Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிட்லிங்கியின் மருத்துவப் புரட்சியைப் பதிவு செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!

Posted on October 10, 2026

சிட்லிங்கியின் மருத்துவப் புரட்சியைப் பதிவு செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!

நாம் இதுவரை அதிகம் அறிந்திடாத உண்மையை திரையில் கொண்டு வரும் திரைப்படங்கள் உலகைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துகின்றன. இயக்குநரும் எழுத்தாளருமான சங்கர நாராயணன் இயக்கியுள்ள ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ திரைப்படமும் அத்தகைய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியில் அமைந்துள்ள சிட்லிங்கி பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த ஆவணப்படம். அப்பகுதியில் நிகழ்ந்த அசாதாரணமான மருத்துவ மற்றும் சமூக மாற்றத்தைப் பதிவு செய்கிறது. 2026ஆம் ஆண்டுக்கான 18வது சர்வதேச கேரள ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழாவில் (IDSFFK) இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியான சிட்லிங்கியைப் பின்னணியாகக் கொண்ட இப்படம், 1990களில் அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் எதிர்கொண்ட மருத்துவ நெருக்கடிகளையும், அதைத் தொடர்ந்து இரண்டு மருத்துவர்கள் அந்தப் பகுதிக்கு வந்து 1993ஆம் ஆண்டு ‘Tribal Health Initiative’ (THI) என்ற அமைப்பைத் தொடங்கியதன் மூலம் ஏற்பட்ட மாற்றங்களையும் பதிவு செய்கிறது. மிகச் சிறிய அளவில் தொடங்கிய அந்த மருத்துவ முயற்சி, படிப்படியாக 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் சமூகப் பங்களிப்புடன் கூடிய அமைப்பாக வளர்ந்தது. இதன் மூலம் பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.

பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் பொதுவெளி கவனத்துக்கு வராமல் போகும் பல்வேறு யதார்த்தங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது என்கிறார் இயக்குநர் சங்கர நாராயணன். ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம் மூலம் மருத்துவம், கண்ணியம், சமூகப் பங்கேற்பு மற்றும் நிலையான மாற்றம் ஆகியவற்றை பேசியுள்ளார்.

திரைப்படம் குறித்து இயக்குநர் சங்கர நாராயணன் பகிர்ந்து கொண்டதாவது, “பழங்குடியின சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், மருத்துவ உதவியைப் பெறுவதில் அவர்கள் சந்திக்கும் தடைகளையும் உலகம் அறிய வேண்டும் என்று நினைத்தேன். மருத்துவம் நாளுக்கு நாள் வணிகமயமாகி வரும் இந்தக் காலகட்டத்தில், தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண முன்வந்த ஒரு பள்ளத்தாக்கின் கதை, மிகவும் அவசியமான மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது. இது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையைப் பேசுகிறது. அதே நேரத்தில், எது தவறாக உள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்டாமல், அதற்கான தீர்வையும் இந்தப் படம் முன்வைக்கிறது. இந்தக் கதையைத் தேர்வு செய்ய என்னைத் தூண்டிய முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பாராட்டுகள் எனக்கு பொறுப்புணர்வை அதிகரித்துள்ளது. மேலும், இதுபோன்ற கதைகளை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எனது எண்ணத்தையும் வலுப்படுத்தியுள்ளது” என்றார்.

’தி வேலி ஆஃப் ஹெல்த்’ என்பது மருத்துவ முயற்சியைப் பற்றிய திரைப்படம் மட்டுமல்ல. ஒரு சமூகத்திற்கு தனது சொந்த வாழ்க்கைச் சூழலை மாற்றுவதில் பங்கேற்கும் வாய்ப்பும் நம்பிக்கையும் வழங்கப்படும்போது, எத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகின்றன என்பதைக் கூறும் கதையாகவும் இது அமைந்துள்ளது. சிட்லிங்கியின் பயணம் ஒரு எளிமையான, அதே நேரத்தில் வலிமையான செய்தியை முன்வைக்கிறது: சில நேரங்களில், மிகப் பெரிய மாற்றங்கள் அமைதியாகவே தொடங்குகின்றன; ஒருவர் மீது ஒருவர் அக்கறை செலுத்தத் தொடங்கும் மக்களிடமிருந்தே அந்த மாற்றங்கள் பிறக்கின்றன.

  • Actor Suriya Congratulates the Team of Mandaadi as the Film Continues Its Successful Theatrical Run
  • Mandaadi Completes 25 Days in Theatres; Continues Its Run Across 325 Screens in Tamil Nadu
  • Sony LIV’s Malayalam original EYES explores the dark side of love and obsession, premieres 9th October 2026
  • Sony LIV-ன் மலையாள Original தொடரான ‘EYES’ காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகின்றது,அக்டோபர் 9 முதல்..
  • VIJAY ANTONY’S ‘APPA KUTTY’ GEARS UP FOR A GRAND DIWALI RELEASE ON NOVEMBER 6!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme