‘தீபாவளி போனஸ்’ திரை விமர்சனம்

கொரியர் நிறுவனத்தின் ஊழியர் ரவியாக விக்ராந்த் எளிமையின் உருவமாக, அதிர்ந்து பேசாத குணம், மகனிடம் பாசம், மனைவி மேல் பிரியத்துடன் பணத்திற்காக கஷ்டப்பட்டாலும் நேர்மை தவறாத மனிதராக, மகனுக்கு ஷ_ வாங்க கடைக்காரரிடம் கெஞ்சுவதும், துணிக்கடை முதலாளியிடம் பணத்தை கொடுத்து விட்டு செல்லும் போதும், குடும்பத்தின் சந்தோஷத்திற்காக கிடைத்த பரிசை விற்பது, இறுதியில் புதிய தொழில் தொடங்க எடுக்கும் முடிவு என்று படம் முழுவதும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக செய்துள்ளர்.
வீட்டு வேலை செய்யும் பெண்ணாக ரித்விகா கணவனின் இயலாத நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு குடும்பத்தை அரவணைத்துச் செல்லும் அன்பான மனைவியாக, மகன், கணவன் என்று அவர்களின் சந்தோஷத்திற்காக வாழ்வதும், வேலை செய்யும் இடத்தில் அவமானப்பட்டாலும், அதை கண்டு கொள்ளாமல் தன் வேலையை முடித்து விட்டு செல்லும் இடத்திலும், கணவனை காணாமல் பரிதவிப்பது என்று தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
மகனாக மாஸ்டர் ஹரிஷ் பள்ளியில், வீட்டில் என்று தன்னுடைய குழந்தைத்தனமாக பேச்சால் செய்கையால் கவனிக்க வைக்கிறார். இவர்களுக்கு உறுதுணையாக வரும் அத்தனை கதாபாத்திரங்களும் சிறு வேடம் என்றாலும் படத்தில் நடிப்பில் தனித்துவமாக தெரிகின்றனர்.
மரியா ஜெரால்ட் பாடல்கள் பின்னணி இசையில் ரசிக்க வைத்துள்ளார்.
கௌதம் சேதுராம் காட்சிக் கோணங்கள் அசத்தல் ரகம் என்றால் லாங் ஷாட் டிரோன் ஒளிப்பதிவு படத்தின் வெற்றிக்கு துணை போகிறது.
பண்டிகை என்றால் பணத்தை ஏற்பாடு செய்ய ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள், பரிதவிப்பு, மனதளவு பாதிப்புகள், அவமானங்கள் அதையெல்லாம் பிள்ளைகளின் மகிழ்ச்சி முன்னால் எதுவுமில்லை என்பதை உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக படத்திற்கேற்ற டைட்டிலுடன் நிறைவாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஜெயபால்.ஜெ.
மொத்தத்தில் ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில் தீபாவளி போனஸ் எளிய மகிழ்ச்சியின் திண்டாட்ட கொண்டாட்டம்.