அனகொண்டபுரம் என்ற ஊரில், ஆண்கள் யாரும் இருட்டினால் வெளியே வருவதில்லை, அப்படி வருபவர்களையும் ஏதோ ஒரு ஆவி பலிவாங்குகிறது என்பது போல கதை ஆரம்பிக்கின்றது. பலான படங்கள் எடுப்பதற்கு கதைகளை வைத்துக்கொண்டு, அதை தயாரிப்பதற்கு ஆள் கிடைக்காமல் திணறி வரும் நாயகன் ’ஏ’பாரதி(சதீஷ்). இவருடன் தங்குபவராகவும், நண்பவராகவும் வருகிறார் ரமேஷ் திலக்.
பாரதியின் காதலி செளமியாவிற்கு (தர்ஷா குப்தா) அடிக்கடி பேய் கனவுகளும், அந்த பேய்களினால் யாரோ கொலை செய்யப்படுவது போன்ற கனவுகளும் வந்து போகின்றது. ஒரு நாள் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் கொல்லப்படுவது போன்று கனவு காண்கிறார். காதலனையும் அவரது நண்பனையும் காப்பாற்ற அவர்களது வீட்டுற்கு விரையும் தர்ஷாவிற்குள் பேய் புகுந்து கொண்டு அனகொண்டபுரம் போக வேண்டும் என்கிறது.
இதனால், சதீஷ் மற்றும் அவரின் நண்பர்கள் தர்ஷாவை அனகொண்டபுரத்தில் உள்ள அரண்மனைக்கு செல்கின்றனர். அங்கு, ஏதோ ஒரு ஆவியை தனது ரத்தத்தை வைத்து வெளியேற்றி விடுகிறார் தர்ஷா. உக்கிரமாக வெளியேறியுள்ள அந்த ஆவியின் ப்ளேஷ்பேக்கை, அனகொண்டபுரத்தில் உள்ள சாமியார்(நான் கடவுள் ராஜேந்திரன்) சொல்கிறார். அந்த ஆவியை அடக்க சதீஷ் ஒருவரால் மட்டும்தான் முடியும் என்றும் குண்டைத் தூக்கிப்போடுகிறார். சதீஷிற்கும், அந்த ஆவிக்கும் என்ன சம்பந்தம்? அந்த ஆவி ஆண்களை மட்டும் பழிவாங்குவது ஏன்? போன்ற கேள்விகளுடன் பயணிக்கிறது திரைக்கதை.
சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, சன்னி லியோன், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், ஓ மை கோஷ்ட். இப்படத்தை, ஆர் யுவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம், சன்னி லியோன் முதல் முறையாக தமிழில் பேயாக நடித்த படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பலமாக உள்ளது.
