சாமானிய மக்கள் மீது வங்கிகள் நடத்தும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த துணிபவனின் போராட்டம்தான் ஹெச்.வினோத் இயக்கியுள்ள அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஒன்லைன்.
சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ‘யுவர் பேங்க்’ என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் அஜித் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே காவல் துறையும், அரசு எந்திரமும் அஜித்தை பிடிக்க அலர்ட்டாக, இறுதியில் காவல் துறை கையில் அஜித் சிக்கினாரா? எதற்காக அவர் வங்கி கொள்ளையடிக்க நினைக்கிறார்? அங்கிருக்கும் பணம் யாருடையது? – இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மெசேஜுடன் கலந்த திரைக்கதையில் சொல்லும் படம்தான் ‘துணிவு’.
படத்தின் முதல் பாதி, அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதில் துப்பாக்கியும் கையுமாக சுற்றும் அஜித், குழந்தை கையில் தீபாவளி துப்பாக்கியை கொடுத்தது போல், பார்க்கும் அனைத்தையும் சுட்டு தள்ளுகிறார். முதல் பாதியின் முதல் 10 நிமிடங்கள், சற்று செயற்கையாக இருக்கிறது. இதை மட்டும் குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். பின், பொறுமையாக மக்களின் கவனத்தை ஈர்க்கிறது துணிவு.
இரண்டாம் பாதி தனியார் வங்கியில் நடக்கும் ஊழலையும், நிதி சார்ந்த குற்றங்களை பற்றியும் பேசியுள்ளது. சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில், பல நுணுக்கமான விஷயங்கள் அமைந்திருக்கும், அதுபோலவே லோன், பங்குசந்தை என்ற பெயரில்
நடக்கும் பெரிய அளவிலான கொள்ளையை பற்றி ஆராய்ச்சி செய்ததுடன், ஏதார்த்தமான சம்பவங்களை சேர்த்துள்ளார் ஹெச்.வினோத். துணிவு படம், வங்கியில் நடக்கும் கொள்ளை பற்றிய படம் அல்ல என்பதையும், அது வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளை என்பதையும் இயக்குநர் ஹெச்.வினோத் விவரித்திருக்கிறார்.
இப்படத்தின் வாயிலாக இயக்குநர் ஹெச்.வினோத் சொல்ல முயன்றிருக்கும் கருத்து முக்கியமானது. இஎம்ஐ முதலானவற்றில் சிக்கித் தவிக்கும் மக்கள், அவர்களை முதலீடாக்கி காசு பார்க்கும் வங்கிகள், இவர்களுக்கிடையிலான மார்க்கெட்டிங் ஊழியர்கள், அவர்களின் டார்கெட் டார்ச்சர் என பணத்தை அச்சாணியாக கொண்டு சுழலும் இந்த ரோலர் கோஸ்ட் பார்வையாக விரிகிறது படம்.‘மனுச ஏன் சுயநலமா இருக்கான். சுயநலமா இருக்கறதால தான் அவன் மனுசனாவே இருக்கான்’ மற்றும் மனிதநேயத்தை உணர்த்தும் வசனங்கள் சில வரிகள் கவனிக்க வைக்கின்றன. வங்கிகள் கையாளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், அதற்கான அவர்களின் எழுத்துரு அளவு, பங்குச்சந்தையை கைகாட்டி நகரும் அலட்சியப்போக்கு உள்ளிட்டவற்றை தோலுரிக்கும் விதமான காட்சி ஒன்று அரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் அதீத ஆக்ஷன் காட்சிகள், தெறிக்கும் தோட்டாக்களுடன் நகர்கிறது. ஆரம்பத்தில் ரசிக்க வைக்கும் அந்த தோட்டாக்களின் சத்தம் ஒரு கட்டத்தில் இரைச்சலாக மாற, விறுவிறுப்பு மட்டுமே மிஞ்சி கதை நகராமல் ஒரே இடத்தில் தேங்கிவிடுகிறது. அதுவரை கட்டி எழுப்பப்பட்ட பில்டப்பிற்கு கதை சொல்லியாக வேண்டிய இரண்டாம் பாதியில் அஜித்துக்கான பின்புலக் கதை படு சுமார் ரகம். அதற்கடுத்து வரும் மற்றொரு பின்புலக் கதையானது, கருத்தை சொல்லியாக வேண்டுமே என செயற்கையாக திணிக்கப்பட்டிருப்பதை போல துருத்தி நிற்கிறது. இரண்டாம் பாதியைப் பார்க்க ரசிகர்களுக்கே ‘துணிவு’ தேவைப்படுகிறது.