‘வெப்பன்’ திரை விமர்சனம்

நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’ (Weapon). இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சாதாரண மனிதனுக்கு உள்ள சக்திகளைத் தாண்டி, சூப்பர் ஹியூமன்கள் எனப்படும் மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என அழுத்தமாக நம்பும் வசந்த் ரவி, தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் வலம் வருகிறார். இன்னொரு புறம் பளாக் சொசைட்டி என்ற பெயரில் ரகசியக் குழு ஒன்றையும், பயோடெக் நிறுவனத்தின் மூலம் மனிதர்களை பலிகடாவாக்கும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் வில்லன் ராஜீவ் மேனன்.

தேனியில் நிகழும் அதிசய நிகழ்வு ஒன்றைத் தொடர்ந்து, தன் சேனலுக்காக கண்டெண்ட் தேடி அங்கு வசந்த் ரவி பயணிக்க, மற்றொரு புறம் அடுத்தடுத்து உயிரிழக்கும் தங்கள் ப்ளாக் சொசைட்டி நபர்களுக்கு ஆபத்தாக ஒரு சூப்பர் ஹியூமன் தான் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து ராஜீவ் மேனன் ஆட்களும் பயணிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, இருவரும் தேடிச் சென்ற சூப்பர் ஹியூமன் நபரைக் கண்டறிந்தார்களா, வசந்த் ரவிக்கும் இந்தக் குழுவுக்கும் என்ன சம்பந்தம், தேனியில் காட்டுக்குள் அமைதியாக வாழ்க்கை நடத்தி வரும் சத்யாஜ் யார் என்பன போன்ற கேள்விகளுக்கு ட்விஸ்ட்டுகள் மற்றும் சர்ப்ரைஸ்களுடன் பதில் ‘வெப்பன்’ ?

படத்தின் நாயகன் வசந்த் ரவி. அவர் ஒரு சாதாரண யூடியூபராகவும், சூழலியல் பற்றிக் கற்பித்தலும் முதல் பாதியில் “இவர் என்ன துணைக் கதாபாத்திரம் போல் வருகிறார்!” என யோசிக்க வைக்கும் வசந்த் ரவி, இரண்டாம் பாதியில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

சீக்ரெட் சொசைட்டி தலைவராக இயக்குநர் ராஜீவ் மேனன் நடிப்பு நன்று. ராஜீவ் பிள்ளை ஆஜானுபாகுவான உடல்வாகில் கவர்கிறார். மற்ற நடிகர்களின் நடிப்பும் ஓகே ரகம். இதுபோன்ற படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் சற்று நன்றாக இருந்திருந்தால் இன்னும் படத்துடன் ஒன்ற வைத்திருக்கும். முக்கிய விஷயங்களை வசனங்கள் மூலமே வெளிப்படுத்தி இருப்பது அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் தாண்டி பின்னணி இசை நன்றாக உள்ளது. பிரபு ராகவின் ஒளிப்பதிவும் ரசிக்கும் வகையில் உள்ளது.