வெனமை தன் உடலில் சுமந்துக் கொண்டு பயணிக்கும் நாயகன் டாம் ஹார்டி மெக்சிகோவில் தலைமறைவாக இருக்கிறார். அவரை அமெரிக்க ராணுவம் தேடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், உலகத்தை அழிப்பதற்காக கோடெக்ஸ் என்ற ஒன்றை அடைய நினைக்கும் வில்லன், அதை கண்டுபிடிப்பதற்காக பூமிக்கு விசித்திர ஏலியன்களை அனுப்புகிறார். அந்த கோடெக்ஸ் டாம் ஹார்டியிடம் இருக்கும் வெனமிடம் இருக்கிறது. அதை கைப்பற்ற வேண்டும் என்றால் வெனம் அல்லது டாம் ஹார்டி, இருவரில் ஒருவர் இறக்க வேண்டும்.
அதே சமயம் டாம் ஹார்டி வெனமாக முழு உருவம் பெறும் போது மட்டுமே அந்த கோடெக்ஸ் இருப்பது ஏலியன்களுக்கு தெரிய வரும். இப்படி ஒரு பக்கம் ராணுவம் மறுபக்கம் விசித்திர ஏலியன்கள் என்று விரட்டப்படும் டாம் ஹார்டி மற்றும் வெனம் இருவரும் எத்தகைய போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள், அவர்களிடம் இருக்கும் கோடெக்ஸ் என்ன ஆனது, என்பதை வழக்கம் போல் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளோடும், நகைச்சுவை வசனங்களோடும் சொல்வது தான் ‘வெனம் – தி லாஸ்ட் டான்ஸ்’.
வேதாளத்தை முதுகில் சுமந்தபடி கதைகேட்கும் விக்கிரமாதித்தன் போல், அவ்வபோது வெளியே வரும் வெனமை தன் உடலில் சுமந்தபடி பயணிக்கும் நாயகன் டாம் ஹார்டி, வழக்கம் போல் வெனம் உடனான விவாதத்தில் நம்மை சிரிக்க வைப்பதோடு, கிராபிக்ஸ் காட்சிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.
வெனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. அதிலும், வெனம் குதிரை உடலில் புகுந்து வேகம் எடுப்பதும், பிறகு ராணுவத்திடம் இருந்து தப்பிக்க தண்ணீரில் பயணித்து, மீன் உடலில் புகுந்து பிறகு தவளையாக மாறும் காட்சியும், இறுதிக் காட்சியில் பல வெனம்கள் ஒன்றாக இணைந்து விசித்திர ஏலியன்களிடம் மோதும் காட்சிகள் மூலம் படத்தின் இயக்குநர் கெல்லி மார்சல் கைதட்டல் பெறுகிறார்.
ஹாலிவுட்டில் ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த ஐடியாவை வைத்து அடுத்தடுத்த பாகங்களை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்படும் பாகங்களில் முதல் பாகத்தைக் காட்டிலும் அதிகமான பிரமாண்டம் மற்றும் மிகப்பெரிய கிராபிக்ஸ் காட்சிகள் இருக்குமே தவிர, முதல் பாகத்தின் திரைக்கதையில் இருந்த சுவாரஸ்யம் ஒவ்வொரு பாகமாக குறைந்துக் கொண்டே வரும். அப்படி தான் வெனம் படத்தின் ஒவ்வொரு பாகங்களும் சுவாரஸ்யம் அற்ற திரைக்கதையோடு வெளியானது. அந்த வகையில், இந்த பாகத்தின் திரைக்கதையும் சுவாரஸ்யம் இல்லாமல் பயணிக்கிறது.
படத்தில் வரும் மார்டின் மற்றும் குடும்பத்தார் கதையோடு பயணிப்பது திரைக்கதையில் திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. அதிலும், அவர்கள் குடும்பம் மிக பாதுகாப்பான ஏரியா 51 பகுதியில் மிக சாதாரணமாக பயணிப்பது எல்லாம், சகிக்க முடியாத லாஜிக் மீறல்களாக இருக்கிறது.
இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், நகைச்சுவை வசனங்கள் ஆகியவற்றின் மூலம் வழக்கம் போல் தனது ரசிகர்களை வெனம் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் சென்றாலும், பொதுவான ஹாலிவுட் பட ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது.