மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், டிக்கெட் முன்பதிவு மூலம் உலகளவில் ரூ.11 கோடிக்கு விற்பனை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரமிற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்ற பேச்சு இருந்தது, அதனை சரிசெய்ய இரண்டாம் பாகம் முழுக்கவே விக்ரம் தான் படத்தை தாங்கி பிடிக்கிறார், ஆதித்ய கரிகாலனாகவே வாழ்ந்துள்ளார் விக்ரம்.
முதல் பாகத்தில் ஜெயம் ரவி கடலில் புயலில் சிக்கி இறந்தது போல் காட்டி இருப்பார்கள், அதனுடன் படம் முடிவிற்கு வந்திருக்கும். இரண்டாம் பாகத்தில் சிறுவயதில் இருக்கும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரங்கள் காட்டப்படுகிறது, சொல்லப்போனால் இதையே ஒரு தனி படமாக எடுக்கலாம். அந்த அளவிற்கு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் மணிரத்தினம். இந்த சிறு வயது கதாபாத்திரங்கள் தான் இருவருக்கும் இடையே உள்ள காதலை வலுப்படுத்துகிறது. கடலில் சிக்கிய அருள்மொழிவர்மனை நந்தினி அம்மா உதவியுடன் வந்தியத்தேவன் காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்கிறார். மறுபுறம் நந்தினி பாண்டியர்களின் உதவியுடன் ஆதித்ய கரிகாலனை கொள்ள சதித்திட்டம் தீட்டுகிறார். இறுதியில் ஆதித்ய கரிகாலனுக்கு என்ன ஆனது? சோழ தேசத்தை பாண்டிய மன்னர்கள் கைபேற்றினார்களா இல்லையா? என்பது தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் .
அருள்மொழி வர்மனாக இருந்து ராஜராஜ சோழனாக மாறும் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. ஒரு ராஜா எப்படி இருப்பார் என்பதை தன்னுடைய உடல் மொழி மூலம் சொல்லி இருக்கிறார் ஜெயம் ரவி. அழகின் மறு உருவமாக திரிஷா திரையில் ஜொலிக்கிறார். குறிப்பாக ஒரு நடு தீவில் கார்த்தி மற்றும் திரிஷா இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் கவிதை போல் இருந்தது. 😍அதேபோல இரண்டாம் பாதியில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இடையே நடக்கும் உரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது. பின்னணி இசை மற்றும் பாடல்களில் ஏஆர் ரகுமான் அசத்தியுள்ளார், பல சாதாரண காட்சிகளும் ரகுமானின் இசையில் அசாதாரண காட்சிகளாக மாறி உள்ளது. புத்தகத்தை வாசித்து விட்டு பொன்னின் செல்வன் படத்தை பார்க்க செல்பவர்களுக்கு நிறைய கேள்விகளும் குறைகளும் எழலாம். காரணம் பொன்னியின் செல்வன் நாவலின் பல முக்கியமான கதைகளை மாற்றி அமைத்துள்ளார் மணிரத்தினம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நாவலில் உள்ள எதுவுமே இடம் பெறவில்லை. மேலும், போர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆதித்ய கரிகாலன் இறக்கும் காட்சியும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை, நாவலில் படிக்கும் போதே உணர்ச்சிகளை ஏற்படுத்தும் அந்த காட்சி, திரையில் பிரதிபலிக்கவில்லை. இது பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். மற்றபடி முதல் பாதத்தை போலவே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமம் மிகப்பெரிய வெற்றியடையும்