
நடிகர் நெப்போலியன் முதன்மை கதா பத்திரமாக நடித்துள்ள ‘அமெரிக்கா ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*
ஜீவன் பிலிம்ஸ் (Jeevan Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில், மூத்த நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ (America Aavi) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட (Trailer) வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இப்படத்தின் இசைத் தட்டை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணைத் தூதரான திரு. டாக்கா ஹாசி (Taka Hasi) மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக வெளியிட, அதனைப் பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.
முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமிதத்துடன் தயாராகியுள்ள இப்படம், ஒரு காமெடி ஹாரர் த்ரில்லர் (Comedy Horror Thriller) ரகப் படமாகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் நெப்போலியனுடன், 200-க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் தமிழ் மற்றும் சர்வதேசப் புதுமுக நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடித்திருக்கும் அனைவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டாக்டர்கள், சயின்டிஸ்ட்கள், மற்றும் பல்கலைக்கழகப் புரொபசர்கள் எனப் புகழ் பெற்ற சர்வதேச நிறுவனங்களில் மிகவும் உயரிய பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்கள் ஆவர். திங்கள் முதல் வெள்ளி வரை அவர்கள் தங்களது அலுவலக வேலைகளில் பிஸியாக இருந்தாலும், வார இறுதி நாட்களில் ஒதுக்கித் தந்த ஓய்வு நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு, ஏறத்தாழ 75 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் நடத்தி இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தியத் தமிழர்கள் மட்டுமின்றி, ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அறிமுக நடிகர்களும் இதில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் குணால் நெப்போலியன்,
“‘அமெரிக்க ஆவி’ என்ற டைட்டிலைக் கேட்டவுடன் ஆவி என்றால் நாம் வெறும் பேய் என்று மட்டுமே பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் திரைப்படத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படியான பேய் மற்றும் பிசாசு காட்சிகள் இருக்கின்றன. அதே தருணத்தில், அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆவி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு வந்து குடியேறி, தங்களது அசாத்திய உழைப்பால் வெற்றியை நோக்கித் தொடர்ந்து பயணித்து, இறுதியில் சாதித்துக் காட்டும் மனிதர்களின் உன்னத முயற்சியையும், அவர்களது மன உறுதியையும் குறிக்கும் ஒரு குறியீடாகவும் இந்த ஆவி என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.