இயக்குநர் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்தின் பாகம் 1 & 2 படத்தை ‘துணைவன்’ சிறுகதையில், 18 பக்கங்களைக் கொண்ட கதையின் மையப் புள்ளியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் தனது கற்பனைக் கலந்த கதையைக் இயக்கியிருக்கிறார்.
வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று அருமபுரி மலையின் கனிம வளத்தை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதற்கு ஊர் மக்கள் சார்பில் எதிர்ப்பு எழும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக விஜய்சேதுபதி மற்றும் போராளிகள் இணைந்து மக்கள் படை என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் மூலம் அரசாங்கத்தை சுரங்கம் அமைக்க விடாமல் தடுக்கின்றனர்.. இதனிடையே அங்கு நடக்கும் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பழி மக்கள் படை மேல் சுமத்தப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க ’ஆபரேஷன் கோஸ்ட்’ என்ற திட்டம் கையில் எடுக்கப்படுகிறது. அதில் உள்ளவர்களை பிடிக்க போலீசார் கிராமத்துக்குள் களமிறங்க ஒரு தரப்பினர் அங்கிருக்கும் பொதுமக்களை சித்திரவதை செய்கின்றனர்.
இந்த சிறப்பு காவல் படையில் டிரைவராக வந்து வேலைக்குச் சேருகிறார் போலீஸ் கான்ஸ்டபிள் சூரி. வந்த இடத்தில் இவருக்கும் மலைவாழ் பெண்மணியான பவானி ஸ்ரீ க்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் மக்கள் படையை சேர்ந்தவர்களும் விஜய் சேதுபதியும் எங்கே தங்கி இருக்கின்றனர் என்ற ரகசியம் இவருக்கு தெரிய வருகிறது. அந்த நேரம் சிறப்பு காவல் படையினர் விஜய் சேதுபதியை பிடிக்கும் முயற்சியில் அந்த மொத்த கிராமத்தில் இருக்கும் மக்களைப் பிடித்து வைத்துக்கொண்டு அவர்களைத் தங்கள் கஸ்டடியில் வைத்து சித்திரவதை செய்கின்றனர். அதில் சூரியின் காதலியும் மாட்டிக் கொள்கிறார். தன் காதலி மற்றும் ஊர்ப் பெண்களைக் காப்பாற்ற நினைக்கும் சூரி, விஜய் சேதுபதியை காட்டிக் கொடுக்க முடிவெடுக்கிறார்.
“வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனா என்று யோசித்தவர்கள், படத்தைப் பார்த்த பிறகு குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவுக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் என்பதை ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள்.
வேல்ராஜின் கேமரா நம்மை மலைகிராமத்துக்கு அழைத்துச் செல்வதுடன் லைவ்வாக திறம்பட படத்தைக் காட்சிப்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – ஜெயமோகன் கூட்டணியில் படத்தின் வசனங்கள் கதைக்கும் அதன் அரசியலுக்கும், அதிகாரம், அடக்குமுறைக்கு எதிரான குரலாய் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
மொத்தத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் மீதான எதிர்பார்ப்பை வெற்றிமாறன் மற்றும் குழுவினர் கச்சிதமாகப் பூர்த்தி செய்து, அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்…