Casting : Guru Somasundaram, Sridhar Master, Nithish Veera, Petter Raj, Jack Arunachalam, Sharmisha, Durga, Swetha Dorathy, Josephine
Directed By : R.Vengat Bhuvan
Music By : Robert
Produced By : Brogan Movies
சிங்கவனம் என்கிற காட்டில் மக்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்துவருகின்றனர், இதனை அறிந்த காவல் அதிகாரிகள் , அங்கு இறந்துகிடந்தவர்களை காட்டிலிருந்து எடுத்துச்செல்கின்றனர், அதில் கதையின் நாயகன் பெல் மற்றும் அவரின் நண்பர் உயிருடன் இருக்கின்றனர், இவர்கள் இருவரையும் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
சித்தர்களின் வம்சாவழியை சேர்ந்த ஸ்ரீதர், பல தலைமுறையாக தனது குடும்பத்தினர் பாதுகாத்து வந்த, மனிதர்களுக்கு மரணமே இல்லாத வாழ்க்கையை தரக்கூடிய அபூர்வ மூலிகை நிசம்பசூரிணி பாதுகாத்து வருகிறார். அதே சித்தர்களின் வம்சத்தை சேர்ந்தவரான குரு சோமசுந்தரம், நிசம்பசூரிணி மூலிகையை கைப்பற்றி வெளிநாட்டுக்கு விற்று பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார். இறுதியில், அந்த மூலிகை பாதுகாக்கப்பட்டதா? அல்லது விற்பனை செய்யப்பட்டதா? என்பது தான் ‘பெல்’ படத்தின் கதை.
பெல் என்ற கதாபாத்திரத்தில் நடன இயக்குநர் ஸ்ரீதரும், மறைந்த நடிகர் நிதிஷ் வீராவும் நடித்திருக்கிறார்கள். நிதிஷ் வீரா இறந்ததால், ஸ்ரீதரை வைத்து வித்தியாசமான முறையில் சொல்லி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்.பெல் வேடத்தில் பார்வையற்றவர்களாக நடித்திருக்கும் நிதிஷ் வீரா மற்றும் நடன இயக்குநர் ஸ்ரீதர் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். காதல் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் இருவரும் அளவாக நடித்து கவர்ந்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பார்வையிலேயே வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் அவர் சித்த மருத்துவத்தை மதிக்காத மனிதர்களிடம் அதை எப்படி விற்பனை செய்ய வேண்டும், என்று சொல்வது மருத்துவத்துறையில் நடக்கும் வியாபாரத்தை தோலுறித்துக் காட்டுகிறது.
பெல்லின் நண்பராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பீட்டர் ராஜ், முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெறுகிறார். நடிப்பு, நடனம் என்று அனைத்திலும் இயல்பாக நடித்து திரைக்கதைக்கு பல்லம்சேர்த்துஉள்ளார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஷார்மிஷா, துர்கா இருவரும் புதுமுகங்களாக இருந்தாலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.ஜாக் அருணாச்சலம், சுவெதா டோரத்தி, ஜோஸ்பின் ஆகியோரும் நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.பரணிக்கண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.ராபர்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், பின்னணி இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.வெயிலோன் கதை, வசனம் எழுதியிருக்கிறார். தமிழர்களின் பெருமைகளில் ஒன்றான நிசம்பசூரிணி என்ற மூலிகை வைத்தியத்தை மையப்படுத்திய கதையை புதுமையான முறையில் கொடுத்திருக்கிறார்.வெயிலோனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஆர்.வெங்கட் புவன், மூலிகை மருத்துவத்தை மையப்படுத்திய கதையை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாகவும், கமர்ஷியலாகவும் இயக்கியிருக்கிறார்.
சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும், தொய்வில்லாத திரைக்கதை மற்றும் மூலிகை மருத்துவம் பற்றிய விஷயங்கள் போன்றவை படத்தை ரசிக்க வைக்கிறது.