Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

புதுவைத் தமிழ் சங்க அரங்கத்தில் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

Posted on November 6, 2022

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனர் மற்றும் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் வெற்றித் தமிழர் பேரவையின் புதுச்சேரிப் பிரிவின் சார்பாக (04-11-2022) அன்று வெள்ளிக் கிழமை மாலை புதுவைத் தமிழ் சங்க அரங்கத்தில் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்களின் “சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்” நூல் வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுச்சேரி, வெற்றித் தமிழர் பேரவையின் அமைப்பாளர் தீந்தமிழ்த் தென்றல் தி.கோவிந்தராசு அவர்களின் வரவேற்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது.
புதுச்சேரி அரசின் மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் தகைமிகு வே..பொ. சிவக்கொழுந்து அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். எழுத்தாளர் ராசி அழகப்பனின் சந்திப்பில் கிடைத்த சிகரங்கள் நூலினைப் புதுச்சேரி அரசின் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் தகைமிகு க.லட்சுமி நாராயணன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் தமது சிறப்புரையில்
எழுத்தாளர் ராசி.அழகப்பன் அவர்களின் கடந்த நாற்பதாண்டுக் கால கலை, இலக்கியப் பணிகளைப் பாராட்டியதோடு நூலில் இடம்பெற்றுள்ள தலைசிறந்த ஆளுமைகளுடனான தமது நட்பினைச் செய்ந்நன்றியோடு நூலாசிரியர் பதிவுசெய்துள்ள பண்பினை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கவிப்பேரரசு தலைமையில் இயங்கும் வெற்றித் தமிழர் பேரவையின் செயல்பாடுகள் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நூலினைப் பெற்றுக் கொண்டு பைந்தமிழ்க் காவலர் தகைமிகு வீர. பாலகிருட்டிணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நூலின் அறிமுக உரையினை வழங்கிய நற்றமிழ் நாவலர் முனைவர் நா.இளங்கோ அவர்கள் தமிழில் அதிக முக்கியத்துவம் பெறாத கட்டுரை என்ற இலக்கிய வகைமையை ஆசிரியர் திறம்படக் கையாண்டுள்ள சிறப்பையும் பல்வேறு ஆளுமைகளைப் பதிவுசெய்யும் இந்நூற் கட்டுரைகளின் ஊடாகத் தமது வாழ்க்கை வரலாற்றை நுட்பமாக எழுதிச் செல்லும் நேர்த்தியையும் பாராட்டினார்.
விழாவிற்குத் தகைமிகு சு. கோதண்டராமன் ப. காண்டீபன் க. மதன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறிஞர் இரா. தேவதாசு, காவியப் பாவலர் இராமதாசு காந்தி, வேட்டவலம் கவிஞர் முகில்வண்ணன், தகைமிகு ம. வீரட்டீஸ்வரன், தமிழாசிரியர் சின்ன சேகர், பேராசிரியர் செ. குமரன் ஆகியோர் நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நூலாசிரியர் ராசி. அழகப்பன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அச்சமயம் தமது நாற்பதாண்டுக் காலப் போராட்ட வாழ்க்கையில் பல்லாற்றானும் துணைநின்று என்னை உயர்த்திவிட்ட சிகரங்களை நினைவு கூர்ந்ததில் தாம் பெரிதும் மனநிறைவு எய்தியுள்ளதாக நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். நிறைவாகக் கவிஞர் குமரவேல் பட்டாபி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாக வந்திருந்து நூல் வெளியீட்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
புதுச்சேரி வெற்றித் தமிழர் பேரவையின் பொறுப்பாளர்கள் நூல் வெளியீட்டு விழாவினைச் சிறப்பாகத் திட்டுமிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விழாவினை வெற்றியடையச் செய்தனர்.

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme