‘கலகத் தலைவன்’. வஜ்ரா என்ற கார்பரேட் நிறுவனம் தன்னுடைய புதிய கனரக வாகனம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த வாகனம் உமிழும் மாசுபாட்டின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் இருக்கும் ரகசியம் வெளியில் கசிய, நிறுவனம் அதிர்ச்சியடைகிறது. இதுபோன்ற ரகசியங்களை கசியவிடும் ‘விசில் ப்ளோயர்கள்’ எனப்படும் உளவாளிகளை கண்டறிந்து அவர்களை தடயமின்றி அழிக்கும் பொறுப்பு அர்ஜூனுக்கு (ஆரவ்) கொடுக்கப்படுகிறது. அவர் தன் வேட்டையைத் தொடர, அது திருமாறன் (உதயநிதி ஸ்டாலின்) வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை நிகழ்த்துகிறது? இந்த ‘விசில் ப்ளோயர்கள்’ யார்? அவர்களின் நோக்கம் என்ன? இதுதான் ‘கலகத் தலைவன்’ படத்தின் திரைக்கதை.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் பயணிக்க, அதன் வேகத்தை காதல் காட்சிகளும், பாடல்களும் வேண்டுமென்றே தணிக்கிறது. மொத்த காதல் சீக்வன்சுகளை நீக்கியிருந்தால் இன்னும் அடர்த்தி கூடியிருக்கும். நாயகியிடம் உதயநிதி சொல்லும் ஹெண்ட்பேக் சைக்காலஜி மட்டும் பார்வையாளர்களிடையே எடுபடுகிறது. மற்றபடி காதல் காட்சிகளும், பாடல்களும் திணிப்பேயன்றி கதையோட்டத்திற்கு பலனிக்கவில்லை.
சில கார்ப்பரேட்டுகளின் அத்துமீறல்களும் அதன் கொடுங்கரங்களும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சாமானியன் வரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும், கார்ப்பரேட்டுகளுக்காக வேலை செய்யும் கூலிப்படை மாஃபியாக்கள் பற்றியும் ஒரு சுவாரஸ்யமான விறுவிறு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.