Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!

Posted on September 12, 2026

கீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணம் – அஜயன் பாலா !!

நாகராஜ் போல் என்னால் கதை சொல்ல முடியாது – இயக்குநர் சசி !!

‘ஆகாயம்’ – இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது!

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இயக்குநர் தினந்தோறும் நாகராஜ்
தற்போது ‘ஆகாயம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள அவர், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார்.

இன்றைய விழாவில்

தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பேசியதாவது..,

“இது என்னுடைய முதல் மேடை என்பதால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘ஆகாயம்’ படத்தின் டிரைலர், பாடல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மீடியாவின் ஒரு செய்தி அல்லது கருத்து ஒரு விஷயத்தையே ஒரே நாளில், சில நேரங்களில் ஒரு நொடியில் கூட மாற்றக்கூடியது. அந்த மீடியாவை நம்பித்தான் என்னுடைய முதல் படைப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு உங்கள் வாழ்த்தும் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..,

“தினந்தோறும் நாகராஜை நான் சுமார் 25 ஆண்டுகளாக நண்பராக அறிந்திருக்கிறேன். பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவர் கதை சொல்லும் விதம் என்னை மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு காட்சியையும் கண்முன்னே நடப்பது போல் மிக நுணுக்கமாக விவரிப்பார். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் அவரைச் சுற்றி இருந்து, அவர் கதை சொல்வதைக் கேட்பதற்காக ஆர்வத்துடன் காத்திருப்போம். அந்த அளவுக்கு அவரது கதை சொல்லும் திறமை எங்களை வசீகரித்தது” என்றார்.

மேலும், “‘தினந்தோறும்’ திரைப்படம் வெளியான முதல் நாளில், திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் நாகராஜை தூக்கிக் கொண்டாடியதை என் கண்முன்னே பார்த்தேன். அன்றைக்கு நாகராஜ் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், அதன்பிறகு நடந்தது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு கீழே செல்ல முடியுமோ, அந்த அளவுக்கு நாகராஜ் சென்றார். அவருடைய திறமை இருந்தும், தனது திறமையைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து, “நாங்களும் சசியும் கூட ஒரு கட்டத்தில் நாகராஜ் முடிந்துவிட்டார் என்றுதான் நினைத்தோம். ஆனால், எவ்வளவு கீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார். ஒருகாலத்தில் நாங்கள் ஹீரோவாகப் பார்த்த நாகராஜ், இன்று மீண்டும் தனது படைப்புடன் வந்திருக்கிறார். இந்த விழா மற்றவர்களுக்கு ஒரு சாதாரண விழாவாக இருக்கலாம்; ஆனால் நாகராஜைப் பொறுத்தவரை இது ஒரு புதிய பிறப்பு போன்றது” என்றார். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாலசேகர் பேசியதாவது..,
“நாகராஜ் அண்ணாவை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். பார்த்தவுடனேயே அவரது பேச்சு, பழகும் விதம், கதை சொல்லும் திறன், காட்சிகளை விவரிக்கும் விதம் என அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. சினிமாவில் எனக்கு குரு என்று யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் அது நாகராஜ் அண்ணா மட்டும்தான். அவரிடமிருந்து வசனம், மாடுலேஷன், கதை சொல்லும் விதம் என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களையும், பெண்களுக்கான வசனங்களையும் மிகவும் நாகரிகமாகவும் கச்சிதமாகவும் அமைத்திருப்பார்” என்றார்.

மேலும், “‘தினந்தோறும்’ படத்தில் நாகராஜ் சார் நடித்த கதாபாத்திரம் தெலுங்கில் ‘மனிஷி’ என்ற பெயரில் வெளியானது. அந்தப் படத்தில் அவருடன் நடித்தவர்தான் இன்று மிகப்பெரிய ஹீரோவாக இருக்கும் ரவிதேஜா. அந்த அளவுக்கு மிகப்பெரிய பெயர் பெற வேண்டிய திறமை கொண்டவர் நாகராஜ் சார். இடையில் அவரது வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்தாலும், அவர் சினிமாவை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை. சினிமா ஒருவரை கடைசி வரை கைவிடாது என்பதற்கு நாகராஜ் சாரே மிகச் சிறந்த உதாரணம். இன்று ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கி அனைவரையும் அழைத்து அமர வைத்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, “நாகராஜ் சாரின் திறமையை மட்டுமே பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்திரன் சாருக்கும் கார்த்திகா தேவி அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். மற்ற துறைகளில் அனுபவமுள்ளவர்களைத் தேடிப் பார்க்கிறோம்; ஆனால் சினிமாவில் மட்டும் அனுபவம் வாய்ந்தவர்களைத் தவிர்ப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதைத் தாண்டி நாகராஜின் திறமையை நம்பி அவரைத் தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குரியது. அவரது படங்களில் எப்போதும் சமூக அக்கறையும், சமூக விஷயங்களைப் பேசும் வசனங்களும் இருக்கும். சும்மா ஒரு படத்தை உருவாக்காமல், ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பார். அவரது வாழ்க்கையில் அவருக்கு துணையாக இருந்த குடும்பத்தின் ஆதரவும் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. ‘ஆகாயம்’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்; நாகராஜ் சார் மீண்டும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் சற்குணம் பேசியதாவது..,

“‘ஆகாயம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி எனது தம்பியும், உறவினரும் ஆவார். எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு உள்ளது. தனது முதல் தயாரிப்பாக ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள தம்பியை தமிழ் சினிமா சார்பாக வரவேற்று வாழ்த்துகிறேன்” என்றார்.

மேலும், “‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தினந்தோறும் நாகராஜ், ‘ஆகாயம்’ படத்தின் மூலமாகவும் அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும். இந்தப் படம் அவருக்கு மீண்டும் ஒரு முக்கியமான வெற்றியாக அமைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் “‘ஆகாயம்’ படத்தின் வெற்றி ஆகாயம் போல உயரமாக இருக்கட்டும்” அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள்.

நடிகர் ஶ்ரீராம் கார்த்திக் பேசியதாவது..,

“நாகராஜ் சார் போன்ற ஒரு பெரிய இயக்குநருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த கதாபாத்திரத்தை எவ்வளவு நேசித்து உருவாக்கியிருக்கிறார் என்பதை அவர் ஸ்கிரிப்ட் சொல்லும்போதே உணர்ந்தேன். படப்பிடிப்பின் கடைசி நாளில் கூட, நான் அவர் நினைத்தபடியே அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறேன் என்று கூறி என்னை பாராட்டியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவரது இயக்கமும், குறிப்பாக வசனங்களும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். சிறிய வசனங்கள்கூட ஒரு காட்சியை எப்படி உயர்த்துகின்றன என்பதை இந்தப் படத்தில் நேரடியாகப் பார்த்தேன்” என்றார்.

மேலும், “தயாரிப்பாளர்கள் ஜெய் சார், கார்த்திகா தேவி மேம் இருவரும் மிகவும் நல்ல மனம் கொண்டவர்கள். அவர்களுடைய நல்ல மனதிற்காக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியையும் லாபத்தையும் கொடுத்து, அவர்கள் தொடர்ந்து பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரின் பாடல்களுக்கு நான் நீண்ட காலமாக ரசிகன். அவர் இசையமைக்கும் படத்தில் நான் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் சார் முதல் நாளிலிருந்து நாகராஜ் சாருடன் இணைந்து இந்தப் படத்திற்காக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். டிரைலர் மற்றும் பாடல்களில் அவரது உழைப்பு தெரிகிறது” என்றார்.

தொடர்ந்து, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், அனைவருக்கும் நன்றி. ஆலிஷா மிராணி சிறப்பாக நடித்திருக்கிறார்; அவர் நிச்சயம் பெரிய இடத்துக்கு வருவார். கனிகா மேமுடன் எனக்கு நிறைய காட்சிகள் உள்ளன. தீபா அக்காவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கன்னி மாடம்’ படத்திலிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் அளித்து வரும் பத்திரிகை நண்பர்கள் இந்தப் படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். ‘ஆகாயம்’ அன்பை மட்டுமே வளர்க்கும் அழகான படம். இந்தப் படத்தை நீங்கள் நிச்சயம் ஆதரித்து வெற்றிப் படமாக்குவீர்கள் என்று நம்புகிறேன். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மூத்த திரையுலகினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் கிருஷ்ணா பேசியதாவது..,

“நாகராஜ் சாரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு புன்னகை வந்துகொண்டே இருக்கும். அவ்வளவு பாசிட்டிவான மனிதர். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவரைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவருடனான எனது நட்பு ‘மின்னலே’ படத்திலிருந்து தொடங்கியது. அந்தப் படத்தில் அவர் வசனகர்த்தா, நான் இணை இயக்குநர். அதன்பிறகு என்னுடைய எல்லா கதைகளையும் முதலில் அவரிடம் சொல்லி, அவரது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டு, அதன்படி பல மாற்றங்களைச் செய்திருக்கிறேன். அவர் மிகவும் கிரியேட்டிவான மனிதர்” என்றார்.

மேலும், “‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகா தொடர்பான ஒரு முக்கியமான காட்சியில், அந்தக் காட்சி இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாகராஜ் சொன்ன ஒரு சிறிய யோசனைதான் பின்னர் திரையரங்கில் கைதட்டலைப் பெற்றது. அந்தக் காட்சிக்குப் பின்னால் நாகராஜின் யோசனை இருந்ததை இத்தனை காலமாக சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை; இன்று அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் ஒரு சிறந்த இயக்குநர், எழுத்தாளர் மட்டுமல்ல, மிகச்சிறந்த நடிகரும் கூட. ‘தினந்தோறும்’ படத்தில் அவரது கதாபாத்திரம்தான் ஷோ ஸ்டீலர். அவருடன் நடித்துவிட்டு அவரைத் தவிர்த்து யாரும் பெயர் வாங்கிவிட முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கும்” என்றார்.

,“ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாகராஜ் மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அவரது எழுத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா இருவரும் மிகவும் சிறப்பாகவும் எக்ஸ்பிரஸிவாகவும் நடித்திருக்கிறார்கள். கனிகா மேம் மற்றும் தீபா அக்காவின் நடிப்புக்கும் நான் ரசிகன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது..,

“இந்தப் படத்தில் என்னை இசையமைக்க அழைத்த தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் இயக்குநர் நாகராஜ் சாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நாகராஜ் சாரை முதன்முதலில் சந்தித்தபோது, அவருடன் பணியாற்றுவது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்துக் காட்டி கதை சொன்ன விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் அவர் வாழ்ந்தது போல உணர்வார். அதனால் அவர் கதை சொல்லும்போது முழு கவனத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன்” என்றார்.

மேலும், “பாடல்கள் உருவாக்கத்திலும் நாகராஜ் சார் முழுமையாக ஈடுபட்டார். ரெக்கார்டிங்கின்போதும் இசைக்கலைஞர்களுடன் அமர்ந்து, ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, சரியானதை தேர்வு செய்தார். பின்னணி இசையிலும் படத்தின் கதாபாத்திரங்களையும், நடுத்தரக் குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையையும் மனதில் வைத்து பணியாற்றினோம். ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் பின்னணி இசையிலும் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.

“நாகராஜ் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ‘தினந்தோறும்’ படத்திலிருந்தே அவரது படைப்புகளுக்கு நான் ரசிகன். இந்தப் படம் நிச்சயமாக தேசிய விருது பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நண்பர்கள், இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

இயக்குநர் சசி பேசியதாவது..,

“என்னுடைய நண்பர் நாகராஜுக்காக, ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு ஒரு நண்பனாக முதலில் நன்றி சொல்ல வேண்டும். இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரின் பாடல்களை நான் நிறைய கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் கதைக்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாகவும், மக்கள் எளிதில் ரசிக்கும் வகையிலும் இருக்கின்றன. இந்தப் பாடல்கள் நிச்சயம் மக்களைச் சென்றடையும். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்றார்.

“நாகராஜை நான் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். அப்போது அவர் ஒரு கதையை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சொன்னார். அவர் கதை சொன்ன விதம் என்னை அப்படியே பிரமிக்க வைத்தது. ‘என்னால் இப்படி ஒருபோதும் கதை சொல்ல முடியாது; இப்படி கதை சொல்லத் தெரியவில்லை என்றால் நல்ல இயக்குநராக முடியாது’ என்று நினைத்து, அன்றே அவரைப் பற்றி நண்பர்களிடம் பெருமையாகப் பேசினேன். நாகராஜ் எனக்கு நண்பர் என்றாலும், அவரை நான் மிகப்பெரிய கிரியேட்டிவ் மனிதராகப் பார்க்கிறேன். அவருடைய கதைகளில் இருக்கும் சென்சிபிலிட்டியும், குறிப்பாக பெண் கதாபாத்திரங்களில் இருக்கும் கண்ணியமும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

“சில இயக்குநர்கள் தப்பாக படங்களை ஆனால் படங்களை எடுக்கவே மாட்டார்கள்; அப்படி தவறான படமே எடுக்க முடியாத இயக்குநராக நாகராஜை நான் பார்க்கிறேன். சில படங்கள் திரையரங்கில் ஓடி முடிந்துவிடும்; ஆனால் சில படங்கள் முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட படங்களை உருவாக்கும் இயக்குநர்தான் நாகராஜ். ‘ஆகாயம்’ படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். நீங்களும் எதிர்பாருங்கள். நாகராஜ் நம்மை ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.

சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,

“‘ஆகாயம்’ படத்தை தயாரித்துள்ள ஜெயச்சந்திரன், கார்த்திகா தேவி இருவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல கலைஞனை, ஒரு முக்கியமான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா அழைத்து வந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் ரகுநந்தன். அவரது இசைக்கு நான் நீண்ட காலமாக ரசிகன். அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர். அவருக்கான மிகப்பெரிய உயரத்தை தொடும் நேரம் நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன்” என்றார்.

மேலும், “நாகராஜை ஒரு காலகட்டத்தில் சந்திக்கும்போது மிகவும் சங்கடமாக இருந்திருக்கிறது. அவரது வாழ்க்கையில் சில தவறுகள் நடந்தன; அதில் குடிப்பழக்கமும் ஒன்று. குடி நிச்சயமாக தவறுதான். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்திருக்கிறார். நான் அவரை நேர்காணல் செய்தபோது, தனது வாழ்க்கையை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வாழ்க்கையில் விழாதவர்கள் யாரும் இல்லை; விழுந்த பிறகு எழுந்து நிற்பவன்தான் உண்மையான மனிதன். அதை நாகராஜ் சாதித்துக் காட்டியிருக்கிறார். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்”.

தொடர்ந்து, “நாகராஜின் திறமையை சசி, கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் இங்கே பாராட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திறமைசாலிக்கு நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததுதான் எனக்கு புரியாத விஷயம். இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிகச் சிறந்த ஒரு யூனிட்டை அவர் அமைத்திருக்கிறார். நல்ல கதாநாயகன், அழகாகத் தமிழ் பேசக்கூடிய கதாநாயகன் என இந்தப் படத்தில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நாகராஜ் மிகப்பெரிய திறமைசாலி என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று; அவருக்கு தேவைப்பட்டது மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்புதான். அந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் எனது நன்றி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஜெயச்சந்திரன் தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..,

“‘ஆகாயம்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கும் நாகராஜை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தபோது, சினிமா மீதான அவரது ஆர்வமும், கதை சொல்லும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்தது. நாகராஜ் மிகப்பெரிய திறமைசாலி. அவரது ‘தினந்தோறும்’ படத்தில் அவர் நடித்த விதமும், கதாபாத்திரத்தை கையாண்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடையில் அவரது வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதிலிருந்து அவர் மீண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்றார்.

மேலும், “சினிமாவில் வெற்றியடைவதற்கு ஒரு திறமை வேண்டும்; அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் இன்னொரு திறமை வேண்டும். பலர் வெற்றியை அடைகிறார்கள், ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகிறார்கள். ஒருவர் தனது வெற்றிக்கான காரணத்தையும், தோல்விக்கான காரணத்தையும் தானே ஆராய வேண்டும். அந்த வகையில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றங்களை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் வந்திருக்கும் நாகராஜ் இன்று ஒரு தெளிவான மனிதராக நிற்கிறார். ‘தினந்தோறும்’ நாகராஜ் வெற்றியை அடைந்தவர் என்றால், ‘ஆகாயம்’ நாகராஜ் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறமையுடன் வந்திருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து, “தமிழ் சினிமாவில் இன்று வெற்றி பெற்றிருக்கும் பல இயக்குநர்களின் வளர்ச்சிக்குப் பின்னால் நாகராஜின் பங்களிப்பும் இருக்கிறது. பலருக்கு தனது திறமையின் மூலம் உதவியிருக்கிறார். ‘தினந்தோறும்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்தபோதே, இயல்பான வசனம், எதார்த்தமான நடிப்பு, உடல்மொழி என அனைத்திலும் அவர் ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு கலைஞர் மீண்டும் ‘ஆகாயம்’ மூலம் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நாகராஜ் மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும். இனிமேல் அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி, வெற்றி, வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் நாகராஜ் பேசியதாவது..,

“மீண்டும் இந்த இடத்தில் என்னை நிற்க வைத்த அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி அவர்கள், நான் சொன்ன கதையை சுமார் மூன்று மணி நேரம் கேட்டுவிட்டு, அடுத்த நிமிடமே இந்தப் படத்தை நான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நான் பல படங்கள் செய்திருக்கலாம், நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் படம் எடுப்பேன்’ என்ற என்னுடைய பிடிவாதத்தை ரசித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். டிரைலரைப் பார்த்தவுடனேயே அவர் படத்தின் மீது வைத்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது” என்றார்.

மேலும், “என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. குடித்தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்சனை வரும், குடும்பம் இரண்டாகும். அதனால் குடியை ஒருபோதும் கொண்டாட வேண்டிய விஷயமாக பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் தவறிவிட்ட ஒருவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்ற எண்ணத்திற்கும், அவருக்கு ஒரு பெரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்தப் படம் ஒரு குரலாக இருக்கும். என்னால் மீண்டும் வர முடிந்தது என்றால், என்னைப் போல இன்னும் நிறைய பேராலும் முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து, “இந்தப் படத்தில் குடியைப் பற்றிப் பேசுவது கதையாகவோ, விளம்பரமாகவோ, போரடிக்கும் வகையிலோ இருக்காது. ஒரு அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு சிறிய விஷயமாகத்தான் அது இருக்கும். அதேபோல் அரசியலும் இந்தப் படத்தில் இருக்கிறது. நாம் நின்றாலும், உட்கார்ந்தாலும், பேசினாலும், சிரித்தாலும், ஓடினாலும் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் எல்லாவற்றையும் தாண்டி அன்பைப் பற்றித்தான் பேசுகிறது. சசி, பாலசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் இன்று எனக்காக வந்து கை கொடுத்திருப்பது சினிமாவையும், தொழிலையும் தாண்டிய அன்பு. இந்த உலகம் அன்பால் உருவானது என்று நான் மீண்டும் நம்புகிறேன். அதே அன்பால் தான் விஜய் தமிழகத்தின் முதல்வரானார். அந்த அன்பைத்தான் ‘ஆகாயம்’ பேசுகிறது. இந்தப் படத்தை நீங்கள் பார்த்துவிட்டு நிச்சயமாக ரசிப்பீர்கள். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார். என்னை நம்பி உடன் நின்ற கார்த்திக் நல்லமுத்து அவர்களுக்கு நன்றி.

‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், ‘மெய்யழகன்’ படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, ‘மகாராஜா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சென்னை டு சிங்கப்பூர்’, ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, ‘ஆகாயம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘நீர்ப்பறவை’, ‘அயோத்தி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏக்நாத், சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ‘ஒரு நொடி’, ‘ஜென்ம நட்சத்திரம்’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார். நடன அமைப்பை மணிகண்டன் மேற்கொண்டுள்ளார்.

இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக நடைபெற்ற நிலையில், ‘ஆகாயம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
  • Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme