகனத்திற்குப் பலரும் உரிமை கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் செயல்படும் வாகனத் திருட்டு மாஃபியா கும்பலை மையமாகக் கொண்டு, உணர்ச்சிகளும் நகைச்சுவையும் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக ‘அர்ஜுனன் பேர் பத்து’ உருவாகியுள்ளது.
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அனாமிகா மஹி கதாநாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சௌந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லெனின் பாரதியும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ‘தண்டகாரண்யம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவைக் கவனிக்க, காசி விஸ்வநாதன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ‘அமரன்’ படத்தின் கலை இயக்குநர் பி. சேகர் கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளையும் கவனித்துள்ளனர். கே. நட்ராஜ் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வரும் நவம்பர் 27ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்பதுடன், வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’, நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
தொழில்நுட்பக் குழு
- தயாரிப்பு: Dev Cinemas Pvt Ltd
- இயக்கம்: ரா. ராஜ்மோகன்
- இசை: டி. இமான்
- பாடல்கள்: கார்த்திக் நேதா
- ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா
- படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்
- கலை இயக்கம்: பி. சேகர்
- சண்டைப் பயிற்சி: ஓம் பிரகாஷ்
- வசனம்: எம்.ஆர். அருண் சந்தர்
- ஆடை வடிவமைப்பு: கே. நட்ராஜ்
- ஒப்பனை: ‘அறந்தை’ தினேஷ்
- தயாரிப்பு நிர்வாகம்: கே. சின்னதுரை, ஆர். ராஜாராம்
- நிர்வாகத் தயாரிப்பு: மதி ஆனந்தன்
- தயாரிப்பு மேற்பார்வை: எஸ். அழகர்சாமி
- இணை தயாரிப்பாளர்: எல். சுந்தரபாண்டி
- ஒலிக்கலவை: டி. உதயகுமார்
- சப்தம்: விஷ்ணு
- நிழற்படம்: திலீப் குமார்
- விளம்பர வடிவமைப்பு: சின்னா சுரேஷ்
- மக்கள் தொடர்பு: ஏ. ராஜா
