மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் படவரிசையில் 32வது படமாகவும், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3 வெளியாகியிருக்கிறது வான்வெளியில் ‘Knowhere’ என்ற ஒரு இடத்தில் இருக்கும் கார்டியன்ஸ் குழுவினரை புதிய வில்லனான ஆடம் வார்லாக் தாக்குகிறார். தாக்குதலின் நோக்கம் ராக்கெட் ரக்கூனை அங்கிருந்து கடத்துவது. கார்டியன்ஸின் எதிர் தாக்குதலால் அங்கிருந்து வில்லன் படுகாயத்துடன் தப்பிக்கிறார். இந்த தாக்குதலில் ராக்கெட் ரக்கூன் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. ராக்கெட்டின் நண்பர்களால் அதன் உயிரை காப்பாற்ற முடிந்ததா? ஆடம் வார்லாக் எதற்காக ராக்கெட்டை கடத்த முயல்கிறார்? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3.
சரவெடியாக தொடங்கும் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3 படம் தொடங்கியதுமே கதைக்கும் நுழைந்து விடுகிறது. அங்கிருந்து திரைக்கதை, ஆக்ஷன், கண்ணீர், சிரிப்பு என ஒரு முழுமையான ரோலர் கோஸ்டர் அனுபவத்தை பார்வையாளருக்கு தருகிறது.கார்டியன்ஸ் படங்களுக்கு உரிய வண்ணமயமான செட்கள், கலர் கலர் ஏலியன்கள் என ஒவ்வொரு காட்சியும் கண்ணை பறிக்கின்றன. வழக்கம்போல 80களில் ஹிட்டடித்த பாப் பாடல்கள் இந்த படத்திலும் பல இடங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று, அதன் எமோஷனல் காட்சிகள். இதுவரை வந்த மார்வெல் படங்களில் இல்லாத அளவுக்கு எமோஷனல் காட்சிகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் ஒரு காட்சி, கல் மனதையும் கரைத்து கண்ணீர் விட வைக்கும்.
மார்வெல் படங்களுக்கே உரிய சூப்பர் ஹீரோயிச தருணங்கள், ஸ்லோ மோஷன் காட்சிகள், ஆடியன்ஸின் பல்ஸை அறிந்து அவர்களை எகிறிக் குதிக்க வைக்கும் காட்சியமைப்புகள், படத்தின் ஆரம்ப சண்டை காட்சியை தொடர்ந்து, பிரதான வில்லனின் இருப்பிடத்தை தேடிச் செல்லும் இடங்களில் சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
கார்டியன்ஸ் பட வரிசையில் இதுவே கடைசிப் படம் என்பதை மார்வெல் நிறுவனமும் இயக்குநர் ஜேம்ஸ் கன்னும் ஏற்கெனவே அறிவித்து விட்டனர். அதற்கான குறிப்புகளும் படத்தின் இறுதிக் காட்சியில் அமைந்துள்ளன. இனி கார்டியன்ஸ் கதாபாத்திரங்களில் மற்ற மார்வெல் படங்களில் இடம்பெறும். சில சர்ச்சைகளால் மார்வெல் நிறுவனத்திடமிருந்து டிசி-க்கு சென்ற ஜேம்ஸ் கன், மீண்டும் சமரசமாகி இயக்க ஒப்புக் கொண்ட படம் இது. கார்டியன்ஸ் கதாபாத்திரங்கள் எப்போதும் தன்னுடைய இதயத்துக்கு நெருக்கமானவை என்று பல பேட்டிகள் ஜேம்ஸ் கன் கூறியுள்ளனர். இந்த படத்தின் தன்னுடைய ஆதர்ச கதாபாத்திரங்களுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்துள்ளார் ஜேம்ஸ் கன்.