கண்ணை நம்பாதே திரை விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம், கண்ணை நம்பாதே. இது, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. உதயநிதியுடன் சேர்ந்து ஆத்மிகா, பூமிகா, சதீஷ், பிரசன்னா, ஶ்ரீகாந்த் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரில்லர் பாணியில் எடுக்கப்படிருக்கும் கண்ணை நம்பாதே திரைப்படம்.
ஒரு கொலையை மறைக்க இன்னொரு கொலை.. இதற்கிடையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி ஹீரோ உதயநிதி.. சிக்கலில் இருந்து தப்பித்தாரா விவரிக்கிறது பரபரப்பான திரைக்கதை.
மழை பெய்யும் ஓர் இரவில் கார் ஓட்ட முடியாமல் தவிக்கும் கவிதாவிற்கு (பூமிகா) உதவி செய்கிறார், கதையின் நாயகன் அருண் (உதயநிதி). தன்னை வீட்டில் ட்ராப் செய்யும் அருணிடம், காரை எடுத்துச் சென்று நாளை காலை திருப்பி தருமாறு கூறுகிறார் கவிதா. மறுநாள் காரின் டிக்கியை திறந்து பார்த்தால் பூமிகா சடலமாக கிடக்கிறார். அந்த ஒரு இரவில் நடந்தது என்ன? கவிதாவின் கொலைக்கு காரணம் யார்? போன்ற பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது கண்ணை நம்பாதே படத்தின் திரைக்கதை.
யார் என்றே தெரியாத ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும் உதயநிதி, அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் போது, மேலும் பல பிரச்சனைகள் அவரை துரத்த, அதில் இருந்து எப்படி தப்பித்தார்? அதன் பின்னணி என்ன? என்பதை பரபரப்பாக சொல்வதே ‘கண்ணே நம்பாதே’ படத்தின் கதை.
பக்கத்து வீட்டு பையன் என்று சொல்லும் அளவுக்கு இயல்பான வேடங்களில் மிக இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கும் உதயநிதி, இந்த படத்திலும் அவ்வாரே நடித்து அசத்துகிறார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது? என்று தெரியாமல் குழம்பும் காட்சிகளிலும், பிரச்சனையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகளிலும் தனது இயல்பான நடிப்பு மூலம் கதைக்கு பலம் சேர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகா, உதயநிதியுடன் சில காதல் காட்சிகள், ஒரு பாடல் என்று அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.உதயநிதியுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னாவின் வேடமும், அதில் அவர் நடித்த விதமும் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்த உதவியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், சிறிய சம்பவத்தை வைத்துக்கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் யூகிக்க முடியாத க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார்,சிறிய வேடமாக இருந்தாலும் கதையில் முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களை கையாண்ட விதமும், காட்சிகளை வடிவமைத்த விதமும் ரசிக்க வைக்கிறது.