ஹரிஷ் கல்யாண் பேசுகையில், ” நான் நடித்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிறது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு திரையரங்கில் எப்போது திரைப்படம் வெளியாகும் என எண்ணிக்கொண்டிருந்தேன். எந்த வகையான சினிமா வரும்? மக்கள் எப்படி ஆதரவு கொடுப்பார்கள்? என யோசித்துக் கொண்டே இருந்தேன். விஜய், அஜித், ரஜினி போன்ற நட்சத்திர நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று ரசிக்கிறார்கள். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களின் படங்களுக்கு மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவார்களா..! என்ற கவலை இருந்தது. ‘லவ் டுடே’, ‘டா டா’, ‘குட் நைட்’, ‘போர் தொழில்’… போன்ற படங்களை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இத்தகைய வெற்றியை அளித்ததற்காக மக்களுக்கு முதலில் நன்றி. இது என்னை போன்று அடுத்தடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உற்சாகமளிக்கக்கூடிய விசயம்.
நாம் ஒருவரை ரசிப்போம். ஒருவரை பிடிக்கும். ஒருவருக்கு ரசிகராக இருந்திருப்போம். ஆனால் தோனி என்றால்.. அது ஒரு ஆளுமை மட்டுமல்ல. உணர்வு. குறிப்பாக தமிழக மக்களுக்கு தோனி மீது அளவு கடந்த பிரியம். அதைவிட தமிழக மக்கள் உணர்வுபூர்வமானவர்கள். குடும்பத்தின் மீதும்.. நண்பர்கள் மீதும்.. உணர்வுபூர்வமாக பின்னி பிணைந்து இருப்பார்கள். தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவர். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த ஜாக்பாட். மேலும் எனக்கு இந்த வாய்ப்பு அளித்ததற்காக ரசிகர்கள் சார்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும், தோனிக்கும், திருமதி சாக்ஷி தோனிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நதியா, இவானா, ஆர். ஜே. விஜய், யோகி பாபு என அனைவருடனும் பணிபுரிந்தது மறக்க இயலாத அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடம் இருந்த உற்சாகம் திரையிலும் இடம் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். ” என்றார்.