சென்னையில் ரூ.7க்கு 20 லிட்டர் வாட்டர் கேன்.. 800 இடங்களில் வருகிறது வாட்டர் ஏடிஎம்
சென்னை: சென்னையில் 200 வார்டுகளிலும் சுமார் 800 இடங்களில் குறைந்த விலையில் தூய்மையான குடிநீர் வழங்கும் வாட்டர் ஏடிஎம்களை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை பெரும்பாடாக இருக்கிறது. மக்கள் வாட்டர் கேன் வாங்கித்தான் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். சென்னையில் ஒரு வாட்டர் கேன் 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை சில்லரை விலையில் விற்கப்படுகிறது. இதனால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குடிநீருக்காக அதிக அளவு செலவழிக்க வேண்டியதுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சென்னையில் 20 லிட்டர் குடிநீர் வாட்டர் கேனை ரூ.7க்கு விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சுமார் 800 இடங்களில் வாட்டர் ஏடிஎம்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு இதற்காக 250 சதுர அடி நிலத்தையும், மெட்ரோ வாட்டர் மற்றும் மின்சார வசதியையும் அளிக்கும். இதனை பயன்படுத்தி தனியார்கள், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் தூய்மையான குடிநீராக மாற்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். இந்த விநியோகிக்கும் வேலையை அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மேற்கொள்வார்கள். இந்த திட்டம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஒரு 20 லிட்டர் கேன் குடிநீர் விற்றால் ரூ1 கிடைக்கும்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் நல்ல மழை இருக்கும்.. வானிலை மையம் நல்ல செய்தி!
இந்த மலிவு விலை குடிநீர் விற்பனை மூலம் ஒவ்வொரு வார்டிலும் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பின் கீழ் சென்னை, தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, உள்பட நகரங்களில் ஏற்கனவே 400 இடங்களில் வாட்டர் ஏடிஎம் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.