வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ள அநீதி படம்
சென்னையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் ஓசிடி பிரச்சினை கொண்ட திருமேனி (அர்ஜூன் தாஸ்). மன அழுத்தம் நிறைந்த அவரது வாழ்க்கையில் பணக்கார வீட்டு பணிப்பெண் சுப்புலட்சுமியின் (துஷாரா விஜயன்) காதல் கிடைக்க, காட்சிகள் மாறுகிறது. அதுவரை இருந்த விரக்தியான மனநிலையிலிருந்து காதல் அவரை மீட்டெடுத்து சிரிக்க வைத்து ஆசுவாசப்படுத்துகிறது. இப்படியான சூழலில் திடீரென ஒருநாள் சுப்புலட்சுமியின் முதலாளி இறந்து விட, அந்த கொலைப்பழி சுப்புலட்சுமி மற்றும் திருமேனியின் மீது விழுகிறது. இந்தக் கொலைப்பழியிலிருந்து இவரும் தப்பித்தார்களா? இல்லையா? இதைச்சுற்றி நடக்கும் அரசியல் என்ன? – இதுதான் படத்தின் திரைக்கதை.
நிறுவனங்களின் கோர முகத்தையும், அதில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் நிலை, பெருகிவரும் கார்ப்பரேட் நுகர்வு கலாசாரம், பணிநீக்கம், தனியார் மயமாக்கல் குறித்து காத்திரமாக பேசியிருக்கிறார்.
‘ஒரு காலத்தில் வேலை கிடைக்காமல் இருந்தது டிப்ரஷனாக இருந்தது. தற்போது வேலையே டிப்ரஷனாகிவிட்டது’, ‘மழை பெய்யுது, நின்னுட்டுப் போங்கனு சொன்ன குரலும், தலை துவட்ட துண்டு குடுத்த கையும் கண்டிப்பா ஒரு முதலாளியோடது இல்லனு தெரியும்’, ‘போற போக்க பாத்தா இந்தியான்னு எழுதி கீழ பிரைவேட் லிமிடட் போட்ருவாங்க போல’, ‘தண்ணீ விக்கிற விலைக்கு தண்ணீ கேக்குதா?’ போன்ற வசனங்கள் சமகால சூழலை பிரதிபலிக்கின்றன.
படத்தை முடிந்த அளவு எங்கேஜிங்காக கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். அதன்படி நகரும் படத்தின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, நுகர்வு கலாசாரத்தால் பலியாகும் எளிய மக்களின் வாழ்க்கையை பேசும் ஃப்ளாஷ்பேக் பகுதி அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. உணவு டெலிவரி செய்யும் இளைஞராக, மன அழுத்தத்தில் சிக்கிப் தவிப்பராக, கோபத்தை கட்டுபடுத்தி முகத்தில் உணர்ச்சிகளாக அதை வெளிப்படுத்தும் இடங்களில் தனது நடிப்பால் திருமேனி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அர்ஜூன் தாஸ். வில்லன் கதாபாத்திரத்துக்குள் சுருக்கப்பட்டிருந்த ஒருவரை சரியாக பயன்படுத்தி, தான் எழுதியிருக்கும் கதாபாத்திரத்துக்கு தகுந்த ஒருவரை பொருத்தியிருக்கிறார் வசந்தபாலன். அவரது கம்பீரமான குரலுடன் தொடங்கும் கவிதை ஈர்ப்பு.
அதேபோல இதுவரை மிடுக்கான உடல்மொழியுடன், துணிச்சலான பெண்ணாக வலம் வந்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் புதிதான கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். பதற்றத்துடனும், பயத்துடனும், குடும்பச் சூழ்நிலையை உணர்த்து பணியிடத்தில் தன் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை சகித்துகொண்டு வாழும் எளிய மக்களில் ஒருவராக துஷாரா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தென்காசி வட்டார வழக்கில் மொழியில் வேகத்தை கூட்டி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் காளி வெங்கட். உண்மையில் தமிழ் சினிமா அவரை அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம், சாரா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் கதாபாத்திர தேவையுணர்ந்து நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை பலம் சேர்த்த அளவுக்கு பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. நாயகியின் அறிமுகக் காட்சியில் வரும் பிஜிஎம் ரசிக்க வைக்கிறது. எட்வின் சாகே ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தேவையான பங்களிப்பை செய்கிறது. டான் அசோக், போனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகள் தனித்து தெரிகின்றன.