Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

’RX’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

Posted on November 9, 2026

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு RX எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தலம், உபென்னா மற்றும் மாபெரும் வெற்றிபெற்ற புஷ்பா உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம், பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்கத்திற்கும், வலுவான கதைக்களங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தெலுங்கு மட்டுமல்லாது, பிற மொழித்திரைப்படங்களையும் மைத்ரி நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் அஜித் குமார் நடித்த ’குட் பேட் அக்லி’ மற்றும் ’மொத ராத்திரி’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரித்து தமிழ் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ளது. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து RX திரைப்படத்தை தயாரிக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், புதிய திறமையாளர்களுக்கும், புதுமையான கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். படைப்புச் சுதந்திரம், தயாரிப்பு அனுபவம், நிதி வலிமை மற்றும் விரிவான சந்தை வாய்ப்புகள் ஆகியவை ஒன்றிணைவதன் மூலம், வழக்கமான வணிகத் திரைப்படங்களின் எல்லைகளைக் கடந்து தனித்துவமான கதைகளை உருவாக்க இதுபோன்ற கூட்டணி உதவும்.

RX திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அவருடன் நடிகர் நாசர் இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘Truth Always Demands a Voice!’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் கதைக்களத்தை வெளிப்படுத்தாமல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம் ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷாமீரா ஐயப்பன் வசனங்கள் எழுதியுள்ளார். ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் சென்னையில் நிறைவடைந்துள்ளது.

தொழில்நுட்பக் குழுவில் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பாளராகவும், எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவாளராகவும், ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பாளராகவும், கே. மனோஜ் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கும் இப்படம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. பிரதீப் பூபதி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

RX திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் விரைவில் வெளியாகும்.

  • ’RX’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு
  • RX – TRUTH ALWAYS DEMANDS A VOICE
  • ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்
  • Passion Studios, Axess Film Factory, Good Show, Dangal TV & RDC Media present
  • Thee Kural exciting is the opportunity it creates for emerging voices to bring their own realities, perspectives and identities to the forefront
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme