திகில் திரைப்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நாயகன் ஜெமினி, கதை எழுதுவதற்காக தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தனது மனைவியுடன் தங்குகிறார். அங்கு நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்களால் கணவன், மனைவி இருவரும் பயந்துபோக, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அவர்களை மிரட்டும் அமானுஷ்யத்தின் பின்னணியும் தான் ‘181’.
‘அகடம்’ என்ற சிங்கிள் ஷாட் படத்தை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இயக்குநர் இசாக், மற்றொரு வித்தியாசமான முயற்சியாக 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி, முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
திகில் படம் என்றாலும் சமூக அக்கறையோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் இசாக், பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் பாதிக்கப்படுவதை சொல்வதோடு, அதற்கான தீர்வையும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெமினி முதல் படம் போல் இல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். திகில் கதை எழுதுபவராக இருந்தாலும், பேய் வந்துவிட்டால் எப்படி பயந்துபோவார்கள் என்பதை தனது நடிப்பில் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.
நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் நாயகி ரீனா கிருஷ்ணன், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் காவியா, பாலியல் துன்பங்களுக்கு ஆளாகும் பெண்களின் மனகுமுறல்களை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியின் தம்பியாக நடித்திருக்கும் விஜய் சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் வேடத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
பிரசாத்தின் ஒளிப்பதிவு திகில் படங்களுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தவையாக இருக்கிறது. ஒரே ஒரு இடத்தில் முழு படத்தையும் படமாக்கியிருந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான கோணத்தை பயன்படுத்து முழு படத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
ஷமீல்.ஜே-இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை மிரட்டலாக இருந்தாலும் அளவாக பயன்படுத்தப்பட்டு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
வழக்கமான பேய் பட பாணியில் கதை நகர்ந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மையக்கருவும், திரைக்கதையும் நிஜத்தில் நடந்த குற்றங்களை நினைவுப்படுத்துவதோடு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும் சுறுக்கமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் இசாக், பேய் வரும் காட்சிகள் மூலம் ரசிகர்களை நடுங்க வைப்பவர், பாலியல் பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள், பயப்படாமல் உண்மைகளை வெளியே சொன்னால் மட்டுமே குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும், என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘181’ பயத்தை தரும் திகில் படமாக மட்டும் இன்றி, பெண்களின் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கும் பாடமாகவும் இருக்கிறது.