Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி கேரளாவைப் பொறுத்தவரை நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி

Posted on May 20, 2019

திருவனந்தபுரம்:


கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறாகவே இருந்துள்ளன. அதனால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாட்டின் 17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

80 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜ கூட்டணி 58 இடங்களையும், சமாஜ்வாடி – பகுஜன்சமாஜ் கூட்டணி 20 இடங்களையும் வெல்லும் என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 16-20 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும், அங்கு பாஜ முதல் முறையாக கணக்கை தொடங்கி வரலாறு படைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் பாஜ 18-20 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜ வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பீகாரில் பாஜ கூட்டணிக்கு 30 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத்தில் பாஜ அமோக வெற்றி பெறும் என்றே கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் இதற்கு முன் தவறாகவே அமைந்துள்ளன. 2004 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புத் தெரிவித்தது. ஆனால் என்ன நடந்தது? அதனால் 23-ம் தேதிவரை காத்திருப்போம். கேரளாவைப் பொறுத்தவரை நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. சபரிமலை விவகாரம் தேர்தலில் பிரச்னை இல்லை. அதை யார் யார் பிரச்னை ஆக்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று அவர் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார். கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து பெரும்பாலான வாக்கு கணிப்புகள் தவறாகவே இருந்துள்ளன. ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது கவலையளிக்கிறது என்றார்.

மம்தா பானர்ஜி கருத்து:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டியில், ‘‘கருத்துக் கணிப்புகள் என்பது கிசுகிசுக்களை போன்றது. இதுபோன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கருத்துக்கணிப்புகள் மூலம் பல்லாயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதுதான் அவர்களின் திட்டம். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இணைந்திருந்து வலிமையாக நிற்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
  • Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission
  • குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!
  • *_Avengers Fans, Assemble One More Time!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme