ஆறு ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாமல் தவிக்கும் வேல.ராமமூர்த்தி தன் குடும்பத்தோடு பைரவர் கோயிலுக்குப் போகும்போது, சாமியார் ஒருவர் அவருக்குத் தெய்வ அருள் பெற்ற நாய்க் குட்டி ஒன்றைத் தருகிறார். நாயோடு சேர்ந்து வேல.ராமமூர்த்தியின் குடும்பமும் செல்வச் செழிப்போடு வளர, கதாநாயகன் வடிவேலுவும் பிறக்கிறார். திடீரென ஒரு நாள் தெய்வ அருள் பெற்ற நாய் திருடப்படுகிறது.
வடிவேலு முதற்காட்சியிலேயே ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, இட்ஸ் பிரசாந்த் என தன் கூட்டாளிகளுடன் களமிறங்கும் வடிவேலு, ‘இப்ப இவங்கதான் என் ஃப்ரெண்ட்டு; இதான் என் ட்ரெண்ட்டு’ என ஓப்பன் ஸ்டேட்மென்ட்டை வைக்கிறார்.
நாயைக் கடத்தி விதவிதமான மாடுலேஷன்களில் உரிமையாளர்களை மிரட்டுவது, மாட்டிக்கொண்டு முழிப்பது, தப்பிக்க சாக்குப்போக்குகள் சொல்லி அடி வாங்குவது, வில்லன்களிடம் தன்னைத் தானே பில்டப் செய்துகொள்வது, நையாண்டி பாடிலாங்குவேஜ் என அதே பழைய வடிவேலு அப்படியே வந்திருக்கிறார். சில இடங்களில், ரெடின் கிங்ஸ்லியுடன் வடிவேலு சேர்ந்து அடிக்கும் ஒன் லைன் காமெடிகள் கைதட்டல் பெறுகின்றன. ஒரு நாள் ‘நாய் மாற்றி’, தாதாவான ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்துகிறார். வடிவேலுவைக் கொலை செய்யக் கிளம்புகிறார் ஆனந்த்ராஜ். ஆனந்தராஜிடமிருந்து தப்பித்தாரா, திருடப்பட்ட தெய்வ நாய் என்ன ஆனது, அந்த நாயை வடிவேலு மீட்டாரா என்ற கதையைச் சிரிக்கச் சிரிக்க சொல்ல முயன்றிருக்கிறது வடிவேலு – சுராஜ் கூட்டணி.
வடிவேலுவில்லனாக வரும் ஆள் கடத்தல் மன்னன் ஆனந்த் ராஜ், சுமாரான காமெடி காட்சிகளைக்கூட, தன் இயல்பான நடிப்பால் சிரிப்பை வரவைக்கும் ஒன்றாக மாற்றிவிடுகிறார். அந்த வகையில் அவர் விஜய் டிவி ராமர், லொள்ளு சபா சேஷு போன்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளும், வடிவேலுவுடனான காட்சிகளும் படத்திற்குப் பெரும் பலம். ஆனந்த் ராஜை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
வடிவேலுவைச் சந்தேகிக்கும் காட்சிகளில் மட்டும் மற்றொரு வில்லானான ராவ் ரமேஷ் கொஞ்சம் மிரட்டுகிறார். உருக்கமான சில காட்சிகளில், வடிவேலு தன் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். காமெடி ட்ராக்குகளை மட்டும் நம்பியிருக்காமல், இதுபோன்ற காட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்டியிருந்தால், படத்தோடு ஒன்றியிருக்க முடியும்.
ஏற்கெனவே ஹிட்டடித்த ‘டீசன்ட்டான ஆளு’, ‘அப்பத்தா’ என இரு பாடல்களும் ரசிக்கும் ரகம். பின்னணியிலும், சந்தோஷ் நாராயணன் அதிரடி காட்டுகிறார். காமெடி படத்திற்குத் தேவையான ஜாலியான சில செட்டுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன.