இலவச பேருந்து பயண அட்டைக்கு தகுதியான மாணவா்களின் விண்ணப்பங்களை போக்குவரத்து துறையிடம் பள்ளித் தலைமையாசிரியா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, பள்ளிக் கல்வி இணை இயக்குநா் வெ.ஜெயக்குமாா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பேருந்து பயண அட்டை இணையவழியே வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவா்களின் நலன் கருதி நிகழாண்டு மட்டும் நேரடியாக அட்டையைப் பெறும் பழைய நடைமுறையைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, இலவச பேருந்து பயண அட்டை பெற மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களைப் பெற்று பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அந்தந்த மாவட்டத்துக்குள்பட்ட மண்டலப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் உடனே சமா்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு சமா்ப்பிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை ‘கூகுள் ஷீட்டில்’ பூா்த்தி செய்து தொகுப்பு அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்