குஷி திரை விமர்சனம்
குஷி படத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் விஞ்ஞானமா? மெய்ஞானமா? இந்த கேள்வியை வைத்து காதல் பின்னணியில் குஷி படத்தை தந்துள்ளார் சிவ நிர்வானா ,நாத்திகவாதியான சச்சின் கேடகெரின் மகன் விஜய் தேவரகொண்டாவும், ஜோதிட நிபுணரான பிராமணர் முரளி சர்மாவின் மகள் சமந்தாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள். ஆனால், இருவரின் ஜாதகப்படி தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்தால் மட்டுமே இவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று முரளி சர்மா கூறுகிறார். அதற்கு சச்சின் கேடகெர் மறுப்பு தெரிவிப்பதோடு, அப்படி ஒரு திருமணமே தேவையில்லை என்ற முடிவுக்கும் வருகிறார். இதனால் பெற்றோர்களை எதிர்த்து விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா – சமந்தா தம்பதி வாழ்க்கையில் குழந்தை பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு தனது தந்தை சொல்லும் ஜாதக தோஷம் தான் காரணம் என்று சமந்தா நம்ப, விஜய் தேவரகொண்டா அதை ஏற்க மறுக்கிறார். இதனால், இருவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடு பெரிதாகி இருவரும் பிரிந்துவிட, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
முரளி சர்மா, சச்சின் கேடகெர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரின் நடிப்பு சிறப்பு .ஒளிப்பதிவாளர் முரளி.ஜி காஷ்மீர் காட்சிகள் அனைத்துமே கொள்ளை அழகாக இருப்பதோடு, விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியை பேரழகாக காட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வாஹப்பின் இசையில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே பெரிய ஹிட்டாகி விட்டது. காட்சிகளுடன் அந்த பாடல்களை பார்க்கும் போது கூடுதலாக ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்களில் வரிகள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் இசை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் காதலை நம் இதயத்துக்குள் கடத்திவிடுகிறது.