Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா!*

Posted on April 6, 2026

தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா!- indiastarsnow.com

தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வென்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி இன்று சென்னையில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் லிங்குசாமி, நித்திலன், கார்த்திக் சுப்புராஜ், எழில், தயாரிப்பாளர்கல் டி. சிவா, தனஞ்செயன், கரு. நாகராஜன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படத்தொகுப்பாளர் சங்க செயலாளர் உமாசங்கர் பேசியதாவது, “வணக்கம்! 1972ஆம் நாள் ஆகஸ்ட் திங்கள் ஆறாம் நாள் தி. நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 86 உறுப்பினர்கள் கொண்ட படத்தொகுப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூடியது. வயதில் மூத்தவரும் மிகப்பெரிய படத்தொகுப்பாளருமான ஜிடி ஜோஷி தலைமையில் எம்எஸ் மணி பொதுச்செயலாளராகவும் இருந்த சங்கம் தற்போது 54 ஆவது ஆண்டு வெற்றிநடை போடுவது மிகப்பெரிய விஷயம். பலரும் இந்த சங்கத்தை செழுமைப்படுத்தியுள்ளனர். முன்பு தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அனைத்தும் சென்னையில் உருவானதால் இனம், மதம், மொழி மறந்து சகோதரராக பழகி இந்த சங்கத்தை வலுப்படுத்தியதை இன்று நினைவுகூறுகிறோம். வெற்றிப் பெற்றவர்களை வந்தவர்கள் வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

தலைமை உரையாற்றிய படத்தொகுப்பாளர்கள் சங்கத்தலைவர் கோபி கிருஷ்ணா, “தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வென்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தல் இரண்டையும் சேர்த்து விழாவாக நடத்த சங்கம் முடிவெடுத்து சம்மேளன தலைவர் செல்வமணி அவர்கள் தலைமையில் நடத்த முடிவு செய்தோம். விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்கிறோம். தலைமை பொறுப்பு எல்லோரையும் மாற்றும். பல பிரச்சினைகள் இருந்தாலும் அதையும் தாண்டி ஊக்கமும் உற்சாகமும் பலரிடம் இருந்தும் கிடைக்கும். அதுதான் எங்களை தொடர்ந்து ஓட வைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் கதிரேசன், “சங்கத்தை நாம் நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைத்தாலும் நம்மை திசை மாற்றும் பிரச்சினைகளை கொண்டு வர சங்கத்திற்குள்ளேயே பலர் இருப்பார்கள். அவர்களை எல்லாம் தாண்டி தான் நாம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு ஐஏஎஸ்-க்கும் ஐபிஎஸ்-க்கும் கிடைக்க வேண்டிய மரியாதை, பெயர், புகழ் எல்லாமே சினிமாவின் எடிட்டர், கேமராமேனுக்கு கிடைக்கும். அப்படியான சினிமாவை காக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை உணர்ந்து எல்லோரும் செயல்படுவதால்தான் சினிமா இன்றும் நிலைத்திருக்கிறது”.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “தேர்தலில் வெற்றியடைந்து பொறுப்பேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் உருவாகவில்லை. எடிட்டர்ஸ் டேபிளில்தான் உருவாகிறது. எடிட்டர்ஸ் ரெஸ்பான்ஸிபிளிட்டி பெரியது. அவர்கள் இல்லாமல் திரைப்படம் இல்லை. அப்படியானவர்கள் இங்கு முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள். படத்தின் மீது தயாரிப்பாளருக்கு நம்பிக்கை வரவழைப்பதே எடிட்டர்தான். இதேபோல, நீங்கள் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும். ஸ்பாட் எடிட்டரோடுதான் படம் பண்ணுவேன் என எடிட்டர்ஸ் நீங்கள் படம் ஒத்துக்கொள்ளும்போதே ரெக்வஸ்ட் வையுங்கள். ஏனென்றால் பேட்ச் வொர்க் மட்டுமே இப்போதெல்லாம் பல நாட்கள் எடுக்கிறது. படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. இதை எடிட்டர்ஸ் நீங்களும் புரிந்து கொண்டு சீரியஸாக செய்ய வேண்டும். படத்தின் எடிட்டரால் டீசர், டிரெய்லர் உருவாக்க முடியாதபோது இதற்காக வெளியில் ஒரு எடிட்டர் வேலைக்கு எடுக்கும்போது குறைந்தது ஒரு லட்சம், இரண்டு லட்சம் கேட்கிறார்கள். அவர்களால் ஒரு டிரெய்லர் சூப்பராக உருவாக்கும்போது உங்களால் ஏன் முடியாது? இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திரைப்படத்தின் மொத்த புரோமோஷன் வரையும் திரைப்படத்தின் எடிட்டர் நீங்கள்தான் பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் இளவரசு, “வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒரு புரொடக்‌ஷனை சரியாக எப்படி திட்டமிட வேண்டும் என்ற விவரம் உள்ள தயாரிப்பாளர்களால்தான் சினிமாவுக்கு பிரச்சினையே இல்லை. செல்வமணி போன்ற தன்னலம் இல்லாத, பக்குவமான நபரால்தான் யூனியனை சிறப்பாக நடத்த முடியும். எடிட்டர் யூனியனில் உள்ள அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் சினிமா இன்னும் அடுத்த நிலைக்கு செல்லும்”.

