ஆகஸ்டு 16 1947 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்து கதை ஆரம்பிக்கிறது. வெளியுலக தொடர்பே இல்லாத ‘செங்காடு’ எனும் கிராமம், பருத்தி நூல் வளம் நிறைந்த இடம். அவ்வூர் மக்களுக்கு, பருத்தி நெய்து பிழைப்பதுதான் வாழ்வாதாரம். அப்படி வேலை செய்யும் மக்களை அடிமைபோல் வேலை வாங்கும் ராபர்ட் க்ளைவ் என்பவருக்கும், அவ்வூர் மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் – படத்தின் காட்சிகள், இந்தியா சுதந்திரம் வாங்கிய காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.
ராபர்ட்டின் மகன் ஜஸ்டின், பெண்களை வன்கொடுமை செய்யும் கொடுமையானவனாக காட்சிப்படுத்தப்படுகிறான். இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அவ்வூர் ஜமீன்தார் துணை போகிறார். ஜமீன் தாரின் மகளையும் ஒரு கட்டத்தில் அடைய நினைக்கும் ஜஸ்டினை, அவளது சிறுவயது நண்பணும், அவளை ஒரு தலையாக காதலிப்பவனுமான பரமன் (கௌதம் கார்த்திக்) கொள்கிறான். இதற்கிடையில், ராபர்ட், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த விஷயம் தெரிய வர, அதை கிராம மக்களிடமிருந்து மறைத்து அதன் மூலம் ஆதாயம் காண விரும்புகிறான். தனது மகன் ஜஸ்டின் இறந்த செய்தியை அறிந்ததும், அவனைக் கொன்ற பரமனை பழி தீர்க்க வேண்டும் என புறப்படுகிறான், ராபர்ட். சுதந்திர காலத்திற்கு ஏற்ற காட்சியமைப்புகள் மற்றும் ஆடை வடிவமைப்பினை இந்த படத்தில்தான் பார்க்க முடிந்தது. அந்த காலத்தில் உபயோகப்படுத்திய பொருட்களில் இருந்து, மக்கள் உபயோகித்த வார்த்தைகள் வரை ஒவ்வொன்றையும் வடிவமைப்பதில் படக்குழுவின் மெனக்கெடல்கள் தெரிகிறது. அரண்மனை முதல் கூரை வீடு வரை, படத்திற்கும், காட்சிக்கும் ஏற்றவாறு அமையப் பெற்றிருக்கும் காட்சியமைப்புகள் சிறப்பு.
காமெடி மற்றும் சென்டிமென்ட் ரோல்களில் நடித்து வந்த சாக்லேட் பாய் கௌதம் கார்த்திக்கிற்கு நன்றாக நடிக்க நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறது, ஹீரோவின் நண்பனாக குக் வித் கோமாளி புகழ். நாக்கு அறுபட்ட நிலையில் மக்களிடம் உண்மையை சொல்ல போராடும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார். படத்தின் நாயகி, ரேவதி தனது சாயலில் கீர்த்தி சுரேஷை நினைவு படுத்துகிறார். இவருக்கு இது முதல் படம் என்பது போல் தெரியவில்லை. அந்தளவிற்கு தேர்ந்த நடிப்பு. இவர்களை தவிர, படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கின்றனர்.
செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவும் சுதர்சன்.ஆர்-இன் படத்தொகுப்பும் படத்திற்குப் பெரும்பலம் சேர்த்திருக்கின்றன. வெட்ட வெளியில் உள்ள நூற்பாலை, இரவு நேர மலைக்கிராமம் என எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஷான் ரோல்டனின் இசை பின்னணி இசை பலம்தான் .டி.சந்தானத்தின் கலை இயக்கமும், பெருமாள் செல்வத்தின் ஆடை வடிவமைப்பும் மொத்த படத்திற்கும் உயிர் தருகிறது.