ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள “மஹாவதார் நரசிம்மா” அனிமேஷன் புராணத் திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படி திரை கதை மற்றும் சிறப்பான அனிமேஷன் அமைத்து திரையில் ரசிக்க வைத்துள்ளனர்.
முனிவருக்கு பிறக்கும் அரக்க குணம் கொண்ட இரட்டை ஆண் குழந்தையாக பிறக்கும் ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் சகோதரர்கள் விஷ்ணு பெருமானை வழிபடுபவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர். நேரில் வராத ஒருவரை கடவுள் என்பதா? அந்த விஷ்ணுவை கண்டுபிடித்து அழிப்பேன் என சபதமெடுக்கிறார் ஹிரண்யாக்ஷன்.
தன் அண்ணனிடம் ஆசிபெறும் அவர் பூமாதேவியை சிறைபிடித்து கடலுக்கு அடியில் ஒளித்து வைக்கிறார். இதனால் பிரம்மதேவனிடம் தேவர்கள் முறையிட வராக அவதாரத்தில் தோன்றும் விஷ்ணு, ஹிரண்யாக்ஷனுடன் சண்டையிட்டு கொன்று பூமாதேவியை மீட்கிறார்.
தம்பியை பறிகொடுத்த ஹிரண்யகசிபு தானே மூவுலகையும் ஆளும் கடவுள் ஆகவேண்டும் என்று பிரம்மனை நோக்கி கடும் தவம் இருக்கிறார். அதன் பலனாக எந்த மனிதனாலும், உயிராலும், ஆயுதத்தாலும், மளிகை உள்ளும் மளிகை வெளியிலும்,சூரியன் உதிக்கும் போதும் சூரியன் மறையும் போதும் தன்னை கொல்ல முடியாத வரத்தை பெறுகிறார். பின்னர் மூவுலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொடுங்கோல் ஆட்சி செய்கிறார் ஹிரண்யகசிபு.
அவருக்கு பிரகலாதன் என்ற மகன் பிறக்கிறான் அவன் விஷ்ணுவின் தீவிர பக்தனாக துதி பாடுகிறார். அசுர குலத்தைச் சேர்ந்த சிறுவன் பிரகலாதன் விஷ்ணுவை நேரில் பார்த்தாரா? ஹிரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு எப்படி வந்தது என்பதே மீதிக்கதை.