கொட்டுக்காளி திரை விமர்சனம்

பாண்டி (சூரி) முறைப்பெண் மீனாவை (அன்னாபென்) திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் பாண்டி அவளுக்கு அனைத்து செலவுகளையும் செய்கிறார். 12ம் வகுப்பு முடிந்த உடனே பாண்டி திருமணம் செய்துக் கொள்ளாமல் மீனாவை கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். கல்லூரியில் காதல் வயப்பட்ட மீனா அதன் பின் பாண்டியை திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் மீனாவிற்கு(வசிய மருந்து வைத்துவிட்டதாக ) பேய் பிடித்து விட்டதாக நினைத்து இரு குடும்பங்களும் பாலமேடில் இருக்கும் சாமியாரிடம் அழைத்துச் சென்று பேயை விரட்ட நினைக்கின்றனர். பாண்டி மற்றும் மீனாவின் குடும்பத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் ஆட்டோவிலும் , இருசக்கர வாகனத்திலும், பயணிக்கின்றனர். இவர்களுடன் சாமியாரிடம் பலி கொடுக்க சேவலையும் எடுத்துச் செல்கின்றனர். அங்கிருந்து ஆரம்பிக்கும் பயணம் குல தெய்வக் கோயிலில் பூஜை பின்னர் சாமியாரிடம் சென்றடையும் வரை கதைக்களம் பயணித்து முடிகிறது. முடிவில் மீனாவை பிடித்த பேயை விரட்டினார்களா? மீனா பாண்டியை திருமணம் செய்ய சம்மதித்தாரா? பாண்டி எடுத்த முடிவு என்ன? போன்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம் கொட்டுக்காளி.

பாண்டியாக சூரி கொஞ்சம் பொறுமை மீதி நேரம் கோபப்படுபவராக தன் சகோதரிகளையும், கூட பயணிப்பவர்களையும், முறைப்பெண்ணையும் பேச்சை மீறினால் அடித்து விடும் குணம் கொண்டவராக, தன் முறைப்பெண் பேசாமல் பித்து பிடித்தது போன்று அமர்ந்து மதிக்காமல் இருப்பதும், திருமணம் செய்ய மறுப்பதற்கான காரணத்திற்காக சாமியாரிடம் அழைத்துச் செல்லும் ஆணாதிக்க மனோபாவத்துடன் நடந்து கொள்வதும் இறுதியில் என்ன முடிவு எடுத்தார் என்பதை நம்மையே யூகித்துக் கொள்ள வைத்துள்ளது திடீரென்று படம் முடிந்து விடுவது எதிர்பாராத ஒன்று.

பிடிவாத குணம் கொண்ட கிராமத்து பெண் மீனாவாக அன்னாபென் வெறித்த பார்வை, ஏதோ இழந்தது போன்ற சோகத்துடன், நடக்கும் சம்பவங்களை அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பது, எங்கு கூட்டிச் சென்றாலும் யாரிடமும் பேசாமல் இருப்பது, எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்பது உணரும் போது பரிதாபமே இவர் மேல் ஏற்படுகிறது. இறுதிக் காட்சியில் மட்டும் தன் தாயாரிடம் ஒரே ஒரு வார்த்தை பேசி சாமியார் செய்கையை கோடிட்டு காட்டும் இடத்தில் சிறப்பாக செய்துள்ளார்.

இவர்களுடன் பயணிக்கும் அத்தனை கிராமத்து மண் மாறாத முகங்கள் தங்கள் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக செய்து வசனங்களையும் இயல்பாக பேசியுள்ளனர்.

கொட்டுக்காளியில் இசையே கிடையாது, சுற்றுப்புற ஒலிகள் பின்னணி ஸ்கோராக அமைத்து இசையில்லாததை உணராத வண்ணம் கொடுத்துள்ளனர்.

எடிட்டர் கணேஷ் சிவா படத்தில் பொறுமையை சோதித்து விடுகிறார்.

காதல் விவகாரங்களை பேய் பிடித்ததாகக் கருதும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தைத் தொடர்ந்து, மீனாவை பேயோட்டுவதற்காக தொலைதூர கிராமத்தில் உள்ள கோவில் பூசாரியிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு முழு படமும் பயணத்தின் ஒவ்வொரு விவரத்தையும் படம்பிடித்து, கிளைமாக்ஸில் மீனாவுக்கு என்ன நடக்கிறது என்பதில் முடிகிறது. கிராமப்புற பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஆழமான அவமானகரமான அநீதியான மூடநம்பிக்கையை படம் கையாண்டு ஆணாதிக்கச் சமூகத்திடம் சரணடைய வேண்டியதை குறிப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ். ஊரிலிருந்து புறப்பட்டு சாமியாரிடம் போய் சேரும் வரை மக்கர் செய்யும் ஆட்டோ, குல தெய்வ கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் ஒருவழிப்பாதையில் திரும்ப முடியாமல் ஆட்டோவையே தூக்கி திருப்புவது, சேவல் காலில் கயிறு கட்டி ஒடாமல் இருக்க வைப்பது ஆட்டோவில் சோர்வாக இருக்கும் சேவலுக்கு முதலுதவி செய்வது, வழியில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை உபாதையை கழிக்க இறங்குவது, காளை ஒன்று பாதையில் வழி மறித்து நிற்க அதை லாவகமாக இழுத்துச் செல்லும் சிறுமி, சாமியாரிடம் பேய் ஒட்டிக் கொள்ளும் பெண்ணிற்கு ஏற்படும் நிலை என்று படம் முழுவதும் அங்கங்கே ஷேர் ஆட்டோவிலும் ஒன்றிரண்டு பைக்குகளிலும் கதாபாத்திரங்களின் பயணத்தின் சில நகைச்சுவை தருணங்களுடன் பொறுமையாக நிதானத்தை கடைப்பிடித்து இறுதியில் முடிவு நம் கையில் என்று இயக்கியிருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ். 100 நிமிடங்கள் மட்டுமே ஒடும் இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டுக்காளி அடிவாங்கினாலும் நினைத்ததை சாதிக்கும் பொறுமை இழக்காத பிடிவாதக்காரி.