தென்காசி மாவட்டத்தில் உள்ள டி3 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பிரஜின், அப்பகுதியில் மர்மமான முறையில் மரணமடைந்த இளம் பெண் வழக்கை விசாரிக்கும் போது, அதேபோன்று பல சம்பவங்கள் அங்கு நடந்திருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த விசாரணையைத் தொடங்கியதிலிருந்து பல சிக்கல்கள். அதன் உச்சமாக அவர் மனைவியும் அதேபோன்றதொரு விபத்தில் இறக்கிறார்அதன் பின்னணி குறித்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் பிரஜினுக்கு பல பிரச்சனைகள் வர, அவற்றை சமாளித்து குற்றத்தின் பின்னணியையும், குற்றவாளிகளையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சஸ்பென்ஸாக சொல்வதே ‘டி3’-யின் கதை.
நாயகன் பிரஜின் காவல்துறை ஆய்வாளர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்துள்ளார் என்பது தெரிகிறது. கட்டுக்கோப்பான உடல் மட்டுமின்றி கச்சிதமான நடிப்பும் அவருக்கு நல்ல பெயர் பெற்றுத்தருகிறது.
பிரஜின் மனைவியாக நடித்திருக்கும் வித்யாபிரதீப்புக்கு அதிக வேலையில்லை. ஆனால் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து கவனிக்க வைக்கிறார்.
இறுதியில், குற்ற பின்னணியின் ரகசியத்தை வெளிப்படுத்தும் போது இயக்குநர் பாலாஜி சொல்லும் மருத்துவ குற்றமும், அதை செய்யும் விதமும் மற்ற க்ரைம் த்ரில்லர் படங்களில் இருந்து சற்று வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.