ஆர். ஜே. விஜய் பேசுகையில், ” படத்தின் இயக்குநர் கதையை அவரது தோளில் சுமக்கிறார் என்றால்.. ஊடகங்கள் கேமராக்களை தங்கள் தோளில் சுமந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். அதற்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு கதாசிரியர் கதை எழுதலாம். இயக்குநர் இயக்கலாம். நட்சத்திர நடிகர்கள் அதில் நடிக்கலாம். ஆனால் அந்த படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வேலையை ஊடகங்களான நீங்கள் தான் செய்கிறீர்கள். தொடர்ந்து நீங்கள் இந்த திரைப்படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால்… படத்தின் தொடக்க விழாவில் திருமதி சாக்ஷி தோனி வருகை தந்தார்கள். அப்போது அவருடைய பாதுகாவலர்கள் அனைவரையும் ‘விலகு விலகு’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்களிடத்தில் சாக்ஷி தோனி, ‘அதன் யாரும் இல்லையே.. பின் எதற்கு வழி விடு வழி விடு என்று சொல்கிறீர்கள்’ என இயல்பாக கேட்டார்கள். அது முதல் தற்போது வரை அவர்களை பார்க்கிறேன். அவர்கள் மிகவும் இயல்பாக.. கூலாக.. இருக்கிறார்கள்.
அடுத்தது ‘தல’ தோனி. அவர் படப்பிடிப்பு நடக்கும்போது வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம். வரவில்லை. ஆனால் படத்தின் பணிகள் நிறைவடைந்து இசை வெளியீட்டு விழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என் அருகே வந்து, ‘ஹலோ விஜய்’ என்று அவர் என்னை பெயர் சொல்லி அழைத்தவுடன்.. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரை சந்தித்த அந்த தருணம் மறக்க முடியாது.
இயக்குநர் ரமேஷ் நிறைய கதைகளை என்னிடம் சொல்லி இருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் போது மீண்டும் கல்லூரி காலகட்டம் ஞாபகம் வந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் இணைந்து உற்சாகமாக பணியாற்றினோம். சுற்றுலாவின் போது பிரின்ஸ்பால் திடீரென்று நட்பாகி விடுவார். அதைப் போல் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நதியா மேடம் ஏழு மொழிகளுக்கு மேல் தெரிந்திருப்பதால் எங்கள் அனைவருக்கும் அவர் நட்பாகி விட்டார்.” என்றார்.