இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ” எல் ஜி எம் படத்தை இயக்க வாய்ப்பளிப்பதற்காக திருமதி சாக்ஷி சிங் தோனி மற்றும் தல தோனி மற்றும் அவரது தயாரிப்பு குழுவினருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தோனி நினைத்திருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பளித்திருக்கலாம்.
இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் படத்திற்கான கதை கருவை திருமதி சாக்ஷி மேடம் சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை சற்று விரிவாக்கம் செய்து கொடுத்தேன். அது சாக்ஷி மேடத்திற்கு பிடித்திருந்தது. பிறகு அவர் தோனியிடம் விவாதித்தார். தோனியும் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஒரு சாதாரணமான கான்செப்ட்டை பிரமாண்டமாக காண்பிக்க வேண்டும் என நினைத்தோம். அதற்காக நிறைய விவாதித்தோம். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம். அவர்களும் தங்களுடைய பொறுப்பினை உணர்ந்து நடித்துக் கொடுத்தார்கள். பெரும்பாலான காட்சிகள் முதல் டேக்கிலேயே ஓகே ஆனது.
ஆர். ஜே. விஜயை அவருடைய இயல்பிலேயே நடிக்க வேண்டும் என்று கூறினேன். அவர் இயல்பாக நடிக்க வைப்பதில் தான் சற்று கட்டுப்பாடாக நடந்துக் கொண்டேன். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் என அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
இது ஒரு ஜாலியான திரைப்படம். இந்த திரைப்படத்தில் சினிமாத்தனமான வசனங்கள் இல்லாமல்.. தினசரி வாழ்க்கையில் பேசும் வசனங்கள் தான் இடம் பிடித்திருக்கிறது. கன்டென்ட்டாக பார்க்கும் போது இது ஒரு சர்வதேச அளவிற்கானது. இதற்கு நாங்கள் தீர்வு என்று எதையும் சொல்லவில்லை. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தி இருக்கிறோம். இது ஒரு ஃபேண்டஸி சப்ஜெக்ட். குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் என ஒவ்வொருக்கும் அவர்களுடைய விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பொருத்தமானது என்பதை சொல்லியிருக்கிறோம். இதை அறிவுரையாக சொல்லாமல் அற்புதமான தருணங்களாக உணர்த்தியிருக்கிறோம்.
படப்பிடிப்பு தளம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பின்னணி வேலைகள் கடினமாக இருந்தது. யோகி பாபு, வெங்கட் பிரபு ,வி டி வி விஜயன் ஆகியோரின் ஒத்துழைப்பும் மறக்க முடியாது. படப்பிடிப்பு தளத்தில் என்னைத் தவிர அனைவரும் அனுபவசாலிகள். அதனால் படப்பிடிப்பு எளிதாக இருந்தது. ஜூலை 28ஆம் தேதி அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எல் ஜி எம் படத்தை கண்டு ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.