யாத்திசை திரை விமர்சனம்

யாத்திசை – திரைப்பட விமர்சனம்

‘யாத்திசை’ என்றால் தென் திசை என்று அர்த்தம். தென் தமிழகத்தை ஆண்ட சேர சோழர்களை வீழ்த்திய பாண்டிய மன்னன் ரணதீர பாண்டியனை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இக்கதையில் சங்க கால தமிழ் உள்ளிட்ட பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய அரசன் அரிகேசரி. இவரது மகன் ரணதீரன் (ஷக்தி மித்ரன்). இந்த பாண்டிய பேரரசுக்கு எதிராக சேரர்கள் போரிடுகிறார்கள். அவர்களுடன் சோழர்கள் மற்றும் எயினர்கள் உள்ளிட்ட சிறுகுழுக்களும் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றிபெறுகிறது. இதன் எதிரொலியாக சேரர்கள் நாடு கடத்தப்பட, உதவியாக வந்த சோழர்கள் காட்டுக்குள் தலைமறைவாகின்றனர். இதில் பாண்டியர்களால் பாலை நிலத்திற்கு விரட்டப்பட்ட எயினர் குழுவைச் சேர்ந்த வீரன் கொதி (சேயோன் ) தனது குழுவைத் திரட்டி, சோழர்கள் உதவியுடன் ரணதீரனை வெல்ல முடிவு செய்கிறான்.
ரணதீர பாண்டியன் வேடத்தில் நடித்திருக்கும் ஷக்தி மித்ரன், எயினர் குடி தலைவன் கொதி வேடத்தில் நடித்திருக்கும் சேயோன் இருவரும் புதுமுகங்கள். இவர்கள் மட்டும் இன்றி படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள். ஆனால், இவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்பதை மறந்துவிட்டு வெறித்தனமாக நடித்திருக்கிறார்கள்.இதுபோன்ற சரித்திர படங்கள் என்றாலே மன்னர்கள் வெண்ணையில் ஓர வைத்தது போல், பட்டு போன்ற மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பார்கள், என்ற விதியை உடைத்தெறிந்திருக்கும் இயக்குநர் தரணி ராசேந்திரன், அந்தக் கால தமிழர்கள் மற்றும் தமிழ் மன்னர்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

கதாபாத்திரங்கள் உடுத்தியிருக்கும் உடைகள், அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், அவர்களிடம் இருக்கும் போர் வெறி, போருக்கு செல்லும் முன்பு மனித பலி கொடுப்பது, என்று பல வரலாற்று சம்பவங்களை எந்தவித சினிமாத்தனமும் இன்றி மிக இயல்பாக மக்களுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்றே சொல்லலாம்.சங்காகலத்தில் பயன்பாட்டில் இருந்த தமிழ் வார்த்தைகளை கொண்டு எயினர் குடியினர் பேசும் வசனங்களை எழுதியிருப்பது புதிய முயற்சி. அந்த வசனங்கள் புரியவில்லை என்பது குறையாக இருந்தாலும், நாம் இதுவரை திரைப்படங்களில் கேட்டிராத சங்ககால தமிழ் வார்த்தையை படத்தில் பயன்படுத்தியிருப்பது புதிய முயற்சியாக மட்டும் இன்றி, படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவமாகவும் இருக்கிறது.
யாத்திசையின் ஒளிப்பதிவு அப்போகலிப்டோ படத்தைப் பிரதிபலிக்கிறது. பிரம்மாண்டமான காட்சிகளில் ஒளிப்பதிவாளர் அகிலேஷின் தனித்துவம் தெரிகிறது.

போர்க்காட்சிகளில் இசை காதை அடைக்காமல் இயல்பாக இருக்கிறது. விசாரணை படத்தின் கதையை எழுதிய எழுத்தாளர் சந்திரகுமார், எயினர்களின் முக்கிய பிரதிநிதியாக நடித்திருக்கிறார். அவரது தோற்றமும், பேச்சும் படத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது. ஒரு சிறுவனுக்குக் கதை சொல்லத் தொடங்கும் சந்திரகுமார்,இறுதிக்காட்சியில் இந்தக் கதை முடியாது. இப்போதுதான் தொடங்குகிறது என்கிறார்.

படத்தின் முதல் காட்சியிலேயே பிரம்மாண்டமாக காட்டப்படும் காட்டருவி, பெருங்காட்டில் வாழும் பழங்குடிகள், மிகையின்றி காட்டப்படும் பாண்டிய அரசர், போருக்கான சடங்குகள், தேவரடியார் என புதிய பாதையில் நடந்திருக்கிறது யாத்திசை. ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்புகளிலும், சினிமா ஒரு காட்சிக் கலை என்ற நோக்குடன் பயணித்துள்ளார்கள்.