ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு  இல்லையா? – சீமான் கேள்வி

Seeman_indiastarsnow.com

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாய் முடங்கியிருக்கிற சூழலில் மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அரசின் அனுமதிச்சீட்டு (E-Pass) பெற வேண்டிய விதியிலிருந்து சிலருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு வருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு, அதைக் கடைப்பிடித்து முன்னுதாரணமாக இருக்கவேண்டிய சிலர் தான்தோன்றித்தனமாக நடந்து விதிகளைப் புறந்தள்ளுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

சாத்தான்குளத்தில் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் படுகொலைக்கெதிராக நாடே குமுறிக் கொந்தளித்துக்கிடக்கையில் அதற்கு நீதிகேட்டு நிற்கிற தருணத்தில் எதிர்க்கட்சியினருக்கு மட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி வழங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஐயா கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு மட்டும் சாத்தான்குளம் செல்வதற்குச் சிறப்பு அனுமதி எந்தடிப்படையில் வழங்கப்பட்டது? மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அனுமதிச்சீட்டுத் தேவைப்படும் நிலையில் தொண்டர்கள் புடைசூழ 300 கிலோ மீட்டர் தாண்டிச் செல்வதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது? அத்தியாவசியப்பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர்வரை வாகனங்களைப் பயன்படுத்தாது நடந்துசெல்ல வேண்டும் எனக் கெடுபிடி நிலவும் மாநிலத்தில் சென்னையிலிருந்து சாத்தான்குளம்வரை எப்படிப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது? தம்பி உதயநிதி அனுமதிச்சீட்டுப் பெறாமல்தான் பயணித்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரையிலான தொலைதூரத்தில் ஒரு இடத்தில்கூடக் காவல்துறை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி அதுகுறித்து விசாரிக்கவில்லையா? சோதனை செய்யவில்லையா? மதுரையில் விடுதியில் தங்கியிருந்து சென்றார் என்கிறார்கள் அங்கும்  யாரும்  பரிசோதிக்கவில்லையா? அனுமதிச்சீட்டு இல்லாத ஒருவரை எவ்வாறு சாத்தான்குளத்திற்குப் பயணம் செய்யவிட்டார்கள்?

சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்பவர்களைக் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை  தனிப்படுததப்படுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அந்த நடைமுறை ஏன் கனிமொழி, உதயநிதி, அழகிரி பயணிக்கும் பொழுது கடைபிடிக்கவில்லை?. சென்னையில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்துவரும் வேளையில் மீண்டும் சென்னை திரும்பிய இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா? குறைந்தபட்சம் 14 நாட்கள் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டார்களா? ஊரடங்கு, சமூக இடைவெளி, தனித்திருத்தல் என அனைத்தை விதிகளையும் மீற இவர்களை அனுமதித்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது? நாளை இவர்களால் மற்றவர்களுக்கோ மற்றவர்களால் இவர்களுக்கோ கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? தமிழகமுழுக்கப் பொது முடக்க விதிகளை மீறியதற்காகப் பல லட்சம் வழக்குகள் அடித்தட்டு உழைக்கும் எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மக்கள் மேல் பதியப்பட்டிருக்கிறது அப்படியான வழக்குகள் இவர்கள் மேல் பாயாததேன் என்ற கேள்விக்கு என்ன விடையுண்டு?

சாத்தான்குளம் படுகொலையைக் கேள்வியுற்றவுடனே, அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்கூறி களத்தில் நிற்க வேண்டும் எனப் பெருவிருப்பமும், பேரார்வமும் கொண்டேன். ஊரடங்கு விதிகளைக் கடைபிடிக்க வேண்டுமென்பதால், அப்பயணத்தைத் தவிர்த்து வந்தேன். ஆனால், எதிர்க்கட்சியினர் நாடறிய அவ்விதிகளை முழுவதுமாகப் புறந்தள்ளிப் பயணித்துள்ளதும், அதற்குத் தமிழக அரசு அனுமதித்துள்ளதும் அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்துத் தமிழக அரசு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சிSeeman_indiastarsnow.com

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *