Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!

Posted on June 24, 2026

ஜூன் 24, 2026: நெட்ஃப்ளிக்ஸ் தனது முதல் தெலுங்கு நகைச்சுவைத் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. மாலிக் ராம் இயக்கியுள்ள இத்தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் மட்டுமே வெளியாகிறது.

இந்த நகைச்சுவை கலந்த கதையில் சுப்பிரமணியம் ’சுப்பு’ சில்லுகுரி ராவ், எந்தவொரு ஆசிரியரும் செல்ல விரும்பாத ஒரு இடமான ‘மாகிபூர்’ (முற்றிலும் கற்பனையான) கிராமத்தில் பணி அமர்த்தப்படுகிறார். குடும்பத்தினர் மத்தியில் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உறுதியுடன் அங்கு செல்லும் சுப்புவுக்கு, அக்கிராமத்தினருக்கு பாலியல் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற மிகவும் சங்கடமான பணி காத்திருக்கிறது. அவரது வகுப்பறையில் ஒவ்வொரு கேள்வியும் விவாதமாக மாறுகிறது. ஒவ்வொரு வதந்தியும் மின்னல் வேகத்தில் பரவுகிறது. ரகசியமாக எதுவும் நீண்ட நேரம் இருக்காது. அனுபவம் குறைவாக இருந்தாலும் நல்ல எண்ணங்களுடன் செயல்படும் சுப்பு, தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத நட்புகளின் மத்தியில் கிராம மக்களுக்கு வாழ்க்கையின் முக்கியமான பாடங்களை கற்பிக்க முயல்கிறார். ஆனால் மாக்கிபூரை மாற்ற முயற்சிக்கும் சுப்புவையே அந்த கிராமம் மாற்றத் தொடங்குகிறது.

சுப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளது பற்றி சந்தீப் கிஷன் பகிர்ந்து கொண்டதாவது, “மக்கள் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை நகைச்சுவை, அன்பு மற்றும் நேர்மையுடன் அணுகும் தொடர்தான் சூப்பர் சுப்பு. சுப்பு ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கும்போது, அதைவிட அதிக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் நபர். வேலை தொடர்பான ஏமாற்றங்கள், காதல் சிக்கல்கள், தந்தையிடம் நல்ல பெயர் வாங்கும் முயற்சி, கிராம மக்களின் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலை என அவருக்கு எப்போதும் பிரச்சினைகள் உண்டு. ஆனால், அவர் எப்போதும் நல்லதே செய்ய விரும்புகிறார். மாகிபூரில் உள்ள வித்தியாசமான கதாபாத்திரங்களும், ஒவ்வொரு தவறான புரிதலும் இந்த தொடரின் நகைச்சுவையையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான இதில் நடித்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ரசிகர்கள் சுப்புவை சந்தித்து இந்த மறக்க முடியாத பயணத்தில் இணைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

சமூகவலைதள இன்ஃப்ளூயன்சரும் நடிகையுமான மிதிலா பல்கர் பகிர்ந்து கொண்டதாவது, “நகைச்சுவையையும் மனித உணர்வுகளையும் ‘சூப்பர் சுப்பு’ மிக அழகாக கையாண்டுள்ளது.குழப்பங்கள், ஆர்வம், மகிழ்ச்சி, உறவுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளும் மனிதர்களின் கதை இருக்கிறது. மாலிக் ராம் உருவாக்கிய இந்த உலகம் தனித்துவமானது, உயிரோட்டமிக்கது. ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்தப் பயணத்தில் நினைவில் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் மனதுக்கு நெருக்கமானது. நெட்ஃப்ளிக்ஸின் ஆரம்பகால ஒரிஜினல்களில் ஒன்றான ‘லிட்டில் திங்ஸ்’ தொடரில் நான் நடித்தேன். இப்போது அதன் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’விலும் நடித்திருப்பது முழுமையடைந்த பயணமாக பார்க்கிறேன்” என்றார்.

சுப்புவின் தந்தை குகடேஸ்வர ராவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் முரளி சர்மா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதை உங்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், பலர் தவிர்க்கும் உரையாடல்களை இயல்பாக்கவும் உதவும். நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் சமூக கருத்துக்களை இதன் மைய உணர்வை இழக்காமல் மிக இயல்பாக இந்தக் கதை பேசியிருக்கிறது. மாகிபூரில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பார்வையாளர்கள் தங்களை இணைத்து கொள்ள முடியும். திறமையான நடிகர்களுடன் பணியாற்றியதும், நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரின் நடித்ததும் மகிழ்ச்சியான அனுபவம். மாக்கிபூரின் நகைச்சுவை, ஆச்சரியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார்.

மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் ஷிவானி தோபல் ஆகியோர் திரைக்கதை எழுதி, சிலகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி ஆகியோரது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் சுப்பு’ தொடரில் கெட் அப் சீனு, மானசா சௌத்ரி, ஜீவன் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

‘சூப்பர் சுப்பு’ தொடர் ஜூலை 2 அன்று நெட்ஃபிளிக்ஸில் மட்டும் வெளியாகிறது

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme