கொல்கத்தா: டெல்லி, மேற்குவங்கம் உட்பட 7 மாநிலங்களில் 6-ம் கட்டமாக மக்களவைத்தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு, முன்னர் நேற்றிரவு மேற்குவங்கத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர் பாரதிய ஜனதாவை சேர்ந்த வாக்குச்சாவடி முகவரான ரமீன் சிங் என்பவர் ஆவார்.
மேற்குவங்க மாநிலத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள கோபிபல்லபூர் என்ற இடத்தில், ரமீன் சிங் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்துள்ள ராமன் சிங் ஜுனசோல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க பிரமுகரான கைலாஷ் விஜயவர்த்தியா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பின்புலத்தில் ரவுடிகள் சிலர்ரமீன் சிங்கை படுகொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். ஜனநாயகத்திற்கு இது ஒரு சோகமான நாள் என குறிப்பிட்ட அவர், பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி முகவர் என்ற ஒரே காரணத்திற்காகவே ரமீன் சிங் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சாடினார்.
இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜார்கிராம் பகுதி பாஜ தலைவரான சுகாமதே சாஷ்டி, கடந்த சில நாட்களாகவே கொல்லப்பட்ட ரமீன் சிங்கை ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறினார். இந்த விவகாரத்தில் ஒரு உயர் மட்ட விசாரணை மற்றும் உடனடி இழப்பீடு தேவை என்று தாங்கள் விரும்புவதாக கூறினார்.
பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் பாரதிய ஜனதா பிரமுகர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பரபரப்பான சூழலில் மேற்குவங்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்