Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவிகளை நிறுவி அவசரகால இதய சிகிச்சையை வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனை!*

Posted on August 5, 2026


சென்னை, ஆகஸ்ட் 5, 2026: திடீர் மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான இதய பாதிப்பு ஏற்படும் நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு அவசரநிலை சிகிச்சையளிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், காவேரி மருத்துவமனை மற்றும் சென்னை பன்னாட்டு விமான நிலையம் இணைந்து ‘ஹார்ட்சேஃப்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதன் கீழ், விமான நிலையம் முழுவதும் 13 தானியங்கி வெளிப்புற உதறல் கருவி (AED) நிறுவப்பட்டுள்ளன. ஏ.இ.டி என்பது கையடக்கமான மின்னணு சாதனமாகும். இது இதயத் துடிப்பை ஆய்வு செய்து, இயல்பான துடிப்பை மீட்டெடுக்கக் கட்டுப்படுத்தப்பட்ட மின் அதிர்ச்சியைப் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கிறது.
சென்னை விமான நிலைய இயக்குநர் திரு. ராஜா கிஷோர், காவேரி மருத்துவமனை குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் T1 வருகை, T2 புறப்பாடு, T2 பாதுகாப்புப் பகுதி மற்றும் T4 வருகை ஆகிய நான்கு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர மருத்துவச் சேவை மையங்களைக் காவேரி மருத்துவமனை இயக்குகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் என 49 பேர்கொண்ட குழு இங்கு செயல்படுகிறது. இவர்கள் பயணிகள், பணியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும்போது உடனடி மருத்துவப் பரிசோதனை, முதலுதவி, அவசர சிகிச்சைகளை வழங்குகின்றனர்.
மேலும், நோயாளிகளுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கவும் தேவைப்படும் போது பாதுகாப்பாக மருத்துவமனைக்கு மாற்றுவதற்கும், விமான நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் முழுமையான சிகிச்சை வசதிகளுடன் கூடிய இரண்டு ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்குள்ள ஒவ்வொரு மருத்துவ மையமும் மாதத்திற்கு 80 முதல் 100 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கிறது. அதன்படி, நான்கு மையங்களிலும் ஒட்டுமொத்தமாக 320 முதல் 400 நோயாளிகள் பயனடைகின்றனர். இதில் மருத்துவ அவசரநிலைகள், விமானத்திற்குள் ஏற்படும் பாதிப்புகள், முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்கு மாற்றப்படுவோர் அடங்குவர். இவர்களில் 5 முதல் 10 நோயாளிகள் மார்பு வலி, நெஞ்சு படபடப்பு போன்ற இதய பாதிப்புகளுக்காக வருகின்றனர். இது, விமான நிலைய வளாகத்திற்குள் துரிதமான இதய அவசர சிகிச்சைக் கட்டமைப்பின் அவசியத்தை உணர்த்துகிறது.
விமான நிலைய வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஏ.இ.டி கருவிகள், அவசர மருத்துவச் சேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. திடீர் மாரடைப்பு ஏற்படும் போது, முதல் சில நிமிடங்களிலேயே உயிர்காக்கும் சிகிச்சை வழங்கப்படுவதற்கு இவை பேருதவியாக இருக்கும்.

இந்நிகழ்வில் பேசிய சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்குநர் திரு. ராஜா கிஷோர் கூறுகையில்: “சென்னை பன்னாட்டு விமான நிலையம், ஒவ்வொரு பயணிக்கும், வருகையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்க உறுதி கொண்டுள்ளது. தானியங்கி வெளிப்புற இதய உதறல்நீக்கி சாதனங்களை (AED) நிறுவியிருப்பது, எங்களின் அவசர மருத்துவத் தயார்நிலையை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும். 24 மணி நேர விமான நிலைய மருத்துவ மையங்கள் மூலம் காவேரி மருத்துவமனை வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கும், மருத்துவ அவசர காலங்களில் எங்கள் துரிதச் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த அவர்கள் அளிக்கும் நிபுணத்துவத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகள். நாங்கள் இருவரும் இணைந்து, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மருத்துவச் சிகிச்சையின் மூலம் விமான நிலைய வளாகத்தில் உயிர்காக்கும் பாதுகாப்பான சூழலமைப்பை உருவாக்கி வருகிறோம்.”

இந்த முன்னெடுப்பு குறித்து பேசிய காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், “திடீர் மாரடைப்பின் போது, சிகிச்சை தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உடனடியாக சிபிஆர் (CPR) எனப்படும் இதய-நுரையீரல் மீட்டெடுப்பு சிகிச்சையைத் தொடங்கி, முதல் சில நிமிடங்களுக்குள் ஏ.இ.டி கருவியைப் பயன்படுத்தினால், நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான விகிதம் கணிசமாக அதிகரிக்கும். ‘ஹார்ட்சேஃப்’ திட்டத்தின் மூலம், விரைவாக உயிர்காக்கும் சிகிச்சையைச் சாத்தியமாக்க 13 ஏ.இ.டி கருவிகளை இவ்வளாகத்தில் நாங்கள் நிறுவியுள்ளோம்.

எனினும், அவசர காலத் தயார்நிலை என்பது ஏ.இ.டி கருவிகளை நிறுவுவதோடு முடிந்துவிடுவதில்லை; அதற்கு சரியான மருத்துவ நிபுணர்கள், முறையான பயிற்சி மற்றும் சிறந்த அமைப்புகள் தேவை. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள காவேரி மருத்துவமனையின் 24×7 அவசர சிகிச்சை மையங்களில், மேம்பட்ட மருத்துவ உபகரணங்களின் ஆதரவோடு அனுபவமிக்க மருத்துவர்கள், திறமையான செவிலியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை மருத்துவப் பணியாளர்கள் செயல்படுகின்றனர். தற்போது ஏ.இ.டி கருவிகள் நிறுவப்பட்டிருப்பதன் மூலம், எங்களின் அவசர சிகிச்சைப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றதாக இருக்கும் ஒரு நெருக்கடியான சூழலில், பயணிகள், வருகையாளர்கள் மற்றும் விமான நிலையப் பணியாளர்கள் என அனைவருக்கும் விரைவான, உயிர்காக்கும் சிகிச்சை கிடைக்கும் என்ற உத்தரவாதமளிக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க இது உதவுகிறது.” என்று கூறினார்.

ஏ.இ.டி (AED) கருவிகள் நிறுவப்பட்டிருப்பது, ஒவ்வொரு ஆண்டும் இந்த விமான நிலையத்திற்கு வந்து செல்லும் இலட்சக்கணக்கான பயணிகள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் மற்றும் காவேரி மருத்துவமனை ஆகியவை கொண்டிருக்கும் கூட்டு அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நவீன அவசரக்கால உபகரணங்களை உடனடியாகப் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மாரடைப்பை அடையாளம் காணுதல், சிபிஆர் சிகிச்சை அளித்தல் மற்றும் மருத்துவ உதவி கிடைக்கும் வரை ஏ.இ.டி (AED) கருவியைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதன் அவசியத்தையும் இந்த முன்னெடுப்பு வலியுறுத்துகிறது.

  • Kauvery Hospital Strengthens Emergency Cardiac Response at Chennai International Airport with Installation of Automated External Defibrillators (AED)
  • சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவிகளை நிறுவி அவசரகால இதய சிகிச்சையை வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனை!*
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  
  • “வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme