Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !

Posted on September 23, 2026

படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால் நடிகர்கள் சும்மா இருக்க வேண்டியிருக்கும்: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேச்சு!

சினிமாவை நம்பினால் அது கைவிடாது: நடிகர் சித்து பேச்சு!

படங்களைத் திரையரங்கு சென்று பாருங்கள்: நடிகை ரித்விகா பேச்சு!

‘தி டார்க் ஹெவன் ‘ படத்தை என் முதல் படம் என்று நான் பெருமையாகச் சொல்வேன்: நடிகை தர்ஷிகா பேச்சு!

இது வழக்கமான சக்சஸ் மீட் அல்ல; நன்றி தெரிவிக்கும் சந்திப்பு: ‘ தி டார்க் ஹெவன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி பேச்சு!

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன.

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று இன்று பெரிய வெற்றி பெற்றுள்ளது.இது சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.
படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பினைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது .இந்த வெற்றி மகிழ்ச்சியை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ‘எங்களின் இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்’ என்ற பதாகையுடன் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்கள்.

சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் கலந்து கொண்டு பேசும்போது,

” முதலில் இந்தப் படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள்.இந்தப் படம் வெளியாவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நான் பார்த்தேன். பார்த்தவுடன் இயக்குநர் பாலாஜியிடம் படம் நல்ல த்ரில்லராக வந்து இருக்கிறது .சரியான தேதியில் வெளியிட்டால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறினேன். இந்தக் தேதியைக் குறிபிட்டபோது நான் பாலாஜியிடம் கேட்டேன் ”இந்தத் தேதி சரியானதுதானா ?அன்றைக்கு ஒன்பது படங்கள் வருகின்றன. ஏற்கெனவே ‘மண்டாடி’ நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றேன்.அப்போது அவர் “இல்லை சார் இந்தத் தேதியை முடிவு செய்துவிட்டோம் அதற்குக் கொண்டு வருகிறோம்” என்றார்.ஒன்பது படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .அதற்கு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவும் தான் காரணம் .எனது வாழ்த்துக்கள் .இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்.
இத்தனை படங்கள் நடுவில் மக்கள் பெரிய படங்களை தான் பார்ப்போம், பெரிய நட்சத்திர நடிகர் நடித்த படங்களைத்தான் பார்ப்போம் என்றிருக்கிற சூழலில் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பது கொண்டாடப்பட வேண்டிய வெற்றிதான்.
ஒரு திரைப்படம் எடுக்கும்போது ஒரு நடிகர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினைகளை அந்தப் படம் சந்திக்குமோ அத்தனையையும் இந்தப் படம் சந்தித்திருக்கிறது.அதுவும் அறுபது ,எழுபது சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த நடிகருடன் தொடர்ந்து போக முடியவில்லை என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து நிறுத்தி விடுவோம் என்று முடிவு எடுப்பது யாரும் சுலபமாக எடுக்க முடியாது.சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் அப்படித்தான் நடந்தது. ஒரு பெரிய நடிகருடன் பிரச்சினைகளால் அந்தப் படத்தை முடிக்க முடியாமல் திணறினேன்.படங்கள் வளர்ந்த பிறகு, செலவு செய்த பிறகு எங்களால் அப்படி ஒரு முடிவு ஒன்று எடுக்க முடியவில்லை.படத்துக்காக நீண்ட தூரம் வந்து விட்டோம் ,நிறைய செலவாகிவிட்டது என்று தயங்கினோம்.அப்படிப்பட்ட நிலையில் படத்தை நிறுத்திவிட்டு வேறு படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல .அது தெரிந்து சித்து ஈடுபாட்டுடன் நடிக்க வந்தது பாராட்டுக்குரியது.அவரது நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது.இன்று திரையரங்குகளில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.
நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது எல்லாவற்றையும் சரியாகப் பேசிக் கொண்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும். பிறகு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டியதுதான்.
சில சமயம் வாரத்திற்கு ஆறேழு படங்கள் வருகின்றன. சில வாரம் எதுவுமே வருவதில்லை. இதை முறைப்படுத்த வேண்டும். அடுத்த வாரம் கூட ஆறுபடங்கள் வருகின்றன. மூன்று படங்கள் முக்கியமான படங்களுக்குக் கூட திரையரங்குகள் கிடைக்கவில்லை. வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வரக்கூடாது. எல்லாவற்றையும் மீறி இந்தப் படம் வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்தப் படத்திற்கு பிவிஆர் சினிமா கொடுத்த ஆதரவு பெரிய விஷயம். அவர்கள் சிறு முதலீட்டுப் படங்களுக்கும் வாராவாரம் திரையரங்குகள் தர வேண்டும்.படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,

“இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். இப்போதும் அந்த அறுபது -எழுபது சதவீத படத்தை எடுத்து விட்டுத் தூக்கிப் போட்டது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.இந்தப் படம் வருவதற்கு இந்தத் தயாரிப்பாளர்கள் இருவர் முக்கியமானவர்கள். சகோதரர் ஷரண், கோபால் சார் இவர்கள் முக்கியமானவர்கள். அதையும் தாண்டி என் மனைவி, என் சகோதரர்,குடும்பத்தினர் , நண்பர்கள் என் என் குழுவினர் உட்பட பலரும் பெரிய பக்க பலமாக இருந்தார்கள்.அதையும் தாண்டி பலரும் எனக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.மீண்டும் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு எனது குழுவினர் எனக்குப் பெரிய பலமாக இருந்தார்கள்.
வேல ராமமூர்த்தி சார், ஜெயக்குமார் சார் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். சிந்து,ரித்விகா மேம், தர்ஷிகா மேம் நீண்ட நாட்கள் என்னுடன் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் 18 மணி நேரம் கூட வேலை செய்திருக்கிறார்கள்.சித்து என்னுடனே மினி டூர் போல வந்து கொண்டே இருந்தார்.
என்னுடைய ஒளிப்பதிவாளர் மணிகண்டன், அவருக்கு பெரிய நன்றி.என் முதல் படத்திற்கும் எனது அடுத்த படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு வரும்,ஆனால் எதையும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளலாம். சண்டை போட்டாலும் உடனே மறந்துவிட்டு டீ சாப்பிடக் கூப்பிட்டால் வருவார். அப்படிப்பட்டவர்தான் எடிட்டர் ராஜா ஆறுமுகமும். ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டதை ஏற்கெனவே ஒரு நடிகரை வைத்து எடுத்த படத்தில் தேவையற்றதைத் தூக்கி விட்டுத் தேவையானதை எடுத்து மீண்டும் எடுக்கப்பட்டதோடு சேர்த்துக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது சுலபமானது கிடையாது.அவர் செய்தார். அவருக்கு நன்றி.
மூன்றாவது நபராக வந்து எனது குடும்பத்தில் ஒருவராக மாறி இருக்கிறார் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி.இந்தப் படம் வந்தால் மூன்று பேருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நான் அப்போதே சொன்னேன். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் அதற்குப் பிறகுதான் இயக்குநர் யார் என்று கேட்பார்கள் என்று சொன்னேன். அதுதான் இன்று நடந்திருக்கிறது.
சக்தி பாலாஜியின் இசையைப் பற்றிப் பலரும் பேசும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருக்கிறது.என் இதயத்திலிருந்து சொல்கிறேன் அவர் பெரிய ஆளாக வருவார்.
சகோதரர் ஷரண், கோபால் சார் இல்லாமல் இந்தப் படம் இல்லை. இந்த மேடையும் இல்லை. சிலருக்கு இந்தப் படம் வருமா வராதா என்ற சந்தேகம் இருந்தாலும் பலரும் நம்பிக்கையோடு உழைத்தார்கள்.எல்லாருமே வெற்றிக்காகப் பாடுபட்டார்கள்.படம் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் போது பழைய சர்ச்சைகளுக்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை
இப்போதைய சந்திப்பு வழக்கமான சக்சஸ் மீட் போல் நடைபெறுவதாக யாரும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன்.தயாரிப்பாளர் கோபால் சார் தான் வைக்க வேண்டும் என்றார். இதை ஏற்பாடு செய்தோம் .இது ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு தான்.விரைவில் பெரிய வெற்றி வசூல் விவரங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம்.பத்திரிகையாளர் காட்சியில் நீங்கள் கொடுத்த கைதட்டல் தான் திரையரங்கு வரை நீண்டு சென்றிருக்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி.அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை தர்ஷிகா பேசும் போது,

“வேர்ட் ஆப் மௌத் என்பதை நான் நம்புகிறேன்.சொல் என்பது மிக முக்கியமானது .அதற்கு நிறைய சக்தி இருக்கிறது.நேர்நிலையாக ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது நாலைந்து பேருக்கு நேர்நிலையாகச் செல்லும் .எதிர்மறையாக ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது பத்துப்பதினைந்து பேருக்கு எதிர்மறையாகச் செல்லும்.முதல் முதலில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதை வைத்து இந்தப் படத்தைப் பார்க்க வந்திருக்கிற கூட்டம் பெரியது. அதற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி.
பொதுவாக முதல்படம் செய்யும்போது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டாலும் அது எனது முதல் படம் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்படியாக இந்த ’தி டார்க் ஹெவன்’ படம் அமைந்திருக்கிறது.என் முதல் படம் என்பதை பெருமையாகக் கூறுவேன்.அனைவருக்கும் நன்றி “என்றார்.

நடிகை ரித்விகா பேசும்போது,

” இங்கே வந்து தனஞ்ஜெயன் சார் வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.ஊடகங்களின் விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியது மக்களிடம் போய்ச் சேர்ந்து இருக்கிறது . திரையரங்குகளில் படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.ஆனாலும் இது போதாது. மேலும் இந்தப் படம் போய்ச் சேர வேண்டும்.
பிரதான ஊடகங்கள் தவிர்த்து சமூக ஊடகங்களிலும் இதை நிறைய பேர் ரீல்ஸ் போட்டு விளம்பரம் செய்து வருகிறார்கள் .இந்தப் படத்தை மேலும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா திரையரங்குகளுக்கும் கூட்டம் வர வேண்டும். மக்கள் அனைத்துப் படங்களையும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் .அப்போது தான் அந்தத் திரையரங்க அனுபவம் கிடைக்கும் .நான் முன்பே சொன்னேன் இந்தப் படம் ஒரு திரையரங்கு அனுபவத்திற்கான படம் என்று .ஓ டி டி வரும் வரை காத்திருக்க வேண்டாம் .எந்தப் படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள்.அப்போதுதான் சினிமா வளர்ச்சி பெறும்”என்றார்.

படத்தின் நாயகன் சித்து பேசும்போது,

” எப்போதும் தனஞ்ஜெயன் சார் அவர்கள் சிறுபடங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு வந்ததற்கு நன்றி.இந்தத் தருணத்திற்காக நான் பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன் .சாலிக்கிராமத்தில் தசரதபுரத்தில் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு தான் சினிமா வாய்ப்பு தேடினேன். எல்லா கம்பெனிகளுக்கும் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டு சென்று அலைந்திருக்கிறேன்.அது ஒரு பெரிய தேடல்.அப்போது இதில் நிறைய பசி, அவமானம் போன்றவற்றைச் சந்தித்து இருக்கிறேன். நிறைய இடத்தில் போட்டோக்களைக் கொடுத்துவிட்டு உதவி இயக்குநரிடம் இருந்து நாளைக்கு ஓர் அழைப்பு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் உண்டு.
திரையரங்கு சென்று படம் பார்க்கும்போது நம்முடன் வாய்ப்பு கேட்டவர்கள் எல்லாம் நடித்துப் பெரிய ஆளாகி ஹவுஸ் ஃபுல்லாக படங்கள் ஓடியதையும் பார்த்திருக்கிறேன். அப்போது மகிழ்ச்சியாக இருக்கும்.பொறாமை இருக்காது .ஆனால் மனதில் ஒரு பக்கம் சிறு வருத்தமும் ஏக்கமும் இருக்கும். நமக்கான நாள் என்று வரும்? நமக்கான வாய்ப்பு என்று வரும்? என்று ஒரு ஏக்கம் இருக்கும் .அப்படித் தூக்கமில்லாத நாட்கள் எல்லாம் இருந்திருக்கின்றன.
நான் ஆசைப்பட்டது போலப் பல ஊர்களுக்கு திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது ஹவுஸ்புல் காட்சிகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆசைப்பட்டு இருக்கிறோம்.அது இப்போது நடக்கிறது என்கிறபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது .மிக்க நன்றி.
’ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு வசனம் வரும் ,சினிமா ஒரு தேவதை மாதிரி அதை மதித்தால் அது திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டு வரும் என்று.சினிமாவை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் .இது எனக்கு ஒரு ஆரம்பம் தான். ஒரு நல்லதொரு அறிமுகமாக இருந்திருக்கிறது.இந்த கொண்டாட்டத்திற்குக் காரணமாகப் பலர் இருக்கிறார்கள் .ஒரே ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால் இயக்குநர் பாலாஜி சகோதரரைச் சொல்வேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

இந்தச் சந்திப்பில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிப்புக் கலைஞர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார்,ஆர்த்தி, சுமித்ரா ,பிரதீப்,விவேக், செல்வா, மனோஜ் , அலெக்ஸ், டேனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  • டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
  • நாய்ஸ் & கிரைன்ஸ் சென்னையில் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது; யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன்
  • யுவன் ஷங்கர் ராஜாவின் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) இந்திய மேடை இசையின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது
  • விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme