நாயகன் பிரவீன் சொந்த தொழில் தொடங்குவதற்காக வங்கியில் கடன் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வரும் ஹீரோவின் தந்தை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். அவரை காப்பாற்றுவதற்காக 36 மணி நேரத்துக்குள் தொலைந்த மிகப்பெரிய பணத்தை கண்டுபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ளும் ஹீரோ அந்த பணத்தை கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதே படத்தின் கதை.படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் தான் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து கவனிக்க வைக்கிறார். அப்பாவை காப்பாற்ற களத்தில் இறங்குபவர், பணத்தை பார்த்ததும் எடுக்கும் முடிவு எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்டாக இருப்பதோடு, அந்த இடங்களில் பெஸ்ட்டான நடிப்பை கொடுத்து பாராட்டுப் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், ஹீரோவோடு பயணிக்கும் கமர்ஷியல் கதாநாயகியாக மட்டும் இன்றி கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரமாகவும் வலம் வருகிறார். அமைதியான நடிப்பு, அளவான அழகு என்று பீரியட் படத்திற்கு பொருத்தமான தேர்வாக இருந்தாலும் சற்று முதிர்ச்சியானவராகவும் தோன்றுகிறார்.ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ், அரசாங்க ஊழியர் வேடத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அப்பாவியான முகம், அளவான நடிப்பு என்று கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் வெங்கட் சுந்தர், ரசிகர்களை சிரிக்க வைக்க பல இடங்களில் முயற்சிக்கிறார். அதி சில இடங்கள் மற்றுமே ஒர்க் அவுட் ஆக, பல காட்சிகள் ஒன்னும் இல்லாமல் போகிறது. இருந்தாலும் ஒரு கதாப்பாத்திரமாக கவனிக்க வைக்கும் அவருக்கு படத்தின் இரண்டாம் பாதியில் மிகப்பெரிய வேலை இருக்கும் என்று தெரிகிறது.கணக்காளராக நடித்திருக்கும் சீத்தாராமன், தபால் நிலைய ஊழியர்களாக நடித்திருக்கும் தீனா அங்கமுத்து, சம்பத்குமார் என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், பீரியட் படத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட ஒரு கலர் டோனை படம் முழுவதும் பயன்படுத்தியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. அதேபோல், பீரியட் படத்திற்கு ஏற்றபடி லொக்கேஷன்களை காட்டியிருப்பதோடு, கதாப்பாத்திரங்களையும் பீரியட் படத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக காட்டியிருக்கிறார்.ஒரு சாதாரண ஒன்லைனை, விறுவிறுப்பான சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரவீன், பல இடங்களில் தடுமாறியிருக்கிறார். குறிப்பாக படத்தின் முதல் பாதி, தூக்கம் வராதவர்களை கூட தூங்க வைக்கும் அளவுக்கு ரொம்ப மெதுவாக நகர்கிறது.
