Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

Posted on October 12, 2026

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் வரும் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் என்கிறார் புஜிதா. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த புஜிதா, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வளர்ந்தார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட குடும்பச் சூழலில் வளர்ந்த புஜிதா, சென்னையில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பை முடித்தார். பின்னர் ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.

கல்வி மற்றும் வேலைக்கு இடையில் ஓவியம், நடனம் என கலை மீதும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. இந்நிலையில், குறும்படங்களில் நடிக்குமாறு ஒரு இயக்குநர் அவரை அணுகியபோது, எதிர்பாராத விதமாக நடிப்புத் துறைக்குள் நுழைந்தார். அங்கிருந்து திரைத்துறைக்குள்ளும் அவர் அடியெடு்த்து வைத்தார்.

அவர் நடித்த ‘பரிச்சயம்’ என்ற குறும்படம் பிரபல இயக்குநர் சுகுமாரின் கவனத்தை ஈர்த்தது. விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பின் மூலம் அவரைச் சந்தித்த புஜிதா, பின்னர் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவான ‘தர்ஷகுடு’ திரைப்படத்தில் நடிக்கத் தேர்வானார். தொடர்ந்து ராம் சரண் நடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்திலும் ஆடிஷன் மூலம் தேர்வாகி நடித்தார். நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்த நிலையில், மென்பொருள் பொறியாளர் பணியிலிருந்து விலகி, முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்தார் புஜிதா. இதுவரை சுமார் 25 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் குறித்து புஜிதா பகிர்ந்து கொண்டதாவது, “இயக்குநர் மலர்விழி கதையை விவரித்த விதம் எனக்கு பிடித்திருந்தது. ஒரு பெண் ஒரு கதையை எழுதி இயக்கும்போது பெண் கதாபாத்திரங்களை தனித்துவத்தோடும் திரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என நம்புகிறேன். மலர்விழி மேம் கதையை விவரித்தபோது, என் கதாபாத்திரத்தை மிகத்தெளிவாக சொன்னார். அவர் சொல்லச் சொல்ல, காட்சிகள் என் கண்முன்னே வந்தது.

பொதுவாக, ஒரு கதை எனக்குப் பிடித்திருந்தாலும் அதில் நடிப்பது குறித்து முடிவெடுக்க எனக்குச் சிறிது காலம் தேவைப்படும். ஆனால், ‘சிக்னல் அட் 11:30’ படத்தைப் பொறுத்தவரை கதை கேட்டவுடனே சம்மதித்து விட்டேன். எனது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை இந்தக் கதாபாத்திரம் எனக்கு கொடுத்தது” என்றார்.

‘சிக்னல் அட் 11:30’ படப்பிடிப்பின்போது தனக்கு மறக்க முடியாத அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நிஜ வாழ்க்கையில் எனக்கு கார் ஓட்டுவதற்கு பயம். ஆனால், படப்பிடிப்பில் ரெளடிகள் துரத்தும்போது காரை ஓட்டிச் செல்லும் ஒரு காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அதில் நடிக்க மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், மலர்விழி மேம் அளித்த நம்பிக்கை எனக்குத் கொடுத்த தைரியத்தால் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன். போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பதால், நள்ளிரவில் அந்தக் காட்சியைப் படமாக்கினோம். அந்த இரவுடன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால், வெவ்வேறு நாட்களில் கூடுதல் காட்சிகளைப் படமாக்குவதற்காக மீண்டும் வர வேண்டியிருந்தது. முதலில் பயமளித்த அந்த அனுபவம், படத்தில் எனக்குப் பிடித்தமான நினைவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் காதல் காட்சிகள் அழகிய மலை பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளன. என்னுடன் இணைந்து நடித்த சந்தோஷ் பிரதாப் தன்மையானவர், திறமையானவர். திரையில் எங்கள் ஜோடி ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தின் மூலம் பவ்யா திரிகாவுடனும் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இருவரும் ஒரு விளம்பரத்தில் இணைந்து நடித்திருந்தோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சிக்னல் அட் 11:30’ படப்பிடிப்புத் தளத்தில் மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.

ஒவ்வொரு திரைப்படமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், தனக்குள் இருக்கும் புதிய பரிமாணங்களைக் கண்டறியவும், நடிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைவதாக அவர் கூறுகிறார்.

சினிமாவை தாண்டி புத்தகங்கள் வாசிப்பது, பயணம் செய்வது, கதைகளைக் கேட்பது, இசைக் கச்சேரிகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, புதிய கஃபேக்கள் மற்றும் உணவகங்களைத் தேடிச் செல்வது, சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது ஆகியவை புஜிதாவுக்கு பிடித்தமானவை. உணவுப் பிரியரான அவர், புதிய உணவு வகைகளைச் சுவைத்துப் பார்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். மேலும், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை புஜிதா.

அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும், தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தின் புதிய அத்தியாயத்துக்குத் தொடக்கமாக அமையும் என்றும் புஜிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
  • சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!
  • On His Grandfather Allu Ramalingaiah’s Birth Anniversary, Allu Arjun Marks the Beginning of his New Creative Office Space ‘ICONZA’
  • “சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!
  • Sigma’s Success Makes My Tamil Debut Even More Special’ – Faria Abdullah
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme