சிறுவன் சாமுவேல், ஒரு கிரிக்கெட் பேட் வாங்க ஆசைப்படுகிறான். அப்பா சவட்டி (மொத்தி) எடுக்க, சாமுவேல் மனம் நொறுங்குகிறது. ஐநூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட பந்தடிக்கும் மட்டை (Cricket bat) கிடைக்குமெனக் கேள்விப்படுகிறான். சாமம், தானம், பேதம் என்ற முதல் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றி, கார்டுகளைச் சேகரிக்க முயல்கிறான் சிறுவன் சாம். அவனது ஆசை பலித்து, அவனால் புது கிரிக்கெட் மட்டை வாங்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
பதினெட்டு நாளில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்திற்கு, லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் செய்துள்ளனர். வடக்கு கன்னியாகுமரியின் வட்டார வழக்கை ‘டப் (Dub)’ செய்வது கடினம் என்பதால் நேரடி வசனப்பதிவிற்குச் சென்றுள்ளனர். சப்-டைட்டில் இல்லாமல், புரிவதற்கு சற்றே சிரமம் எனுமளவுக்கு, மலையாள நெடி தூக்கலாக உள்ள தமிழாக உள்ளது.
அறிமுக இயக்குநர் சாது ஃபெர்லிங்டன் உருவாக்கத்தில் புதுமுகங்கள் அஜிதன் தவசிமுத்து, K.G விஷ்ணு, S.செல்லப்பன், S.B.அபர்பணா, M.A.மெர்சின், J.ஜெனிஸ், உள்ளிட்டோர் நடித்துள்ள படம்.
ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று பார்த்து பார்த்து சலித்த நிலையில், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக வந்துள்ளது, சிறுவன் சாமுவேல் திரைப்படம்.
சிறுவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள்.. அதை பெரியர்கள் பார்க்கும் பார்வை என சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர் சாது.
சிறுவர்கள் இருவர் நண்பர்கள், கிரிக்கெட் பேட் வாங்கிவிட வேண்டு் என்று ஆசைப்பட.. அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்தான் கதை.
கன்னியாகுமரி பகுதியில் நடக்கும் கதை என்பதால் அங்கிருக்கும் சிறுவர்களையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததில் சுத்தமான குமரித் தமிழைப் படம் முழுதும் கேட்க நேர்கிறது. அதுவே படத்தின் ஒரு சுவாரசியத்துக்கும் காரணமாக அமைகிறது.
உங்கள் முன்னால் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது என்ற நினைவில்லாமல் நீங்கள் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருங்கள் என்று இயக்குனர் சொல்லி இருப்பார் போல. குமரி மாவட்டத்து வழக்கும், வாழ்க்கையும் அப்படியே நம் கண் முன்னால் விரிகிறது.
படத்தில் நடிப்பதற்கு நடிக, நடிகையரைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்த ஏரியாவில் அழகான முகங்களைத்தான் பிடிப்பார்கள். ஆனால், படத்தில் தான் படைத்த பாத்திரங்கள் எந்த வகையினரோ அப்படியே அத்தனைப் பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.
இயக்குனரின் தேவை புரிந்து ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தியும், இசையமைப்பாளர்கள் சாம் எட்வின் மனோகர் மற்றும் ஸ்டான்லி ஜானும் அவரது எண்ண அலைவரிசையிலேயே பயணப்பட்டு இருக்கிறார்கள்.
சிறுவர்களின் டியூஷன் டீச்சர் ஆக வருபவர் தொழில் முறை நடிகையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு இளம் ஆசிரியை எப்படி இருப்பாரோ, எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே சிறுவர்களை வெளுத்து வாங்குவதும், ஆனால் அந்த ஆசிரியை மேல் சிறுவர்கள் அத்தனை பாசத்துடன் இருப்பதும் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான காட்சிகள்.
சாமுவேலின் மனசாட்சி திறக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அவன் ஓடிவரும் வழிகள் எல்லாம் ஏதோ ஒரு விசேஷத்தின் காரணமாக சீரியல் லைட் செட்கள் வண்ணமயமாக எரிந்து கொண்டிருப்பதில் காட்சியின் தேவையை ஒளிப்பதிவாளர் மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்.
இயல்பாக வரும் மழை சாமுவேலின் குற்றத்தை கழுவி அவன் பின்னணியில் எரியும் வண்ண விளக்குகள் அவன் மன இருள் அகன்று ஒளிர்வதாக உணர வைக்கும் அந்த இறுதிக் காட்சி இயக்குனரின் திறமைக்கு சான்று.
இப்போது பல பட விழாக்களில் கலந்து கொண்டிருக்கும் இந்தப் படம் பரிசுகளை வென்றிருக்கிறது. மேலும் பல பட விழாக்களில் உயரிய பரிசுகளைப் பெறும் சாத்தியமும் இந்தப் படத்துக்கு இருக்கிறது