வெள்ளிமலை என்ற அழகான மலை கிராமம். அந்த ஊரில் வசிக்கும் அனைவரும் நோய் நொடி என்று வரும்போது பரம்பரையாக இயற்கை வைத்தியம் செய்யும் சுப்பிரமணி குடும்பத்தை நாடுகிறார்கள். ஒரு முறை சுப்பிரமணியின் சகோதரர் தவறான வைத்தியம் அளித்து ஒருவர் இறந்து போனதாக ஊர்மக்கள் ஆவேசப் பட்டு சுப்பிரமணி குடும்பத்திடம் வைத்தியம் பார்ப்பதை நிறுத்தி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் அரிப்பு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவருக்கு சுப்பிரமணி வைத்தியம் பார்த்து குணமாக்கி மக்கள் நம்பிக்கையை பெறுகிறார். தொடர்ந்து ஊர்மக்கள் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க வரும்போது தன்னிடம் வைத்தியத்திற்கான மருந்து இல்லை அது மலை உச்சியில் இருக்கிறது என்று சொல்லி சிலரை அங்கு அழைத்துச் செல்கிறார். பயணத்தின் போது எனக்கு அரிப்புக்கான மருந்து எது என்று தெரியாது என்று சொல்லி அதிர்ச்சி தருகிறார். ஊரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறக்கின்றனர். சுப்பிரமணியால் மூலிகையை கண்டுபிடிக்க முடிந்ததா, உயிர்ப்பலியில் இருந்து மக்களை காப்பாற்ற முடிந்ததா என்பது மீதி கதை.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி கதாபாத்திரம் என்று தனி முத்திரை பதித்திருக்கும் சூப்பர் குட் சுப்ரமணியன் அவர்களுக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தரும் என்பதில் சந்தேகமில்லை. எந்த அளவுக்கு நேர்த்தியாக நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு வாழ்ந்து இருக்கிறார்.
பாரம்பரிய சித்த மருத்துவம் எவ்வாறு தனது செல்வாக்கை இழந்தது என்பதைப் பேசியிருக்க வேண்டிய படத்தை ஒரு குடும்பத்தின் கதையாகச் சுருக்கி எழுதி, இயக்கியிருக்கிறார் ஓம்.விஜய். பண்பாட்டுப் படையெடுப்பில் தமிழர்கள் தொலைத்தவற்றில் சித்த மருத்துவமும் ஒன்று என்பது குறித்து வாய் திறக்காவிட்டாலும், அது மீட்சிப் பெற வேண்டும் என்கிற நோக்குடன், தூய கிராமத்து நகைச்சுவையைத் தொட்டுக்கொண்டு சித்த மருத்துவத்தின் வலிமையையும் காலந்தோறும் அதன் தேவை தொடர்வதையும் பிரச்சாரம் இல்லாமல் வலியுறுத்தி இருப்பதற்காகவே வரவேற்கலாம்.
படத்தின் ஈர்ப்பான அம்சங்களில், தேனி மாவட்டத்தின் மேக மலையை இவ்வளவு ஊடுருவிச் சென்று படமாக்கியிருக்கும் மணிபெருமாளின் ஒளிப்பதிவு முதலிடம் பெறுகிறது. அடுத்து என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் என்.ஆர்.ரகுநந்தனின் இசை. இரண்டாம் பாதியில் சின்னச் சின்னபாடல்கள் அடிக்கடி வந்தாலும் அனைத்தும் கதையை நகர்த்திச் செல்வதால் அர்த்தமு இனிமையும் கூடி ஒலிக்கின்றன.