தயாரிப்பாளர் கரு. நாகராஜன், “23 அமைப்புகளை ஒருங்கிணைத்து 25,000 பேரை வழிநடத்தும் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தொகுப்பாளர் பணி மிகவும் கடினமானது. வந்து கொட்டுகிற விதைகளில் இருந்து சரியான பயிரை அறுவடை செய்யும் சிறப்பான பணி எடிட்டருடையது. சங்கம் என்றால் பல பிரச்சினைகள் இருக்கதான் செய்யும். தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். திரைத்துறை தற்போது பெரிய போராட்ட களமாக இருக்கிறது. இருந்தாலும் தேன் கூட்டில் தேனீ வந்து கொண்டிருப்பதை போல நாள்தோறும் பலரும் சினிமாவுக்கு வரத்தான் செய்கிறார்கள். சினிமாவை வளர்க்க எடிட்டர் யூனியனும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்”.

டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “பல எதிர்ப்புகளை மீறி சங்கத்தில் நல்லது செய்வதுதான் நாம் பதவியில் வந்ததற்கான அர்த்தம். அதனால், எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்போம்”.

இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ், “மாநில விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். திரைப்பட உருவாக்கத்தில் எடிட்டிங் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு திரைப்படம் நல்ல படமாக மாறுவதும், மோசமான படமாக மாறுவதும் எடிட்டர் டேபிளில்தான். இயக்குநர் மேல் நம்பிக்கையும் ஸ்கிரிப்ட் நாலேஜூம் இருந்தால்தான் எடிட்டிங் சிறப்பாக வரும். நான் ஸ்கிரிப்ட்டில் எழுதியதை விட, ஷூட் செய்ததை விடவும் எடிட்டர்ஸ் வேறொரு கோணத்தை எடிட்டிங்கில் கொடுத்திருக்கிறார்கள். எடிட்டருடன் அமர்ந்து வேலை பார்ப்பது நம் குழந்தையுடன் தனியாக நேரம் செலவிடுவதை போல. ஏனெனில், படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இருப்போம். எடிட்டர் மீது பாரத்தை போட்டுவிட்டு பல காட்சிகள் எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர் சிவா, “சினிமாவிற்கு இதயம் போன்றது எடிட்டிங். இதயத்தை ஆப்ரேட் செய்யும் சர்ஜன்ஸ் நீங்கள் என்பதால் உங்கள் அனைவரின் மீதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. எடிட்டிங் துறை எவ்வளவு முக்கியமோ அதுபோல உங்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் எப்போதும் நாங்கள் தர தயங்கியதில்லை. உங்கள் சங்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்”.

இயக்குநர் லிங்குசாமி, “இத்தனை நபர்களை கட்டுப்பாடோடு கொண்டு செல்ல செல்வமணி போன்ற நபர் கிடைப்பது அபூர்வம். என்னுடைய படங்களில் பணிபுரிந்த அனைத்து எடிட்டர்ஸூக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எடிட்டிங் என்பது முக்கியமான இடம். தனஞ்செயன் சார் சொன்ன ஒரு விஷயத்தில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ‘சண்டக்கோழி’ படத்தின் எடிட்டர் சசி. ஆனால், அதன் டிரெய்லர் ஆண்டனி தான் கட் செய்து கொடுத்தார். அந்த டிரெய்லர்தான் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வியாபாரத்தையும் தொடங்கி வைத்தது. தகுதியான ஒருத்தர் எங்கே இருந்தாலும் சினிமாவிற்குள் சேர்த்துக் கொள்வதுதான் நம்முடைய வேலை. அதை பெரிய பிரச்சினையாக பார்க்க வேண்டியதில்லை. ஈகோ இல்லாத தகுதியான நபர்கள் படத்திற்குள் வந்துவிட்டால் படம் பெரிய வெற்றி பெறும். அப்படியான எடிட்டர்ஸ் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி”.

இயக்குநர் எழில், “இந்த வருடம் சங்கத்தில் ஜெயித்த அனைவருக்குமே வாழ்த்துகள். போன வருடம் போலவே இந்த வருடமும் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்”.

வசனகர்த்தா லியாகத் அலிகான், “ஒரு படத்திற்கு எட்டிடருடைய முக்கியத்துவம் என்ன, படத்திற்கு எந்தளவுக்கு அவர் உயிர் கொடுக்கிறார் என்பதை பற்றி எல்லோரும் சொன்னார்கள். அதனால் எல்லோருக்கும் நான் வாழ்த்துக்கள் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கங்கள் ஒவ்வொன்றுமே அமைச்சர் மாதிரி, பெப்சி தலைவர் முதலமைச்சர் போல. முதலமைச்சர் நேர்மையானவராக, தைரியமானவராக இருந்தால் இந்த நாடு எவ்வளவு செழிப்பாக இருக்குமோ அதுபோலதான் செல்வமணி இருக்கும்வரை சங்கங்கள் சிறப்பாக செயல்படும்”.

இயக்குநர் நித்திலன், “எனக்குப் பிடித்த எடிட்டிங் டிபார்ட்மென்ட் சங்க விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. எடிட்டிங் டேபிளில் நாம் பேப்பரில் எழுதிய, எதிர்பார்த்த எமோஷன் சரியாக வரும்போது, ‘டீ சாப்பிடலாமா?’ என்று கேட்பேன். அந்த கேள்விக்குள் அவ்வளவு வலியும், எதிர்பார்ப்பும் இருந்திருக்கும். இந்த சமயத்தில் வெற்றி பெற்ற அனைத்து எடிட்டருக்கும், என்னுடன் பணிபுரிந்த எடிட்டர்களுக்கும் வாழ்த்துக்கள்”.

பொருளாளர் எஸ்.பி. செந்தில்குமார், “எல்லோரும் செல்வமணி சாரைப் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார்கள். அவரிடம் இருந்து நாங்களும் நிறைய கற்றுக் கொண்டோம். சினிமாத்துறை இனி வரும் காலத்தில் நன்றாக இருக்க அவருடைய நிர்வாகமும் முக்கிய காரணமாக அமையும்”

இசையமைப்பாளர் தீனா, “தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இசைத்துறையில் நன்றாக சம்பாதித்து வாழ வேண்டும் என்று சுயநலமாக இருந்தவன் நான். ஆனால், என்னை பொது வாழ்க்கைக்கு கொண்டு வந்தவர் செல்வமணி. அவரை வாழும் தெய்வம் என்பேன். 25,000 பேரின் பெயரையும் அவரது பிரச்சினைகளையும் தெரிந்தவர் செல்வமணி. உண்மையிலேயே அவர் முதலமைச்சர்தான். பெப்சி அமைதி பூங்காவாக இருக்கக் காரணம் அவர்தான். என்னுடைய பல ஹிட் பாடல்களை எடிட்டர் அறைகளில்தான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்”.

இயக்குநர் சங்க செயலாளர், நடிகர் ஆர்.வி. உதயகுமார், “அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை எடிட்டர்களுடைய கஷ்டம் புரிந்து நாங்கள் எல்லோரும் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். இயக்குநர்கள்தான் முதல் எடிட்டர். உண்மையாக ஒரு இயக்குநர் படம் எடுத்தால் எடிட்டருக்கான வேலை மிகவும் குறைவு. ஒத்த கருத்துகளோடு இயங்குகிற, நமக்கு தொழில் பாதுகாப்பை கொடுக்கிற இடம்தான் சங்கம். வேறு எதுவும் இங்கு எதிர்பார்த்து வர வேண்டியதில்லை. எடிட்டர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யூனியன் பிரச்சினைகளை எல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் நம் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது எல்லா சங்கங்களும் சிறப்பாக இருக்கிறது. சினிமாவை சிறப்பாக்க சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

பொதுச்செயலாளர் சுவாமிநாதன், “புதிதாக பதவியேற்றுக் கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, “2026-2029 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பெப்சிக்கு படத்தொகுப்பாளர்கள் சங்கம் அதன் சக்தியை தாண்டி பங்காற்றி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள். படத்தொகுப்பாளர் பணி மிகவும் சவாலானது. உடல் உழைப்பை விட மனரீதியான உழைப்புதான் அங்கு அதிகம் தேவைப்படுகிறது. முன்பு பெப்சியை பார்த்து ஒரு பயம் இருக்கும். ஆனால், இப்போது மரியாதை வந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள்தான் நம் முதலாளி. அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாமும் செயல்பட முடியும். இதைத்தான் நான் அனைவரிடமும் சொல்வேன். சினிமாத்துறையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இந்த எண்ணத்தை பெப்சியில் உள்ள அனைவருக்கும் எடுத்து சொல்லி புரிய வைத்தேன். சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரி போல சினிமாத்துறையை மாற்ற சில முயற்சிகள் எடுத்து வருகிறோம். டெக்னிக்கலாக சினிமா நிறைய மாறி வருகிறது. அதற்கேற்றாற்போல புதியவர்கள் வருகையும் பலம் சேர்க்கும். எடிட்டர்ஸ் யூனியன் முன்வைத்த சம்பளம், அக்ரிமெண்ட் கோரிக்கைகளை நிறைவேற்ற பெப்சி நிச்சயம் முயற்சிக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

நிறைவாக படத்தொகுப்பாளர்கள் சங்கத்தலைவர் கோபி கிருஷ்ணா பேசியதாவது, “வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. எடிட்டர்ஸ் யூனியன் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டு பெப்சிக்கும் பெருமை சேர்க்கும்” என்றார்.

  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
  • Two Years After Stem Cell Transplant, Survivor of Rare Blood Disease Meets His Donor
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme